சென்னை, நவ. 5- தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொள்குறி வகை (அப்ஜெக்டிவ் டைப்) வினாக்கள் மூலம் மாணவர்களை பயிற்றுவிப்பது கற்றலின் தரத்தை உயர்த்தும் ஒரு பயனுள்ள முறையாகும். இது பாடப்பகுதியை எளிதில் புரிந்துகொள்ளவும், முக்கிய கருத்துகளை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இத்தகைய கேள்விகள் மாணவர்களின் சிந்தனைத் திறன், தீர்மானம் எடுக்கும் திறன் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் திறனையும் வளர்க்கின்றன.
எனவே பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் முதலாம் ஆண்டு முதல் பருவம் மற்றும் 2ஆம் பருவ பாடங்களான தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான கொள்குறி வினாக்களின் தொகுப்பு, வல்லுநர்கள் குழுவைக் கொண்டு தயாரிக்கப்பட்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
