‘‘தந்தை பெரியாருக்குத் தியாகிகள் மானியம் கொடுப்பதற்கு, இந்த அரசு
என்ன ஏற்பாடு செய்திருக்கிறது?’’ என்று சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார் முனுஆதி!
‘‘தந்தை பெரியாருக்குத்தான் இந்த அரசே காணிக்கையாக்கப்பட்டு இருக்கிறது’’ என்று பதிலளித்தார் முதலமைச்சர் அண்ணா!
திராவிட இயக்கத்தினுடைய பொன்னேடு இது!
சென்னை, நவ.4- ‘‘தந்தை பெரியார், தியாகம் செய்தி ருக்கிறாரே, அவருக்குத் தியாகிகள் மானியம் கொடுப்ப தற்கு, இந்த அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது?’’ என்று சட்டப்பேரவையில் அய்யா முனுஆதி கேட்டார். முதலமைச்சர் அண்ணா அவர்கள் எழுந்து, ‘‘தந்தை பெரியாருக்குத்தான் இந்த அரசே காணிக்கையாக்கப்பட்டு இருக்கிறது’’ என்று சொன்னார். தன்னால் உருவாக்கப்பட்ட கொள்கைகள், தன்னால் உருவாக்கப்பட்ட தொண்டர், இயக்கத் தோழர்கள் – அவர்கள் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்து, அந்தத் தலைவர் காலத்திலேயே, அவர் வாழும்போதே, ‘‘இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை’’ என்று சொன்னதுபோன்று, உலக வராலற்றில் எங்கேயாவது இருக்கிறதா, என்பதை எண்ணிப்பாருங்கள். திராவிட இயக்கத்தினுடைய பொன்னேடு இது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா!
கடந்த 27.10.2025 அன்று சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள இராஜகோபால் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா – மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
அது முடியுமா? என்று கேட்டார்கள் மற்றவர்கள்.
இன்னமும் நாடாளுமன்றத்தில் வித்தை காட்டு கிறார்கள். மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியதாகச் சொன்னார்களே தவிர, நடைமுறைக்கு அது வரவில்லை.
எப்போது நடைமுறைக்கு வரும்?
ஒரு திரைப்படத்தில் சொன்னதுபோன்று, ‘‘வரும், ஆனால், வராது!’’
இன்றைக்குப் பெரிய அளவிற்கு மகளிருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நகராட்சிகளில், ஊராட்சி களில், மகளிர் போராடாமலேயே கொடுத்த ஆட்சிதான் பாராட்டுதலுக்குரிய ‘திராவிட மாடல்’ ஆட்சி.
இதை வெறும் அலங்காரத்திற்காக நான் சொல்லவில்லை. மகளிர் எல்லாம் பெருமைப்பட வேண்டும். இதில், எங்கள் பங்களிப்பும் உண்டு – ராஜாவுக்குப் பெருமை; எங்கள் பங்களிப்பும் உண்டு – ராஜீவ் காந்திக்குப் பெருமை.
அந்தப் பாதையைப் போடக்கூடிய அளவிற்கு – இவர்கள் எல்லாம் அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள்.
தாய்க்கழகத்தின்மீதும்,
பெரியார் மீதும் பற்றுகொண்டவர்
அய்யா முனுஆதி மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அதேபோன்று, தாய்க்கழ கத்தின்மீதும், பெரியார் மீதும் பற்றுகொண்டவர் அவர்.
அனைத்து அமைப்புகளின் சார்பில் இந்தப் பகுதியில், ஜீவாவிற்குச் சிலை திறக்க முடிவு செய்திருந்தார்கள். அவ்வளவு பேரையும் அழைத்துக்கொண்டு பெரியார் திடலுக்கு வந்தார் அய்யா முனுஆதி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள், புதுவண்ணா ரப்பேட்டை யில் ஜீவாவின் சிலையைத் திறந்து வைத்தார் என்று சொல்லிவிட்டு, தாம்பரத்தில் ஜீவாவிற்கு சிலை திறக்கின்ற வாய்ப்பை எனக்கு அளித்தவர் என்பது மட்டுமல்ல, திராவிடர் கழக மான தாய்க்கழகத்தை அவர் எப்படி மதித்தார் என்பதற்கு அது ஓர் அடையாளம்.
எங்களுடைய நட்பு
கொள்கைப்பூர்வமான நட்பாகும்!
ஆகவே, எங்களுடைய நட்பு என்பது, பாசமுள்ள ஒரு நட்பு; கொள்கைப்பூர்வமான ஒரு நட்பாகும்.
