தமது வெற்றி வாய்ப்பு சந்தேகத்தினை உணர்ந்து – தேர்தல் ஆணையத்தையே ஆயுதமாக்கும் நிலையா, பீகாரில்?

5 Min Read

வாக்குகளைப் பறித்தும், பீகார் மாநிலத்திற்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு
பணத்தைப் பெருமளவில் வாரி இறைத்தும், கருத்துக் கணிப்பு என்ற பெயரில்
கருத்துத் திணிப்பையும் செய்து வெற்றி காணப் பார்க்கிறது பி.ஜே.பி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக பி.ஜே.பி., பீகாரில் செய்துவரும் தில்லு முல்லுகளை விளக்கி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

பீகார் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல் 243 தொகுதிகளுக்கானது. இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

நாளை  (6.11.2025) முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான தேர்தலும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கான தேர்தலும் நவம்பர் 11 ஆம் தேதியும் நடைபெற்று, நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாக விருக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்
பீகாரில் பி.ஜே.பி.,க்குக் கிடைத்த இடங்கள் எத்தனை?

ஒன்றியத்தில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, முந்தைய நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘‘மோடி கி சர்க்கார்’’ என்பது போன்ற தீவிரப் பிரச்சாரத்தை – மோடியை முன்னிறுத்தியே மூன்றாவது தடவை ஆட்சியைப் பிடிக்க – அதிதீவிரமாகப் பல்வேறு முயற்சிகளைச் செய்து பார்த்தும்கூட (மோடி தனது பிம்பத்தை இப்படி காட்டியது ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும், கட்சிக்குமே பிடிக்காத ஒன்று என்றாலும், வேறு வழியின்றி மூன்றாம் முறை ஆட்சி வருகிறதே என்பதற்காக அதில் அதிக ஈடுபாடு காட்டாமல், பட்டும் படாமல் வேலை செய்தது) நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அவர்க ளுக்கு அதிர்ச்சியை அளித்தது.

பா.ஜ.க. – மோடி அரசு பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைக்க முடியாத மைனாரிட்டி (ஒன்றிய) அரசாகியது; தேசிய ஜனநாயக முன்னணி (NDA) கூட்டணியில் ஆந்திராவில் அதிக இடங்களைப் பெற்ற சந்திரபாபு (நாயுடு)வின் தெலுங்கு தேசம், பீகாரில் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் என்று இரு கட்சிகளும், மோடி பிரதமர் நாற்காலிக்கு அவ்வப்போது முட்டுக்கொடுத்து காப்பாற்றி வரும் நிலை தொடருகின்றது!

தெலுங்கு தேசம், ஜனதா தளம் தயவில்
ஒன்றிய பி.ஜே.பி. அரசு தள்ளாடுகிறது!

ஆனால், இது எவ்வளவு காலம்? சந்திரபாபு (நாயுடு), நிதிஷ்குமார் ஆதரவு என்பது ஒன்றிய ஆட்சிக் கிரீடத்தின் தலைமேல் தொங்கும் கத்திபோல் அல்லவா இருக்கிறது!

இதனாலேயே இந்த பீகார் தேர்தலில் எப்படியும், எந்த வழிகளிலாவது வெற்றியை பா.ஜ.க. – தேசிய ஜனநாயக முன்னணி (NDA) பெற்றாகவேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். – பிரதமர் மோடிக்கு உண்டாகிவிட்டது!

அதற்குத்தான் கடந்த மூன்று மாதங்களுக்குமேல் பா.ஜ.க. ‘‘பல உத்திகளை’’ வழக்கமாகக் கையாளுவதோடு, வாக்குகளைத் தம் வசப்படுத்தவும், எதிராகப் போடப்படும் என்று யூகிக்கப்படுகின்றவர்களின் வாக்குரிமையைப் பறிக்கவுமான வேலை நடைபெற்றது. பீகார் மாநிலத்திற்கு இதற்குமுன் தராத பணத்தை ஒன்றிய அரசு வாரி இறைத்தும், பெண்களின் ஓட்டை மிக அதிகமாகக் குறி வைத்தும் பல ‘‘சித்து வேலை களுடன்’’ – பிரச்சாரத்திற்கான இறுதி நாள்  வரை, பிரதமர் பிரச்சாரக் களத்தில் இறங்கி நிற்கிறார்!

தமிழ்நாட்டில் பீகாரிகள் தி.மு.கவால் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் பேசுவதா?

பிரதமர் பதவியின் சிறப்பினைக் குறைக்கும் வண்ணம், ‘‘தமிழ்நாட்டில்  பீகார் தொழிலாளர்களை தி.மு.க. மிக இழிவாக நடத்துகிறது’’ என்பது போன்ற உண்மைக்கு மாறான, ஆதாரமற்ற குற்றச்சாற்றினைக் கூறினார்.

