தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி கூட்டத்தில்
‘எஸ்.அய்.ஆர். ஆபத்து குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ‘எஸ்.அய்.ஆர். மிகவும் ‘புனித’மானது; இது இந்திய மக்களாட்சிக்கான ஒரு மைல்கல்’ என்று கூறி எதிர்க்கும் அனைத்து அமைப்பிற்கும் ஏட்டிக்குப் போட்டியாக தன்னு டைய பணியை ஆரம்பித்துள்ளார் தேர்தல் ஆணையர்.
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஆபத்து குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்குப் போட்டியாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.
அய்.அய்.டி. கான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ‘‘சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மிகவும் ‘புனித’மானது’’ என்றும், ‘‘இது இந்திய மக்களாட்சிக்கான ஒரு மைல்கல்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘‘இந்த இயக்கம் தற்போது 12 மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களுக்கு நீட்டிக்கப்பட்டால், அது தேர்தல் ஆணையத்திற்கும், நாட்டிற்கும் ஒரு வரலாற்றுச் சாதனையாக அமையும்.
இந்தச் செயல்முறை நாடு முழுவதும் நிறைவடையும்போது, மக்கள் தேர்தல் ஆணையத்தைப் பற்றி மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயக உரிமையைப் பற்றியும் பெருமைப்படுவார்கள்’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அண்மையில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நவம்பர் முதல் பிப்ரவரி வரை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதில், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அடங்கும். இந்த மாநிலங்கள் அனைத்தும் 2026 இல் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
‘பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த இயக்கம் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் எளிமை ஆகியவற்றில் புதிய தரங்களை அமைக்கும்’ என்றும், ‘மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறும்’ என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தைக் காக்கும் முக்கிய அமைப்புகளின் ஒன்றாகும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் குரலை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும்.
ஆனால் தேர்தல் ஆணையரோ சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே, எஸ்.அய்.ஆர். தொடர்பான அறிக்கையை விடுத்து அதற்கு பொய்யான காரணத்தையும் கூறி வருகிறார்.
‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்’ என்ற சொலவடை உண்டு.
ஆனால் ‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் – பீகார் மாநிலத்தில் எப்படி இருந்தது(!)’ என்கிற அபாய அறிவிப்புக்குப் பின் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை அறவே இழந்து விட்டது.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது எத்தகைய அதிர்ச்சியான தகவல்! செத்தவர்கள் வாக்காளர்களாக இருப்பதும், இருப்பவர்கள் இறந்தவர் களாகக் காட்டப்படுவதும்தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையான செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டா?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர திருத்தம் வாக்காளர் பணியைத் தொடர்வது சட்டப்படி சரியானதுதானா?
‘நடந்து முடிந்த பல தேர்தல்களில் பிஜேபி வெற்றி பெற்றதற்குத் தேர்தல் ஆணையம் பின்னணியில் இருந்திருக்கலாம்’ என்ற அய்யப்பாடு மக்கள் மத்தியில் ஏற்படத்தானே செய்யும்!
மிகவும் தாமதமாகத் தான் இந்த உண்மை வெளியில் வந்திருக்கிறது. பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒரு கால கட்டத்தில், இந்தக் கணக்கெடுப்பு என்பது மேலும் அதிக அளவில் அய்யத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு எப்பொழுதும் போல் களத்தில் முதலில் நிற்கிறது; மற்றும் சில மாநிலங்களும் தேர்தல் ஆணையத்தில் செயல்பாட்டினை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டன.
உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்குவதற்கு முன் தேர்தல் ஆணையம், தன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
