தமிழ்நாடு காவல்துறையில்
59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் 59 டிஎஸ்பி-க்களை (காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும்,பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 59 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (பொ) ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார் இதில் திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி எஸ்.சுரேஷ் சண்முகம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கும், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி, சிவகங்கை மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்துக்கும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி கே.எம். மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மனித உரிமைப் பிரிவுக்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.சுகுமார் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 59 டிஎஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இரண்டு நிமிடத்தில்
இதய அடைப்பை அறிய புதிய வசதி
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
சென்னை, நவ.3 வெறும் 500 ரூபாய் செலுத்தினால், இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள சி.டி. கால்சியம் ஸ்கோரிங் (CT Calcium Scoring) என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதய அடைப்பு
இந்த பரிசோதனை மூலம் ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து எங்கு அடைப்பு இருக்கிறது, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை துல்லியமாக அறிய முடியும்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த சி.டி. கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனை வெறும் 500 ரூபாயில் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை இந்த பரிசோதனைக்கு செலவாகும் . எனவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயர் தரமான பரிசோதனையைச் செய்ய முடியும். அதேபோல் மிகக் குறுகிய காலத்தில் (2 நிமிடங்களில்) பரிசோதனை முடிந்துவிடுவதால், சிகிச்சை அளிக்கும் பணி வேகமாகத் தொடங்க முடியும். பொதுவாக 40 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள். உயர் இரத்த அழுத்தம்(பிபி) உள்ளவர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைகிளிசரைடு அளவு உள்ளவர்கள் செய்ய வேண்டும். புகைபிடிப்பவர்கள் அல்லது புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் மற்றும் குடும்பத்தில் மாரடைப்பு வரலாறு (சிறு வயதிலேயே பெற்றோருக்கு மாரடைப்பு) உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் எடை அல்லது போதிய உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் செய்ய வேண்டும்.
