காபூல், நவ. 3- ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மசிர் ஐ ஷெரிப் நகரை மய்யமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் காயமடைந்தகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஒட்டி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் பலத்த மழை
நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி
ஆயிரம் வீடுகள் தரைமட்டம்!
நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி
ஆயிரம் வீடுகள் தரைமட்டம்!
நைரோபி, நவ. 3- கென்யாவின் பல்வேறுப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதுடன், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, மலைப்பாங்கான மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது.
இந்நிலையில், நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள எல்கேயோ மரக்வெட் மாகாணத்தின் செசோங்கோச் என்ற மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கோர நிலச்சரிவு ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாகின. சாலைகள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கோரச் சம்பவத்தில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
படுகாயமடைந்த 25 பேர், ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
மெக்சிகோவில் பல்பொருள் அங்காடியில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு!
ஹெர்மோசில்லோ, நவ. 3- மெக்சிகோவில் பலபொருள் அங்காடியில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வட அமெரிக்காவின் மெக்சிகோவில் சோனோரா மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ நகரில் உள்ள வால்டோ கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சோனோரா ஆளுநர் அல்போன்சோ துராசோ சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சோனோரா ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு ஆதரவு குழுவை அனுப்புமாறு உள்துறைச் செயலாளருக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் ஏற்பட்ட நச்சு வாயுக்களை சுவாசிப்பதால் இறப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
‘ஏ.அய்.’யால் வந்தது சோதனை
ஒரு லட்சம் பேர் பணி நீக்கம்!
வாசிங்டன், நவ. 3- அமேசான், இன்டெல், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தாண்டு 1,12,000 பணியாளர்களை நீக்கியுள்ளது. அமேசான் நிறுவனம் 30000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஏஅய் தொழில்நுட்பம் காரணமாக இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்பட 218 நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக தன்னுரிமை கண்காணிப்பு தளமான லே ஆப்ஸ்.எப்ஒய்அய் தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது. தற்போது 30 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இன்டெல் நிறுவனம் இந்தாண்டு 24,000 பணியாளர்களை குறைக்க உள்ளது. இதன் மூலம் அதன் பணியாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 75,000 குறையும். டிசிஎஸ் நிறுவனம் இந்தாண்டு 20,000 பணியிடங்களை குறைக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் 9000 ஊழியர்களை குறைத்துள்ளது.
