சென்னை, நவ.4- 300 அரசு பள்ளிகளில் குளிர் கூரை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்பறையில் வெப்பம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
குளிர் கூரை தொழில்நுட்பம்
நகர்ப்புற வெப்பக்குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, அய்க்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்துடன் இணைந்து குளிர் கூரை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, கட்டடத்தின் மேற்கூரை மீது உயர் சூரிய பிரதிபலிப்பான (எஸ்.ஆர்.அய்.) “சில்கா குளிர்கூரை வண்ணப்பூச்சை” பயன்படுத்தினர். இதனை குளிர் கூரை தொழில்நுட்பம் என்றும் கூறுகின்றனர்.
முதல்கட்டமாக சென்னை பேரம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் பயன்படுத்தியதில் திருப்திகரமான நல்ல ‘முடிவு’ கிடைத்தது.
இந்தநிலையில் அதே நடைமுறையை சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தின் மீது அதாவது, சுமார் 3,206 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டிட கூரைப்பகுதியில் இந்த வண்ணப்பூச்சுகளை பூசியது.
300 அரசு பள்ளிகளில்…
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, அய்க்கிய நாடுகளின் சுற்றுச்சூழல்திட்டத்துடன் இணைந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
இதன் மூலம் கட்டட கூரையின் மேற்பரப்பு 5 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. மேலும் கட்டடத்தின் வகுப்பறை உட்புற வெப்பநிலையும் 1.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாணவர்களின் ஆரோக்கியத்தையும், கற்றல் செயல்பாடுகளையும் நேரடியாக மேம்படுத்தும் என சுற்றுச்சூழல்துறை தெரி வித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பசுமைப் பள்ளி முன்முயற்சியின் கீழ் மேலும் 300 பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, காலநிலை எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியமான வகுப்பறை கற்றல் சூழலை மேம்படுத்தவும் சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டிருக்கிறது.
