விரைவில் நடைபெறவுள்ள உதவி-ஆய்வாளர், அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக் கான மாதிரி தேர்வுகள் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசு பணிகளுக்கு தயாராவோர் பயன்பெறும் வகையில் தமிழ் நாடு கேரியர் சர்வீசஸ் என்ற பிரத்யேக இணையதளத்தை /www.tamilnaducareerservices.tn.gov.in) இயக்கி வருகிறது.
இதில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், அவற்றுக்கு படிக்க வேண்டிய நூல்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரி வினாத் தாள்கள் மற்றும் பொது அறிவு குறிப்புகள், அன்றாட நிகழ்வுகள் என ஏராளமான பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், தமிழ்நாடு பாடநூல் கழகம், என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இந்த இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, போட்டித் தேர்வுகளை தேர்வர்கள் எளிதாக எதிர் கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாதிரி தேர்வுகளில் தேர்வர்கள் பங்கேற்று தங்களின் தயாரிப்பு நிலையை அறிந்துகொள்ள முடியும். விரைவில் உதவி-ஆய்வாளர் தேர்வு மற்றும் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான மாதிரி தேர்வுகளும், உதவிப் பேராசிரியர் (தமிழ் மற்றும் ஆங்கில பாடம் மட்டும்) மாதிரி தேர்வுகளும் (ஒவ்வொரு பாடத்திட்ட அலகு வாரியாக) இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாதிரி தேர்வில் பங்கேற்போருக்கு அதன் முடிவு தெரிவிக்கப்பட்டு மதிப்பீட்டு அறிக்கையும் உடனடியாக இணையதளத்தில் வழங்கப்படும் என்று மாநில வேலை வழிகாட்டி மய்யத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