தந்தை பெரியாரை, அடையாளப்படுத்தி, பெருமைப்படுத்திய முதல் ஊர்!
அதுவும், தாம்பரத்திற்கு ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், வரலாற்றில் தாம்பரம் ஒரு மிக முக்கியமான வரலாற்றைப் பெற்றிருக்கின்றது. அதுவும் ஊராட்சியாக இருந்த காலகட்டத்திலேயே பெற்றி ருக்கின்றது.
தந்தை பெரியாரை, அடையாளப்படுத்தி, பெரு மைப்படுத்திய முதல் ஊர் என்று சொன்னால், அது, தந்தை பெரியார் நகரை உருவாக்கிய தாம்பரம்தான்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு – அய்யா முனுஆதி அவர்களுக்கு நூற்றாண்டு – 2025 ஆம் ஆண்டுதான் இரண்டுமே!
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜில்லா போர்டு என்ற அமைப்பு இருந்தது. அந்த அமைப்பின் தலைவர்களாக நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். இது ஒரு வரலாற்றுப் பின்னோக்கிய பார்வை.
திருவொற்றியூர்
டி.எம்.சண்முகம் பிள்ளை
அதில், திருவொற்றியூர் டி.எம்.சண்முகம் பிள்ளை தலைவராக இருந்தார். எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், நான் சிறு வயதில் இருந்தே இயக்கத்தில் இருப்பதால், வயதானவர்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன், அவர்களோடு பழகியி ருக்கின்றேன்.
திருவொற்றியூர் டி.எம்.சண்முகம் பிள்ளை அவர்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே கார் வைத்திருந்தவர். ஜில்லா போர்டு தலைவர் அவர். அவர்தான் தீர்மானத்தை தாம்பரத்தில் பெரியார் நகரை அமைப்பதற்குக் கொண்டு வந்தார்.
‘திராவிட நாடு’ இதழில்…
அண்ணா அவர்களின் ‘திராவிட நாடு’ இதழில், ‘‘தாம்பரத்தில், பெரியார் நகர் உருவாகியிருக்கிறது’’ என்று பெரிய அளவில் செய்தி வெளிவந்தது.
நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் அய்யா முனுஆதி அவர்களுக்கு, திராவிடர் கழகம் நூற்றாண்டு விழா எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தினோம் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது.
‘‘திருச்சிக்குப் போகிறோம்’’ என்றார் அண்ணா!
அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நேரே திருச்சிக்குச் சென்று, தந்தை பெரியாரைப் பார்க்கிறார்.
அண்ணாவுடன், நாவலர், கலைஞர், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் சென்றனர்.
சென்னையிலிருந்து கார் புறப்படுகிறது. அண்ணா அவர்கள் எங்கே போகிறார்? என்று யாருக்கும் தெரியாது.
அண்ணா அவர்கள் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து முதலமைச்சராகப் பதவி ஏற்கவிருக்கிறார். அதற்காக ராஜ்பவனுக்குத்தான் செல்லப் போகிறார். ஆளுநரிடம் பேசிவிட்டுத்தான் வருவார் என்று நினைத்தார்கள்.
கார் ஓட்டுநருக்கும் தெரியாது. அண்ணா பயணித்த கார், ராஜ் பவன் அருகே வந்ததும், கார் ஓட்டுநர், அண்ணாவைத் திரும்பிப் பார்த்தார்.
‘‘நேராகப் போ’’ என்று அண்ணா சொன்னார்.
சரி, காஞ்சிபுரத்திற்குத்தான் அண்ணா போகப் போகி றார் என்று காரை வேகமாகச் செலுத்தினார் கார் ஓட்டுநர்.
காஞ்சிபுரத்திற்கு வந்ததும், நேராகப் போ என்றார் அண்ணா.
கார் ஓட்டுநருக்கு, எங்கே போகப் போகிறோம் என்று தெரியவில்லை.
உடனே அண்ணா அவர்கள், ‘‘திருச்சிக்குப் போகிறோம்’’ என்று சொன்னார்.
திருச்சியில், பெரியார் அவர்கள், அண்ணாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
தான் பெற்ற வெற்றிக்கனியோடு, பெரியார் அவர்க ளைச் சந்தித்தார் அண்ணா.
‘‘மணமகன் போன்று அண்ணா வந்தார்; வரவேற்கும்போது, தலைகுனிந்து மணமகள் போன்று, மணமகனை வரவேற்றார்’’ தந்தை பெரியார்.
‘‘எனக்கு ஆறு கால்கள்’’ என்றார்
தந்தை பெரியார்
உடல்நலக் குறைவு ஏற்படும்போது, உருக்க மாக தந்தை பெரியார் சொல்வார்.
‘‘உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள்; இரண்டு கைகள். ஆனால், எனக்கு ஆறு கால்கள்’’ என்றார்.
எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
‘‘ஆமாம்! என்னால் நடக்க முடியாது; ஆனா லும், தொண்டு செய்யவேண்டும், மக்களைச் சந்திக்கவேண்டும் என்று, யாருடைய தோளி லாவது கைகளைப் போட்டுத்தான் செல்ல முடியும். எனக்கு இடப்பக்கம் ஒருவரும்; வலப்பக்கம் ஒருவரும் என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரவேண்டும். ஆகவே, என்னைத் தாங்கிக் கொண்டு வருபவர்களுக்கு நான்கு கால்கள்; எனக்கு இரண்டு கால்கள். ஆக மொத்தம் ஆறு கால்கள்’’ என்று சொன்னார்.
“அம்மா, அம்மா’’ என்று
வலி தாங்காமல் முனகுவார்
தந்தை பெரியார் அவர்களுக்கு, இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது. வயிற்றில் ஒரு துளை போட்டு, அதில் ஒரு குழாய் பொருத்தி, அந்தக் குழாயின்மூலமாக சிறுநீர் வடியும். அந்தக் குழாயை ஒரு பாட்டிலினுள் வைத்து, அந்தப் பாட்டிலை ஒரு வாளியில் வைத்து, அவரே தூக்கிக் கொண்டு வருவார். அடிக்கடி அந்தக் குழாய் நகர்ந்துவிடும். அப்போது, அய்யா அவர்கள், “அம்மா, அம்மா’’ என்று வலி தாங்காமல் முனகுவார்.
அந்த வலியின் காரணமாக, ஒருமுறை சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெறுகிறார்.
அப்போது, சட்டமன்றம் நடைபெறுகிறது. அதைக் கேள்விப்பட்டு, அய்யா அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்.
தாம்பரம் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருக்கின்ற அய்யா முனுஆதி அவர்கள், சட்டப்பேரவையில் எழுந்து, முதலமைச்சரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.
அய்யா முனுஆதியின் கேள்வியும் – முதலமைச்சர் அண்ணாவின் பதிலும்!
‘‘தந்தை பெரியார், தியாகம் செய்திருக்கிறாரே, அவருக்குத் தியாகிகள் மானியம் கொடுப்பதற்கு, இந்த அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது?’’ என்று கேட்டார்.
முதலமைச்சர் அண்ணா அவர்கள் எழுந்து, ‘‘தந்தை பெரியாருக்குத்தான் இந்த அரசே காணிக்கையாக்கப்பட்டு இருக்கிறது’’ என்று சொன்னார்.
இது ஒரு பெரிய உலக அதிசயம். தன்னால் உரு வாக்கப்பட்ட கொள்கைகள், தன்னால் உருவாக்கப்பட்ட தொண்டர், இயக்கத் தோழர்கள் – அவர்கள் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்து, அந்தத் தலைவர் காலத்திலேயே, அவர் வாழும்போதே, ‘‘இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை’’ என்று சொன்னதுபோன்று, உலக வராலற்றில் எங்கேயாவது இருக்கிறதா, என்பதை எண்ணிப்பாருங்கள்.
திராவிட இயக்கத்தினுடைய பொன்னேடு இது.
சட்டமன்றத்தில் நடந்த இந்தச் செய்தியைக் கேட்டோம். ‘விடுதலை’ ஆசிரியர் என்ற முறையில், சட்டமன்றச் செய்திகளைத் தொகுத்துக் கொடுப்போம்.
சட்டமன்றத்திலிருந்து எங்களுடைய செய்தியாளர் சொல்கிறார், ‘‘முதலமைச்சர் அண்ணா இப்படி பேசியிருக்கிறார்’’ என்று சொன்னார்.
அந்தக் குறிப்புகளை அச்சடித்துக்கொண்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்றேன்.
அய்யா அவர்களே
அதனை விரும்பமாட்டார்!