நமது, தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ அரசின் முதல மைச்சர், அந்தக் குற்றச்சாற்றினை ஆதாரமற்றது என்று கூறி, அறிக்கைகளால் ‘கிழி கிழியென’க் கிழித்தார். தமிழ்நாட்டுக் கட்சித் தலைவர்கள் பலரும், பிரதமர் மோடியின் தேர்தல் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையம், ‘மவுன சாமியாராக’ இதனை வேடிக்கைப் பார்த்தது! பிரதமரின் இந்தத் தாக்குதல்பற்றி சட்ட நடவடிக்கை ஏதும் இல்லையே!

‘‘இந்தியா கூட்டணியில், பீகாரின்  முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லையே’’ என்று கூறி, ‘பிரித்தாளும் தந்திரத்தை’க் கையாண்டு, காங்கிரஸ் – ஆர்.ஜே.டி – லாலு, அவர்களது கட்சித் தலைவர் தேஜஸ்வி ஆகியோருக்கிடையே ‘‘சிண்டு’’ முடித்தனம் செய்துபார்த்து அதிலும் தோல்வி அடைந்தனர்!

NDA கூட்டணியில், பீகார் முதலமைச்சர் வேட்பாளர், தேர்தல் முடிந்ததும் அறிவிக்கப்படுவார் என்ற அமித்ஷாவின் அரசியல் வியூகமும் அறுபடவேண்டிய பரிதாப நிலை! ‘‘மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆக, தேசிய ஜனநாயகக் கூட்டணி – பா.ஜ.க. விரும்ப வில்லையா?’’ என்று இந்தியா கூட்டணித் தலைவர்கள் கேட்ட கேள்வியால், திக்குமுக்காடி, வேறு வழியின்றி பிரதமர் மோடி அவர்கள், நிதிஷ்குமார்தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறி, தேர்தல் களத்தில் இறங்கிய பரிதாப நிலை!

அதே ‘‘வித்தையை’’, தமிழ்நாட்டில் தி.மு.க.மீது பழி போட்டு, இந்தியா கூட்டணியில் தி.மு.க.வுக்கும் – கூட்டணிக்கும் இடையே பிளவு, பிரிவு உண்டாக்கிட முனைந்தனர்; அது அவர்களுக்கு எதிர்வினையையே ஏற்படுத்தி விட்டது!

பல பீகார் மாநிலத் தொழிலாளர்கள், தங்க ளுக்குத் தரப்படும் சலுகைகளை ஊடகங்களில் வெளிப்படுத்தினர்.

பீகார் தொழிலாளர்கள் வேலை தேடி,
வெளி மாநிலங்களுக்குச் செல்வது ஏன்?

78.54 லட்சம் (மேலும் கூட இருக்கலாம்) புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள், வெளிமாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றால், அதன் பொருள் என்ன?

பீகாரில் வேலை கிடைக்கவில்லை என்பதால்தானே! மனிதநேய  பண்புடன் நடந்துகொள்ளும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வேலை தேடி வருகின்றனர்!

‘‘ஹிந்தித் திணிப்பை ஏற்றால், வடக்கே வேலை கிடைக்கும்’’ என்பதற்கு, தி.மு.க. பதில் கூறியதை, வேண்டுமென்றே திசை திருப்பி, ‘Cut & Paste’ வேலை செய்து, இப்படிப் பேசலாமா, பிரதமர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்?

‘‘20 ஆண்டுகால ஆட்சியின்  நிலை இதுதான். இதை எங்கள் இந்தியா கூட்டணி, மீண்டும் ஆட்சிக்கு வந்து பரிகாரம் தேடிடுவோம்; குடும்பத்தில் ஒருவருக்கு வேலை நிச்சயம்’’ என்று கூறியுள்ளார் தேஜஸ்வி.

ஆர்.ஜே.டி.யின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டு, அம்மாநில மக்கள் வரவேற்பதைக் கண்டு, அமித்ஷா போன்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பா.ஜ.க. ‘‘தனது ரத கஜ துரக பதாதிப்’’ படைகளை இறக்கி, எல்லாவிதமான வித்தைகளையும் செய்து, 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதுட்பட்ட செயல்களுக்குக் கடும் கண்டனங்களையும், உச்சநீதிமன்றத்தின் குட்டுகளையும் வாங்கியுள்ளனர்.

கருத்துக் கணிப்பல்ல – திணிப்பு!

நாளை (6.11.2025)தான் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பே, வேண்டுமென்றே கருத்துக் கணிப்பு (Exit Poll) என்கிற கருத்துத் திணிப்பு.

கடந்த தேர்தலின்போது, தமிழ்நாட்டில் சில போலிகள், கூலிப் பிரச்சாரப் பட்டாளங்கள் இதுபோன்றே செய்து மூக்கறுபட்டனர்!

நேரிய வழியில் வெற்றி பெற வாய்ப்புகள் குறைகிறது என்று உணர்ந்து, தேர்தல் ஆணையத்தையே ஆயுத மாக்கிடும் நிலை உருவாகிவிட்டது போலும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
5.11.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *