திருமுல்லைவாயல், நவ.3- சென்னை மாநகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சுமதி. இவர், 2003-ஆம் ஆண்டு காவல்துறை வேலையில் சேர்ந்தார். தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 11-9-2025 அன்று கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சுமதி விபத்தில் சிக்கி பலியானார்.
இதையடுத்து 2003-ஆம் ஆண்டு அவருடன் காவல்துறை வேலையில் சேர்ந்த பெண் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமதியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்தனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஏட்டு என சுமார் 1,354 பெண் காவலர்கள் வாட்ஸ் அப்’ குழு அமைத்து ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 500 வசூல் செய்தனர்.
அதில் ரூ.9 லட்சத்தை சுமதியின் குழந்தைகள் பெயரில் 10 ஆண்டுகளுக்கு கிசான் விகாஸ் பத்ரா என்ற அஞ்சலக வைப்புத் தொகையாக செலுத்தினர். மீத தொகையை அவரது குடும்ப செலவுக்கு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று (2.11.2025) திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2003-இல் வேலைக்கு சேர்ந்த பெண் தலைமை காவலர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தாங்கள் வசூல் செய்த பணத்துக்கான ஆவணங்களை உயிரிழந்த பெண் காவலர் சுமதியின் குடும்பத்தினரிடம் வழங்கினர். பெண் காவலர்களின் இந்த மனிதநேய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
