இந்நாள் – அந்நாள்

2 Min Read

கா. சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் இன்று (5.11.1888)

கா.சுப்பிரமணிய பிள்ளை  என்ற கா.சு. பிள்ளை திருநெல்வேலியில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த தமிழறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர், வழக்கறிஞர், மற்றும் பேராசிரியர் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.

ஆரம்பக் கல்வி:

திருநெல்வேலியில் திண்ணைப் பள்ளிக்கூடம் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமது கல்வியைத் தொடங்கினார்.

1906 ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணாக்கராகத் தேறினார்.  1908 இல் கலை உறுப்பினர் (Fellow of Arts) தேர்வில் வெற்றி பெற்றதுடன், மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய புலவர் தேர்விலும் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர், இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.  சட்டக் கல்லூரியில் படித்து  பட்டம் பெற்றவர்.   சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அதனால் எம்.எல்.  பிள்ளை என்று அழைக்கப்பட்டவர்.

சில காலம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இரா. நெடுஞ்செழியன்,  க. அன்பழகன் போன்றோர் இவரிடம் மாணவர்களாகப் பயின்றவர்கள்.

1925 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக் கழகத்தில் ‘குற்றங்களின் நெறிமுறைகள்’ என்ற தலைப்பில் பன்னிரு சொற்பொழிவுகள் நிகழ்த்தி, “தாகூர் சட்ட விரிவுரையாளர்” என்ற உயரிய பரிசினைப் பெற்ற ஒரே தமிழர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

கா.சு. பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணி மிக மகத்தானது.

இவருடைய பங்களிப்புகள்

இவர் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூல் இன்றளவும் மிகவும் குறிப்பிடத்தக்க தொரு ஆய்வு நூலாகத் திகழ்கிறது.

இந்நூலில், திருக்குறளின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு என நிறுவியது, தொல்காப்பியப் பாயிரம் கூறும் நான்மறை என்பது ரிக், யசுர் வேதங்கள் அல்ல, தமிழிலேயே நான்கு மறைகள் தோன்றியுள்ளன போன்ற ஆய்வுப் பூர்வமான கருத்துகளைத் துணிச்சலுடன் எடுத்துரைத்துள்ளார்.

மறைமலையடிகள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர்.

 பத்திரிக்கைப் பணி

‘செந்தமிழ்ச் செல்வி’ இதழிலும், திருநெல் வேலியிலிருந்து வெளிவந்த ‘மணிமாலை’ என்ற இதழிலும் தொடர்ந்து தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை எழுதினார்.

சென்னையில் இருந்த காலத்தில், மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவினார்.

தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் ஒரு விளக்கமும் விரிவுரையும், பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் விளக்கமும், தொல்காப்பியம் உரைநடை விளக்கம், சங்கத் தமிழ்க் காட்சிகள் போன்ற தமிழ் இலக்கியப் படைப்புகளும் சட்டத் துறையில் குற்றவியல் வழக்கு விதிகள், விசாரணை மற்றும் சாட்சிக்கான நெறிமுறைகள் ஒப்பந்தம் தொடர்பான சட்ட விதிமுறைகள் போன்ற ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.

கடைசிக் காலத்தில் அவர் வறுமையில் வாடினார் என்பதை அறிந்த தந்தை பெரியார் மாதம் தோறும் ரூ.50 அனுப்பி வைத்தார். (அந்தக் காலத்தில் ரூ.50 என்பது பெரிய ெதாகையே!)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *