தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின் வழக்கை இழுத்தடிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதேன்?
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இவ் வழக்கின் தீர்ப்பை வழங்கிவிடக் கூடாது என்பது ஒன்றிய அரசின் உள்நோக்கமா?
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின், வழக்கை இழுத்தடிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதேன்? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இவ் வழக்கின் தீர்ப்பை வழங்கிவிடக் கூடாது என்பது ஒன்றிய அரசின் உள்நோக்கமா? மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்களுக்கு எத்தனை அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள் – நீதிக்கு இப்படி ஒரு சோதனையா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
டிரிபியூனல்கள் எனப்படும் பல்வேறு தீர்ப்பா யங்களின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அவர்களின் பணி தொடர்பான சீரான நிபந்தனைகளை வகுத்துள்ள 2021-ஆம் ஆண்டின் தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று தொடுக்கப்பட்ட வழக்கினை, உச்சநீதிமன்றம் தற்போது முழுமையாக விசாரித்து முடித்துள்ளது. இந்நிலையில் திடீரென, இந்த வழக்கை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுக்களை விசா ரிக்குமாறு ஒன்றிய அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று (3.11.2025) நிராகரித்துள்ளது.
நீதித் துறையின் அதிகாரத்தில் தலையிடும் வகை யில் அமைந்துள்ள இந்த தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே, அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, இது குறித்து ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் நீக்க ஆணையிட்ட பிரிவுகளை, உரிய விளக்கங்கள் எதுவும் இல்லாமல் மீண்டும் சட்டத்தில் சேர்த்த ஒன்றிய அரசின் செயல் நீதிமன்றத்தின் கண்டனங்களுக்கு உள்ளாகியது. இன்னும் இது போன்ற பிரச்சினைகளுக்காக இவ் வழக்கு நடைபெற்றுவந்தது.
தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருமோ, வராதோ என்ற சந்தேகம் ஒன்றிய அரசுக்கு!
இந் நிலையில் நீண்ட காலமாக நடைபெற்று இவ்வழக்கில், வழக்காடிகளான இரு தரப்பினர் சார்பாகவும், மூத்த வழக்குரைஞர்கள், ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்) உள்பட பலருக்கும் போதிய வாய்ப்புக் கொடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அமர்வு இதனை விசாரித்து, வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் (நவம்பர்) வெளிவரவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருமோ, வராதோ என்ற சந்தேகம் ஒன்றிய அரசுக்கு எழுந்துள்ளது போலும்!
ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞரின் விசித்திர கோரிக்கை!
எனவே, தற்போதைய தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் அமர்வு இவ் வழக்கில் தீர்ப்பு வழங்குவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற நோக்கில், (தலைமை நீதிபதியின் பதவிக் காலம் இம்மாதம் நவம்பர் 23 ஆம் தேதி முடிவடையவிருப்பதால்) நேற்று (3.11.2025) இரவில் ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல், நீதிமன்றத்தின்முன் திடீரென்று ஒரு விசித்திர கோரிக்கையை வைத்துள்ளார்!
வாதங்கள் முடிந்து, தீர்ப்புக்குக் காத்திருக்கும் நிலை யில், மீண்டும் வழக்கை நவம்பர் 23 ஆம் தேதிக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் (வழக்கில் வாய்தா, தள்ளி வைக்க சாக்குப் போக்குகள்) என்ற கோரிக்கையையை எழுப்பியுள்ளது.
இந்தத் தலைமை நீதிபதி இறுதித் தீர்ப்பினை வழங்கக் கூடாது என்பதற்காக, வழக்கினை நீட்டுவதன் மூலம் நீதியை வளைக்கும் பெருமுயற்சியை, இப்படிப்பட்ட சூழ்ச்சியை – ஓர் உத்தியாகவே ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – மோடி தலைமையிலான அரசு இறங்கியிருப்பது, ஏற்கத்தக்கதா? சட்டத்திற்கு உகந்ததா?
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் வேதனை!
இதை நன்கு புரிந்துகொண்ட தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் அவர்கள் ஒன்றிய அரசைக் கண்டித்து, “தீர்ப்புக்குத் தயாராக உள்ள நிலையில், இப்படி மீண்டும் வாதங்களைத் தொடரக் கேட்பதா?” என்று வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளதை உலகம் பார்த்துக்கொண்டுதான் உள்ளது!
இங்கே நீதியையே ‘கேலிக் கூத்தாக்க’ இப்ப டிப்பட்ட முயற்சிகள் – தங்கள் விருப்பத்திற்கேற்ப உச்சநீதிமன்றமும், அதன் நீதிபதிகளும் வளைய வேண்டும் என்று ஒன்றிய அரசு கருதுவதாக எழும் சந்தேகம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதுபோல் இல்லையா?
வேதனை, வேதனை, வெட்கம்!
திட்டமிட்டுத் தான் அவமானப்படுத்தப்படுவதையும், தொடர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதையும் ஒவ்வொரு முறையும் சகித்துக் கொண்டுதான் இருக்கி றார் தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்கள்.
‘‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை’’ (குறள் 151)
என்று ஏற்று, தனது கடமையை வழுவாமல், நழுவாமல் செய்து வருகிறார் – நீதித்துறையின் மாண்பு களைப் பாதுகாக்கிறார்!
‘நள்ளிரவில் வந்த சுதந்திரம்’ – இப்படி நள்ளிரவில் நீதியை மாற்ற பல ‘அஸ்திரங்களை’ ஏவுவது நியாயமா?
அந்தோ, ‘பாரத’ ஜனநாயகமே!
நீதிக்கு இப்படி ஒரு சோதனையா?
வேதனை, வேதனை, வெட்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.11.2025
