‘‘நந்தியே சற்று விலகியிரு’’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘‘நந்தனாரே, உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை!
நந்தனாரை உள்ளே அழைக்கின்ற கூட்டணிதான் ‘இந்தியா’ கூட்டணி; எல்லோரையும் ஒரே இடத்திற்கு வாருங்கள் என்பதுதான் இந்தக் கூட்டணி!
சிதம்பரம், நவ.9 இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அரசமைப்புச் சட்டமே தேவையில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பதில் மனுதர்மமே இந்திய அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்றார்கள். ‘‘நந்தியே சற்று விலகியிரு’’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘‘நந்தனாரே, உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை. நந்தனாரை உள்ளே அழைக்கின்ற கூட்டணிதான் இந்தக் கூட்டணி. அவர்கள் எல்லோரையும் ஒரே இடத் திற்கு வாருங்கள் என்று சொல்வதுதான் இந்தக் கூட்டணி. அதற்காகத்தான் புதிய ‘இந்தியா’ கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஒரே கொள்கை, ஒரே அணி,
ஒரே ஒருங்கிணைப்பு!
யார் பேசினாலும் ஒரே கருத்தைத்தான் பேசப் போகிறோம்; ஒரே கொள்கை, ஒரே அணி, ஒரே ஒருங்கிணைப்பு என்கிற நிலையில் ஏன் நமக்காக அவர் தேதியை மாற்றவேண்டும் என்று நினைத்தேன்.
தொடர் பரப்புரை பயணத்தின் நிறைவு நாள் கூட்டத்தை நேற்று (5.11.2023) மதுரையில் முடித்தோம்.
உங்களையெல்லாம்
சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன்!
அடுத்த நாள் சென்னைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யலாம் என்று நினைத்துக் கொண் டிருந்தேன். இருந்தாலும், 6 ஆம் தேதி கருத்தரங்கத்தை வைத்துக் கொள்ளுங்கள், பங்கேற்கிறேன் என்று சொன் னேன். உடனே சிறப்பாக இந்தக் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன்.
சிறிய புத்தகங்கள் வெளியிட்டு மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கின்றோம்!
முதலில் அய்தராபாத்தில் முடிவு செய்து – சென்னையில் கருத்தரங்கம் நடத்தி – இன்றைக்கு ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். அதேபோன்று ‘‘விஸ்வகர்மா யோஜனா” என்றால் என்ன? என்பதைப்பற்றியும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கருத்து மக்களுக்குத் தெளிவாகப் புரியவேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்கள், இப்பொழுது இருப்பதிலேயே ‘இந்தியா’ என்பதற்கே நம்பிக்கை நட்சத்திரம் அவர்தான் – மீண்டும் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கக் கூடியவர். நல்ல அளவிற்குக் கொள்கை திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
சமூகநீதிக் கொடி இன்றைக்குத்
தலைதாழாது பறக்கிறது!
இங்கே முனைவர் துரை.சந்திரசேகரன் சொன் னார் அல்லவா – தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு எதற்காக காஞ்சிபுரத்திலிருந்து காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ – இன்றைக்கு எல்லோரும் சேர்ந்து அந்த வழியில் மாறுபாடு கிடையாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சமூகநீதிக் கொடி இன்றைக்குத் தலைதாழாது பறக்கிறது என்றால், அந்தக் கொடி அன்றைக்கு சமூக அநீதியாக இருந்தது.
அதைத்தான் அழகாக சொன்னார், சமூகநீதி எங்களை இணைக்கிறது.
சமூகநீதி என்ற வார்த்தையே எப்பொழுது தேவை? சமூக அநீதி இருக்கும்பொழுது, ‘‘எங்களுக்கு நீதி வேண்டும்; எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கேட்டதுதான் நீதிக்கட்சி.
எனவே, நீதி வேண்டும் என்று எப்பொழுது கேட் போம்?
