சென்னை, நவ.6- தி.மு.க.வின் பவள விழாவையொட்டி தி.மு.க. இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீட்டு விழா, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம், ‘முற்போக்கு புத்தகக் கண்காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் தி.மு.க.-75 அறிவுத் திருவிழாவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை மறுநாள் (8.11.2025) மற்றும் 9-ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (5.11.2025) வழங்கினார். அப்போது தி.மு.க. இளைஞரணி துணைச்செயலாளர்கள் தூத்துக்குடி எஸ்.ஜோயல், இன்பா, ஏ.என்.ரகு, ‘தாட்கோ’ தலைவர் இளையராஜா, அப்துல் மாலிக், நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
