சென்னை நவ.3- மெட்ரோ ரயில் திட்டத்தின் 4ஆவது வழித்தடத்தில், போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமானப் பணிகளில் ஒரு மைல்கல்லாக, இரட்டை அடுக்கு பிரிவுக்கான கடைசி ‘யு’ வடிவ கார்டர் (UGirder) அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது:
இந்தப் பாதையின் கட்டுமானத்திற்குத் தேவையான பாலத்தின் பாகங்கள், தூண்களின் மேல் பாகங்கள் உட்பட 25 வெவ்வேறு வகையான 3,410 காங்கிரீட் கட்டமைப்புகள், வயலாநல்லூர் வார்ப்பு நிலையத்தில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
இந்த வார்ப்பு நிலையத்தின் பணிகள் முழுமையாக வெற்றிபெற்று நிறைவடைந்துள்ளன.
முக்கிய அம்சங்கள்
வழித்தடம் 4இல் மொத்தம் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 8 கி.மீ. தொலைவுக்கான மேம்பாலப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடங்கிய 4 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு மேம்பாலப் பகுதியும் அடங்கும். இந்த இரட்டை அடுக்கு பகுதிக்கான கடைசி ‘யு’ வடிவ கார்டர் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்தப் பிரிவில், சுமார் 1.22 லட்சம் கன மீட்டர் கான்கிரீட் மற்றும் 18,470 மெட்ரிக் டன் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 2.42 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள பிரீகாஸ்ட் கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
