புதுச்சேரி, நவ. 04- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ரத்து செய்யக் கோரி, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேற்று (நவம்பர் 3, 2025) மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.) சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.எம்.) ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தேவபொழிலன் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி நிர்வாகிகள், தலைமை தேர்தல் அதிகாரி ஜவகரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
2002ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் பயன்பாடு
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், 2002ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை ஆவணமாகப் பயன்படுத்துவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளி மாநில மாற்றம் குறித்த விதி: இடம் மாறுதல் குறித்த படிவமாகிய நான்காம் இணைப்பில் ‘வெளி மாநிலத்திலிருந்து மாற்றம்’ என்று இருப்பது, சட்டவிரோத ஓட்டுத் திருட்டுக்கு வழிவகை செய்யும். கால அவகாசமின்மை: நேர்மையான தேர்தலுக்கு உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை கூட்டணி மறுக்கவில்லை. ஆனால், அதற்குரிய கால அவகாசம் வழங்காமல், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அவசரகதியில் திருத்தப் பணிகளைச் செய்ய நினைப்பது, உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகவே தோன்றுகிறது.
கோரிக்கை: தற்போது முன்மொழியப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிட வேண்டும். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் (2024) பின்பற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலையே அனைத்து நடைமுறைகளுக்கும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
