‘எஸ்.அய்.ஆரை எதிர்த்தால் இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவார்கள்’ என்று அ.தி.மு.க.வுக்கு பயம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

வேலூர், நவ. 5- எஸ்அய்ஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கி விடுவார்கள் என்று அதிமுகவுக்கு பயம் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘இங்கு, மாவட்டச் செயலாளர் பேசுகையில், என்னை கைராசிக்காரர் என்றார். அதில், சின்னத் திருத்தம்… எனக்கு ராசிகளில் நம்பிக்கை இல்லை. அதிலும் கைராசியில் நம்பிக்கை இல்லை. ஆனால் கை மீது நம்பிக்கை இருக்கிறது. அதாவது உங்கள் உழைப்பின் மீது இருக்கிறது. வேறு எந்தக் கையும் இல்லை.

கடந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சவால்கள், துரோகங்களை திமுக சந்தித்துள்ளது. அவை அனைத்தையும் வெற்றி கொண்டு கருப்பு, சிவப்பு கொடி கம்பீரமாகப் பறப்பதற்கு நீங்கள்தான் காரணம். தான் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற ஒரே தலைவர் உலகத்திலேயே கலைஞர் மட்டும் தான். அவரைப் போல் நமது தலைவரும் தான் தலைவராகி சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். அதற்கும் உங்கள் உழைப்புதான் காரணம்.

பிரதமரின் வெறுப்புப் பேச்சு

பிரதமர் மோடி, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் பீகார் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; அங்கே அவர்களை துன்புறுத்துகிறார்கள் என்று பேசுகிறார். தான் இந்திய ஒன்றியத்துக்கே பிரதமர் என்பதை மறந்து மக்களுக்குள், மாநிலங்களுக்குள் சண்டையை மூட்டிவிட முயற்சிக்கிறார்.

இப்படித்தான் ஒடிசா தேர்தலின் போது, கோயில் சாவியை திருடிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னார். பிரதமரின் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். இதற்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இரட்டை இலை சின்னம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் பாஜக-வை ஆதரிப்போம் என்று கூறும் ஒரே இயக்கம் அதிமுக தான். இது தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதை எல்லாம் மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

எஸ்அய்ஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கி விடுவார்கள் என்று அதிமுக-வுக்குப் பயம். பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று, காலில் விழுவது, இன்னொன்று, அடுத்தவர் காலை வாரி விடுவது.

மிழ்நாட்டை காப்பாற்றப் போவதாகச் சொல்லி பஸ்ஸை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோதே சொன்னேன்… போகப்போக ஒவ்வொருவராக இறங்கிவிடுவார்கள். கடைசியில் நீங்களும் டிரைவரும்தான் இருப்பீர்கள் என்று. அதுதான் இன்று நடக்கிறது. ஒரு நாள், பழனிசாமியை நீக்கிவிட்டதாக அவரே அறிக்கை விடுவார்.

அதிமுக-வை கரகாட்டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி. ஆக்சிடென்ட் ஆன கார் மாதிரித்தான் இன்று அதிமுக நிலைமை இருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை எல்லாம் திமுகவின் பி டீம் எனச் சொல்லிவிட்டார் பழனிசாமி. நான் சொல்கிறேன், தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை திமுக-வுக்கு பி டீமும் தேவையில்லை, சி டீமும் தேவையில்லை” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *