1.11.2025 அன்று மாலையில் சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் பிரபல எழுத்தாளரும் சிறந்த சிந்தனையாளருமான மூ. அப்பணசாமி அவர்களது, கட்டுரைத் தொகுப்பான, ‘அகஸ்தியர் எனும் புரளி’ என்ற ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டோம். விழாவில், வரவேற்புரை ஆற்றிய திரு ஏ. சண்முகானந்தம் அவர்களது நூல் கொத்து (உயிர் பதிப்பக வெளியீடுகள்) ஒன்றை அறிவுப் பூங்கொத்தாக எனக்கு வழங்கினார்கள்.
பொதுக் கூட்டங்களில், அல்லது விழா மேடைகளில் பல நண்பர்கள், ஏற்பாட்டாளர்கள் வழங்கும் புத்தகங்களை திருப்பும்போது ஆவல் காரணமாக – உடனே படிக்கத் துவங்கி, ஒரு பகுதியினையாவது படித்து முடிப்பேன்.
அது ஒரு வகையில் ஒரு ‘சோர்வு நீக்கி’; அத்துடன் நல்ல இளைப்பாறுதலும்கூட (Relaxation)!
இவர்கள் தந்த நூல் கொத்து சற்று மாறுபட்ட அறிவியல் நூல்கள் அடங்கியது. அதில்,

நண்பர் ஏ. சண்முகானந்தம் அவர்கள் ‘சிறியதே அழகு’ ஒரு பல்லி வடிவத்தில் தனி முத்திரை அடையாளம் இட்டு முறையாக அழகுபடுத்திய சில நூல்களைத் தந்தார்கள்.
அவற்றில், ‘பூச்சிகள் – ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஏ. சண்முகானந்தம் எழுதியுள்ள நூல், மிக அருமையானதாக அமைந்து பூச்சி என்றால், பலருக்கு ஒரு வகை வெறுப்பு – அல்லது அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும்கூட உண்டு.அதுபோலவே பறவைகள் கருத்தும்கூட உண்டு. நமக்கு சில பார்வை இருக்கும்.
ஆனால், அவற்றைப் பற்றிய அறியாத, அறிவியல் ஆய்வுகளாக பல் நூல்களை உயிர் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் சில, (பூச்சிகள் தொடங்கி),
- ‘மரங்கொத்திகள்’ – மரங்களின் இயற்கை மருத்துவர்,
 - காதல் நடனம் – பூநாரைகள்
 - தைலான் என்ற தகைவிலான்
 - செம் மார்புக் குக்குறுவான் – ஓர் அறிமுகம்
 - கொம்பன் ஆந்தைகள் – ஓர் தன்னனுபவம்
 - தட்டான்களை தவற விட்ட காலம்
 - காதலில் திளைக்கும் – இரயில் பூச்சி
 - மரியா சிபெல்லா மேரியான் – பூச்சியியலின் மூதாய்
 
பல வண்ணப் பூச்சிகளை எப்படி கண்ணுக்கு ரம்மியமாகப் பார்த்து மகிழுவோமோ அப்படி கருத்துக்கு விருந்தும், புத்தறிவும் பலரும் அறியாத புதிய செய்திக் ‘குதிராக’ இந்த நூல்கள் அமைந்துள்ளன!

நாம் கற்றவற்றைவிட கல்லாதவை பல…பல – இதுவரை பெற்றவற்றைவிட பெற வேண்டியவை அநேகம்.

எடுத்துக்காட்டுக்காக, ‘பூச்சிகள் – ஓர் அறிமுகம்’ என்ற நூலில் அந்த நூலாசிரியர் தம் முன்னுரையில்,
‘‘கடந்த 1990களிலேயே தொடங்கிய காட்டுப் பயணங்கள் வழியே பல அறிவியல் செய்திகளை அறிந்து கொண்டதோடு, புதிய விசாலமான பார்வையும் கிடைத்துள்ளது. அத்தகைய காட்டுப் பயணங்கள் நாளது வரை தொடர்கிறது.’’

இந்த வரிகள் நமது சிந்தனையில் ஒரு புதிய பரிமாணத்தத் தந்து – ‘‘அறிவை விரிவு செய்து – அகண்டமாக்கி – விசாலப் பார்வையால் உலகை விழுங்கு’’ என்ற புரட்சிக்கவிஞரின் தன்னார்வத் தன்னம்பிக்கையின் எழுச்சி வரிகளுக்கு இலக்கியமாய்த் திகழ்கின்றன!

எப்போதும், வீட்டுப் பயணத்தை அதிகம் செய்யாமல், நாட்டுப் பயணத்தில் முனைந்துள்ள எம் போன்றோர்க்கு, இந்த காட்டுப் பயண அனுபவம் மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றுப் போல கிடைத்தது!

இயற்கை, காடு, உயிரினங்கள்… அப்பப்பா கற்க வேண்டியவை எவ்வளவோ!
இதுபோன்ற நூல்கள், இந்த செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் மிகவும் தேவை! ‘அறிவியலை இயற்கையைக் குறித்த நூல்களை வழங்கி வருவது அதனையும் தாண்டிய விசாலம் எப்படி அறிவின் விரிவானம்’ ஆகிறது என்பதை படிப்பதோடு உணர உதவுகிறது அல்லவா?

எனவே அந்நூல்களை நமது வாசக நேயர்கள் நமது குழந்தைச் செல்வங்களுக்கு வாங்கித் தந்து – ‘பார்த்து வேடிக்கைப் பார்க்க’ என்ற கட்டத்தைத் தாண்டி, படித்து வளரச் செய்தல் அவசியம். காட்டுப் பயணங்கள் வழி ‘காட்டும்’ பயணங்களாக இதில் இருப்பதைப் பாராட்டி, படித்து, பயனுறுகிறோம். நன்றி!
என்னோடு நீங்களும் சேரலாமே!