நீதி மறுக்கப்படுகிறபொழுதுதான் நீதி வேண்டும் என்று கேட்போம்.
நம்முடைய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், ஆயிரம் இளைஞர்களுக்கிடையே அவர் இருந்து கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய மான பகுதிகளை அவர் தத்துவத்தை சமரசம் செய்து கொள்ளாமல் நிறைவேற்றம் செய்தார்கள். அப்படி செய் கிறபொழுது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், இரண்டு வார்த்தைகள். மிகவும் கஷ்டப்பட்டு நுழைத்திருக்கிறார்கள்.
உலகத்திலுள்ள எந்த அரசமைப்புச் சட்டத்திலும் இல்லாத கூறுபாடு!
ஏனென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்பொழுது ஆறு பேர் அந்தக் குழுவில் இருந்தார்கள்.
ஒருவர் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த சகோதரர். இன்னொருவர் பாபா சாகேப் அம்பேத்கர். மீதமுள்ள நான்கு பேரும் உயர்ஜாதிக்காரர்கள் – பார்ப்பனர்கள்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களோ, மற்றவர்களோ அந்தக் குழுவில் இல்லை.
இவ்வளவு நெருக்கடியில் அம்பேத்கர் அவர்கள், சர்க்கசில் உயிரைப் பொருட்படுத்தாமல் கூண்டிற்குள் வண்டியை ஓட்டுவார்கள் அல்லவா – அதுபோல அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அறிவு, ஞானத்தை வைத்துக்கொண்டு செய்தார்.
அப்பொழுது அவர் உருவாக்கிய இரண்டு சொற்கள் – உலகத்திலுள்ள எந்த அரசமைப்புச் சட்டத்திலும் இல்லாத கூறுபாடுகளாகும்.
அது என்னவென்றால்,
சமூக அநீதி – ஒடுக்கப்பட்ட மக்களையெல்லாம் சமூகஅநீதியிலிருந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் சுரண்டப்பட் டார்கள். அந்த சுரண்டலிலிருந்து தப்பிப்பதற்காகத்தான், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே, Justice Social, Economic and Political என்று ஆரம்பித்தார்கள்.
ஆகவே, சமூக அநீதி – அதிலிருந்து விடுபடுவதற்காக சமூகநீதி. அந்த சமூகநீதியை எப்படி அடைவது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம்!
நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும் – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதியைப்பற்றி இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்லி, புரிய வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அர சமைப்புச் சட்டத்தில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இம்மூன்று தத்துவங்களையும் முகப்புரையில் போட்டுவிட்டார்.
இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. – அந்த அமைப்பிற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்கிற காவிக் கட்சி, அரசியல் கட்சி – அடிப்படையில் அது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அரசியல் பிரிவு.
அவர்கள் பல பிரிவுகளை வைத்திருக்கிறார்கள்; மதச் சண்டையை உருவாக்குவதற்காக – இருப்பதையெல்லாம் இடிக்கவேண்டியதற்கான பிரிவுகளையெல்லாம் வைத் திருக்கிறார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எழுதியது ‘ஆர்கனைசர்’
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் பொழுது, ஆர்.எஸ்.எஸினுடைய பத்திரிகை – எப்படி திராவிடர் கழகம் ‘விடுதலை’ என்கிற பத்திரிகையை நடத்துகிறது; அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘தீக்கதிர்’, ‘ஜனசக்தி’ ஆகிய பத்திரிகைகளை நடத் துவதுபோன்று – ஆர்.எஸ்.எஸினுடைய பத்திரிகை ‘ஆர்கனைசர்’ என்பதாகும்.
அந்தப் பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என் றால், ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அரசமைப்புச் சட்டமே தேவையில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று எழுதினார்கள்.
இந்தப் பின்னணி தெரிந்தால்தான், நாம் போராட முடியும். போராடி வெற்றி பெறவேண்டியதற்கு இது மிக முக்கியத் தேவையாகும்.
மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வரவேண்டுமாம்
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் என்ன வரவேண்டும்? மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்றனர்.
மனுதர்மம் என்றால் என்ன?
ஜாதி எப்படி உருவானது என்று சொன்னால், இவ் வளவு காலம் நாம் ஜாதியில் உழலவேண்டிய அவசியம் என்ன? ஏன் நந்தனார் தீயில் இறங்கி வரவேண்டும்?
நந்தனார் என்பவர் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரராம், தீண்டாதவராம். அதனால் அவர், நடராஜரைப் பார்க்கக் கூடாதாம்.
நந்தனார், நெருப்பில் குளித்து
வெளியே வந்தாராம்!
நந்தனார் கதையில் எழுதி வைத்துள்ளார்கள், அந்தக் காலத்திலும் மிராசுதாரர் கொடுமைகள் இருந்திருக் கின்றன. அந்த மிராசுதாரர், ஆயிரம் கலம் பயிர் வரவேண்டும் என்று நந்தனராரிடம் சொன்னாராம்.
உடனே நந்தனார் வேண்டிக்கொண்டாராம், கட்டுக் கலம் காணும்; கதிர் உழக்கு நெல் காணும் (முக்கலம்) என்று.
அவ்வளவு சக்தி வாய்ந்த நந்தனாரை, நடராஜரைப் பார்க்க விடவில்லையாம்.
அதற்காக நந்தனார், நெருப்பில் குளித்து வெளியே வந்தார் என்று அந்தக் கதையில் எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு நடராஜரை அவர் தரிசித்தாராம்.
நந்தனார் எந்த அடிப்படையில் நெருப்பில் குளித் தார்? தீண்டத்தகாதவர் நேரே சென்று நடராஜரைப் பார்க்க முடியாது. சரி, அப்படியாவது நடராஜரை கட்டி பிடித்தாரா நந்தனார் என்றால், கிடையாது.
நந்தனாரை உள்ளே அழைக்கின்ற கூட்டணிதான் ‘இந்தியா’ கூட்டணி!
நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் பல மேடைகளில் அழகாக சொல்லுவார்; ‘‘நந்தியே சற்று விலகியிரு” என்றுதான் சொன்னாரே தவிர, ‘‘நந்தனாரே, உள்ளே வா” என்று கூப்பிடவில்லை. நந்தனாரை உள்ளே அழைக்கின்ற கூட்டணிதான் இந்தக் கூட்டணி. அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்திற்கு வாருங்கள் என்று சொல்வதுதான் இந்தக் கூட்டணி. அதற்காகத்தான் புதிய இந்தியா கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், மனுதர்மத்தில்தானே ஜாதியை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளாக நம்முடைய உயிரை வாங்கிக் கொண் டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட சமூகத்தினரை – எட்டி நில்! தொடாதே! பார்க் காதே! படிக்காதே! என்று சொல்லி, பெண்களை கொச் சைப்படுத்தி இருக்கிறார்கள்.
கடவுளின் முகத்தில் பிறந்த ஜாதி –
தோளில் பிறந்த ஜாதி –
தொடையில் பிறந்த ஜாதி –
காலில் பிறந்த ஜாதி-
அதற்கும் கீழே அய்ந்தாவது ஜாதி –
அதற்கும்கீழே எல்லா ஜாதியைச் சார்ந்த, உயர் ஜாதியைச் சேர்ந்த பெண்கள்.
‘‘படிக்கட்டு ஜாதி முறை’’ என்றார்
அண்ணல் அம்பேத்கர்!
இந்த பேதத்தை ஒரே வரியில் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘படிக்கட்டு ஜாதி முறை” என்று.
உயர்ஜாதிக்காரர்கள் படிக்கவேண்டும்; ஒடுக்கப்பட்ட ஜாதிக்காரர்கள் படிக்கக் கூடாது. அவர்களுக்குப் படிக்க உரிமை கிடையாது. அப்படியே தப்பித்தவறி படித்தாலும், உங்களுக்கு உத்தியோகம் பார்க்கக் கூடிய உரிமை கிடையாது. தகுதி இல்லை; திறமை இல்லை என்று சொன்னார்கள்.
அதற்கான பதில்தான் சமூகநீதி!
நாம் யாருக்கும் சங்கடத்தை உருவாக்கவில்லை. யாருடைய உரிமைகளையும் நாம் பறிக்கச் சொல்லி கேட்கவில்லை. நம்முடைய உரிமையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சமூகநீதிக்கு என்ன விளக்கம் என்று இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அருமையாக இரண்டு அறிவிப்புகளைக் கொடுத்தார்.
அதனை இங்கே அருமைச்சகோதரர் சிந்தனைச் செல்வன் சொன்னார்.
சமத்துவம்- சமூகநீதிக்கு
எதிரானது மனுதர்மம்!
ஒன்று, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 – சமூகநீதி நாள்.
இன்னொன்று – புரட்சியாளர் டாக்டர் அம்பேத் கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் 14 – சமத்துவ நாள்.
சமத்துவம் – சமூகநீதி; இந்த இரண்டிற்காகத்தான் இப்பொழுது போராட்டமே!
மேற்கண்ட இரண்டிற்கும் எதிரானது எது வென்றால், மனுதர்மம்.
அந்த மனுதர்மம்தான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்.
எனவே, நாம் என்ன சொல்கிறோம் என்றால் நண்பர்களே, நாம் தனிப்பட்ட நபர்களை வெறுக்கவில்லை. அவர்களுடைய தத்துவங்களை நாம் நொறுக்கவேண்டும் என்று சொல்கிறோம்.
நம்முடைய காலைப் பிடித்து, நம்மை முன்னேற விடாமல், நம்முடைய அறிவுக்குச் சங்கிலி போட்டு, நம்முடைய படிப்பிற்குத் தடை போட்டார்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பைப்பற்றி சொல்லுவதற்கு முன், இதுதான் மிகவும் முக்கியம்.
முகத்தில் பிறந்தவர்களான உயர்ஜாதிக்காரர்கள்தான் படிக்கவேண்டும் என்று சொன்னார்கள். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர். அந்தக் காலத்திலேயே லண்டனுக்குச் சென்று படித்து வந்தவர். அவர் கேட்டார், ‘‘நான் இதுவரையில் எத்தனையோ பிரசவம் பார்த்திருக்கிறேன். ஆனால், முகத்தில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று சொல்லுகிறார்கள்; அதைத் தேடித்தான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட கொடுமைகள் இருந்தன. அவர்கள் பேதத்தை உண்டாக்கியது மட்டுமல்ல – உயர்ஜாதிப் பெண்கள் உள்பட அவர்கள் எந்தக் காலத்திலும் விடுத லையைப் பெற்றுவிடக் கூடாது என்று நினைத்தார்கள்.
இந்தக் கூட்டத்திற்கு நிறைய சகோதரிகள் வந்து இருக்கின்றனர். இன்றைக்குக் காங்கிரசில் இளைஞர்கள், சகேதாரிகள், இளைய ரத்தங்கள் நிறைய வருகின்றன. இதெல்லாம் இன்றைக்கு மிகவும் தேவை.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழலில், மனுதர்மத்தில் அடுத்தது என்ன எழுதி வைத்திருக் கிறார்கள் தெரியுமா?
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு,
நெருங்கினால் தீட்டு!
கீழ்ஜாதிக்காரர்களாக நம்மை ஆக்கியதோடு மட்டுமல்லாமல் – தொடக்கூடாத ஜாதி, பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நெருங்கினால் தீட்டு.
இதற்கு என்ன அர்த்தம்?
(தொடரும்)