காலையில் ஒருமுறையும், மாலையில் ஒருமுறையும் மருத்துவமனைக்குச் சென்று அய்யாவைச் சந்திப்போம். இடைப்பட்ட வேளையில் அய்யாவைச் சந்திக்கச் செல்லமாட்டோம். ஏனென்றால், அய்யா அவர்களே அதனை விரும்பமாட்டார். அலுவலகத்திற்குச் சென்று, அலுவலகப் பணிகளைப் பாருங்கள் என்பார்.
இடைப்பட்ட வேளையில் நான் சென்றதும், ஏதோ அவசரமான செய்தியாகத்தான் இருக்கும். அதற்காகத்தான் வந்திருக்கின்றேன் என்று யூகம் செய்து கொண்டு, ‘‘என்னப்பா, என்ன செய்தி?’’ என்றார் அய்யா.
‘‘மகிழ்ச்சியான ஒரு செய்தி அய்யா!’’ என்றேன்.
‘‘என்னப்பா, மகிழ்ச்சி, அந்தச் செய்தியை சொல்லுப்பா?’’ என்றார்.
‘‘மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி’’ என்றார்!
சட்டமன்றத்தில், தாம்பரம் உறுப்பினர் முனுஆதி ‘‘தியாகிகள் மானியம் தந்தை பெரியா ருக்குக் கொடுக்கப்படுமா?’’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள், ‘‘இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்று பதில் சொல்லியிருக்கிறார் என்றேன்.
படுத்துக்கொண்டே இதைக் கேட்ட தந்தை பெரியார் அவர்கள், உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டு, ‘‘மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி’’ என்றார். மணியம்மையாரும் அய்யாவின் பக்கத்தில் இருக்கிறார்.
‘எனக்கு வலி குறைந்தது!’ என்றார்!
‘‘இந்தச் செய்தியை ‘விடுதலை’யில் நல்லா போடுங்கள்’’ என்றார்.
‘‘அய்யா, பெரிதாக இந்தச் செய்தியைப் போட்டி ருக்கிறேன் ’’என்றேன்.
அதுவரை படுத்திருந்த அய்யா அவர்கள் எழுந்து அமர்ந்துகொண்டு, ‘‘எனக்கு வலி குறைந்தது!’’ என்றார்.
இதுபோன்ற வாய்ப்பு – எந்த இயக்கத்திலும் இல்லை. இந்த இயக்கம் ஒரு நூறாண்டு வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் அண்ணா அவர்கள் அப்படி கூறியதற்குக் காரணமானவர் யார்?
அய்யா முனுஆதி அவர்கள்தான். அவருக்குத்தான் அந்தப் பெருமை போய்ச் சேரும்.
பத்திரிகையாளர்களுக்கு ஒரு புத்தி உண்டு. பெட்டிச் செய்தி போடலாமா? என்று நினைப்பார்கள்.
இப்போது ‘பெட்டி’ச் செய்தி என்றால், வேறு அர்த்தம்!
அய்யா, இந்தச் செய்தியைச் சொன்னவுடன், ‘‘நீங்கள் ‘வலி குறைந்தது’ என்று சொன்னீர்கள்; அதை அப்படியே பெட்டிச் செய்தியாகப் போட்டுவிடட்டுமா?’’ என்றேன்.
‘‘தாராளமாகப் போடு! இதைவிட வேறு மகிழ்ச்சி என்ன?’’ என்றார்.
அண்ணா அவர்களுக்கு
அளவு கடந்த பூரிப்பு!
அந்தச் செய்தியை ‘விடுதலை’யில் அச்சிட்டு, சட்டமன்றம் முடிந்து முதலமைச்சர் அண்ணா அவர்கள் வெளியில் வருவதற்கு முன்பு, ‘விடுதலை’ நாளிதழைக் கொண்டு போய்க் கொடுத்தோம்.
அதைப் பார்த்தவுடன், அண்ணா அவர்களுக்கு அளவு கடந்த பூரிப்பு ஏற்பட்டது.
இப்படி ஒரு வரலாற்றுச் சுவடு இருக்கிறதே, அதற்குரிய நாயகர்தான் இந்த நூற்றாண்டு விழா நாயகர் அய்யா முனுஆதி அவர்கள்.
எனவேதான், திராவிடர் கழகம், அவருக்கு நூற்றாண்டு விழாவை எடுக்கவேண்டும் என்று நினைத்தோம்.
அதேபோன்று அய்யா ஜீவா அவர்கள்.
ஜீவா அவர்கள், தாம்பரத்தில் குடியேறினார். மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். பெரியாரால் உரு வாக்கப்பட்ட தலைவர் ஜீவா அவர்கள்.
(தொடரும்)
