மும்பை, நவ. 5- மகாராட்டிர மாநிலம் மும்பையில் குற்றப் பிரிவு காவல் துறையினர் கடந்த மாதம் 60 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
அவர் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மய்யத்தின் (பார்க்) விஞ்ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து மும்பை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்னன.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மய்யத்தின் விஞ்ஞானி என்று கூறிக் கொண்டு ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த அக்தர் உசைனி என்பவர் செயல்பட்டுள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு முதல் அணு ஆராய்ச்சி தொடர்பான பல ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்றுள்ளார்.
அதன்மூலம் கோடிக் கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார். மேலும், விஞ்ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழுவதும் சென்று வந்துள்ளார். அவரை கடந்த மாதம் மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
அணு ஆயுதம் தொடர்பாக அவரிடம் இருந்து 10 வரைபடங்கள், போலி பாஸ்போர்ட்டுகள், ஆதார். பான் கார்டுகள், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மய்யத்தின் போலியான அடையாள அட்டை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அலிரஸா உசைன், அலெக்சாண்டர் பால்மர் போன்ற பெயர் களிலும் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அக்தர் உசைனிக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் ஆதில் என்பவரை டில்லியில் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அக்தர் மற்றும் ஆதில் ஆகியோர் பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டின் அய்எஸ்அய் உளவு அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அக்தர், ஆதில் ஆகியோரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
