பெரியார் என்ற எரிமலையை யாராலும் அணைத்து அழிக்க முடியாது என்று உணர்ச்சி பெருக்குடன் கழகப் பொதுக் குழுவில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள், பெரியாருக்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா? அழிந்துவிடும் என்று பார்ப்பனியம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தது. இயக்கம் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு இன்றும் இந்த இயக்கம் எப்படி உறுதியுடன் செயல்படுகிறது என்பதை அனைவருக்கும் காட்டக்கூடிய வகையில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் நூற்றாண்டு கண்ட 102 வயதை எட்டிய பொத்தனூர் க. சண்முகம் அவர் களையும், அவருடன் பெரியார் பிஞ்சுகள் அகிலன்(வயது 10), பொன் சாரா(வயது 11), பொன்எழில் (வயது 9) ஆகியோரை மேடையில் நிறுத்தி இதுதான் செயல்முறை விளக்கம் என்றும், எங்கள் இயக்கத்தின் சிறப்பு என்பது எங்களின் வேரும் வலுவாக இருக்கிறது, விழுதுகளும் சிறப்பாக இருக்கிறது என்ற ஆசிரியரின் வாத்தைகளை கேட்டு அரங்கமே கரஒலியின் மூலம் மகிழ்ச்சி பெருக்கில் நிரம்பியிருந்தது. மேலும், எங்கள் இயக்கம் பழமையான இயக்கம் அல்ல இளமையான இயக்கம். எங்களுக்கு தான் வயதாகிறதே ஒழிய, கொள்கைக்கு ஒருபோதும் வயதாகாது என்றார். இது இளமையான கொள்கை என்பதை பெரியாரின் கொள்கையால் வீறு நடை போடும் 90 வயது இளைஞர் சொல்வது உள்ள படியே வயதில் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு எத்தனை பெரிய நெஞ்சுரத்தை, ஊக்கத்தை தந்தது என்பதை சொற்களால் விவரிக்க இயலாது.
– ஈரோடு பொதுக் குழு மேடையில் காணற்கரிய எழுச்சியின் காட்சி.