வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,
“கரோனா நோய் உலகத்தை அச்சுறுத்தியது, தற்போது அதிலிருந்து உலகு மீண்டுவிட்டது. இதற்கு இறை வனின் ஆசியும் காரணம்.
ஸ்டாலின் தீபாவளிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஏன் வாழ்த்துக்கூறுவதில்லை. இந்தக் கேள்விக்கு பதில் வாங்காமல் ஓய மாட்டேன்.
தமிழ்நாட்டில் ஆன்மிகம் வீட்டோடு இருக்கட்டும் என்று கூறுகிறார்கள். அப்படி அல்ல ஆன்மிக வழியில் செல்பவர்கள் ஆளும் போது ஆன்மிகத்தோடு கூடிய தமிழ்நாடு தான் வளர்ச்சியைத் தரும்,
கரோனா காலகட்டத்தில், தடுப்பூசி போடு வதற்கு நாங்கள் அவ்வளவு முயற்சி செய்தோம். இன்றைக்கு கரோனா இல்லாத காலமாக உலக சுகாதார மய்யம் அறிவித்திருக்கிறது. இதற்கு ஆன்மிகமும் காரணம்; நமது அறிவியலும் காரணம். தடுப்பூசியும் காரணம்; இறைவனின் ஆசியும் காரணம். இவை இரண்டும் சேர்ந்தால் தான் நமது வாழ்க்கையில் நல்ல சுகத்தை அடைய முடியும்.
யாராக இருந்தாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, ஆளுநரை தேடித் தேடி போய் புகார் கொடுத்தார். அப்படியென்றால், ஆளுநரைத் தேடிப் போயிருக்கவே கூடாதே! ‘எங்களுக்கும் ஆளுநருக்கும் சம்பந்தமே இல்லை’ என்று சொல்லியிருக்க வேண்டும்.”
இப்படியெல்லாம் பேசி இருப்பவர் ஒரு டாக்டர் என்பது நினைவிருக்கட்டும்.
ஒரு டாக்டராக இருக்கக் கூடியவருக்கு விஞ்ஞான மனப்பான்மை இருக்க வேண்டும். இரட்டை வேடம் போடக் கூடாது.
ஒரு காலத்தில் பெரியம்மை என்ற கொடிய தொற்று நோய் மக்களைக் கொன்று குவித்தது. காரணம் மாரியாத்தாள் கோபம் என்று கூறி மாரியம்மன் கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றினார்கள். அம்மை ஒழியவில்லை. எட்வர்ட் ஜென்னர் தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு தானே அது முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
காலரா என்ற தொற்று ஒரு கால கட்டத்தில் மக்கள் உயிரைப் பலி வாங்கியது. விபிரியோ காலரா என்னும் பாக்டீரியாதான் முக்கிய காரணம் என்பது கண்டுபிடித்து காலரா ஒழிக்கப்பட்டது.
ஆனால், காலராவுக்குக் காரணம் காளியாத்தாள் கோபம் என்று கூறி, காளியம்மன் கோயிலுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றினார்களே காலரா ஒழிந்ததா? இல்லையே!
லூயிஸ் பாஸ்டர் என்ற அறிஞரை மானுடம் மறக்க முடியுமா?
ஒரு மருத்துவரான தமிழிசைக்கு இந்தப் பால பாடம் கூடத் தெரியாதது பரிதாபமே!
இறைவனால்தான் கரோனா ஒழிந்தது என்றால் கரோனா தொற்று உருவானதுக்கும் அந்த இறைவன்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? அவனன்றி ஒன்றும் அசையாது என்று தானே இறைவனைப்பற்றி டாக்டர் தமிழிசை போன்ற இறைப் பற்றாளர்கள் கூறுகின்றனர்!
தீபாவளிக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் ஏன் ஸ்டாலின் வாழ்த்துக் கூறவில்லை என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார். பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் என்பதை நம்ப வேண்டுமா? பார்வதி தேவியின் உடல் அழுக்கில் பிறந்தவன் விநாயகன் என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமா?
படிப்பு வேறு – பகுத்தறிவு வேறு என்பதற்கு டாக்டர் தமிழிசை ஒருவர் போதாதா?