சென்னை, நவ.5- தி.மு.க.வில் இணைந்தது ஏன்? என்பது குறித்து மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திராவிடக் கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற தலைவராகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை எங்கும் அடகு வைக்காமல் உரிமைகளுக்காக போராடக் கூடிய தலைவராகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
எனவே தி.மு.க.வில் இணைய வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுத்தேன். அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரும், அதனை வளர்த்த ஜெயலலிதாவும் எந்த சூழ்நிலையிலும் கட்சியை யாரிடமும் அடகு வைக்கவில்லை. ஆனால் இன்றைய அ.தி.மு.க. பா.ஜனதாவின் கிளை கழகம் போல் செயல்படும் நிலையில் உள்ளது.
தொண்டர்கள் உணர்வுகளை கேட்காமல், அ.தி.மு.க.வை கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்திருப்பவர்களோடு எப்படி இருப்பது. தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக பா.ஜனதாவிடம் அ.தி.மு.க.வை அடகு வைத்துள்ளவர்களுடன் இருப்பதை விட திராவிட கொள்கைகளை பாதுகாக்கக் கூடிய ஒரு தலைவருடைய தொண்டனாக பணியாற்ற வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகியது செய்தது குறித்து மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், தொகுதி மக்கள் பிரச்சினை பற்றி அவையில் பேச விடாமல் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலமுறை அந்த வாய்ப்பை தடுத்தார்கள். ஆனால் சட்டப்பேரவை தலைவர் மூலம் பல நேரங்களில் தொகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன்.
ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போடாத மக்கள்கூட, நான் ஏன் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை? என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு எனது தொகுதி மக்களின் கோரிக்கைகளை அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தி.மு.க.வில் சேருவதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் மீது எனக்கு இன்றும் மரியாதை உண்டு. அவரும் நீங்கள் எடுத்துள்ள முடிவின்படி செய்யுங்கள் என்றுதான் கூறினார்.
அ.தி.மு.க. தற்போது, எடப்பாடி அ.தி.மு.க.வாக உள்ளது. இது இப்படித்தான் இருக்கும். இது ஒருங்கிணையாது.
ஆட்சி காலம் முடிவதற்கும், நான் பதவி விலகுவதற்கும் எந்த காரணமும் இல்லை. பதவி விலகலை சட்டத்தின்படி செய்திருக்கிறேன். வரும் தேர்தலில் மீண்டும் ஆலங்குளம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தி.மு.க. தலைமைதான் முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனோஜ் பாண்டியன் 2001-2006ஆம் ஆண்டு வரை சேரன் மகாதேவி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2010 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் நாடாளுமன்ற அ.தி.மு.க. மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
