ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டையொட்டி ஒரு துண்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். வாருங்கள் இணைந்து சாதனை படைப்போம்!’ என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை அது; வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் துண்டறிக்கையில் காணப்படும் தகவல்களுக்கும் – ஆர்.எஸ்.எஸின் செயல்பாட்டுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகு மூட்டை அமைப்பின் மறுபெயர்தானே ஆர்.எஸ்.எஸ்.
‘‘நமது சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, கல்வி, வசதிகள், கவுரவம் அனைத்தையும் இழந்தனர். இது முற்றிலும் அநீதியானது, மனிதாபிமானம் அற்றது. இந்த அநீதியை நீக்கி அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. சமுதாயத்திலிருந்து தீண்டாமையை – பாகுபாட்டை ஒழிக்க, சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்’’ என்று அந்த ஆர்.எஸ்.எஸ். துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவை எல்லாம் எப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யுரைகள் என்பது எடுத்த எடுப்பிலேயே காணக் கூடிய பேருண்மையாகும்.
‘நமது சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்டு, கல்வி வசதிகள், கவுரவம் அனைத்தையும் இழந்தனர்’’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். துண்டறிக்கை.
இந்த நிலையை மத ரீதியாக வேத, உபநிஷத்து, இதிகாச, சாஸ்திர, புராண ரீதியாக உருவாக்கியதே ஹிந்து மதம் தானே! அந்த ஹிந்து மதத்தின் அடிப்படையில் ஹிந்து ராஷ்டிரம் என்பதை உருவாக்குவோம்’ என்று இன்று வரை முழங்கிக் கொண்டிருக்கும் கும்பல்தானே ஆர்.எஸ்.எஸ்.
அந்த ஹிந்து மதத்தின் சாஸ்திரங்கள்தானே பிறவியின் அடிப்படையில் நான்கு வருணங்களையும் உருவாக்கி, வருணங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஜாதிகளை உற்பத்தி செய்தது.
‘தீண்டாமை ேக்ஷமகரமானது’ என்று சொன்னவர்தானே இவர்கள் ஜெகத்குரு என்று போற்றும் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி… இல்லை என்று மறுக்க முடியுமா?
தீண்டாமை ஒழிப்புக்கு ஆதரவைப் பெறுவதற்காகப் பாலகோடு – நல்லிச்சேரியில் முகாமிட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைக் காந்தியார் சந்தித்ததுண்டே! (16.10.1927)
அந்தச் சந்திப்புக்கூட மாட்டுக் கொட்டகையில்தான் நடந்தது. அதிலும் ஒரு தீண்டாமை!
‘‘ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்கள் மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்’’ (‘தமிழ்நாட்டில் காந்தி’ பக்.576)
இதுதான் தீண்டாமை ஒழிக்கும் இலட்சணமா?
தீண்டத்தகாதவர்களின் மனம் நோவதுபற்றி சங்கராச்சாரியாருக்குக் கவலையில்லை; தீண்டாமையை அனுசரிப்பவர்களின் மனம் நோவது பற்றித்தான் கவலைப்படுகிறார் சங்கராச்சாரியார்! எத்தகைய வன்மம்!
தீண்டாமையை – பாகுபாட்டை ஒழிக்க சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். துண்டறிக்கை கூறுகிறதே– அனைத்து சமூகங்களும் சமமானவர்கள் என்பதற்குத் தடையாக இருக்கும் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து – துண்டறிக்கையின் ஓர் ஓரத்தில் கூடக் குறிப்பிடப்படாதது ஏன்?
அப்படிக் குறிப்பிட மாட்டார்கள் – காரணம் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று அவர்கள் தலையில் தூக்கி வைத்துத் துள்ளிக் குதிக்கும் எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts) என்னும் நூலில் பச்சையாகவே வர்ணாசிரமத்தை வரிப் பிளந்து எழுதுகிறார் – ஆதரிக்கிறாரே!
வர்ண வியாவஸ்தா என்பது ஒரு சமூக அமைப்பாகும்.
‘‘சமூகம் ஏற்றத் தாழ்வல்ல; பிரித்தாளும் சூழ்ச்சியாக வெள்ளைக்காரர்கள் தான் பிற்காலத்தில் திரித்து விட்டனர்.’’ என்கிறார் கோல்வாக்கர்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ‘ஹிந்து மதம்’ என்ற பொதுப் பெயரை வெள்ளைக்காரன் வைத்தானோ அல்லவா நாம் பிழைத்தோம்’’ என்று காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஒப்புக் கொண்டுள்ளாரே! (‘தெய்வத்தின் குரல்’ – முதல் பாகம் – பக்கம் 267)
உண்மை இவ்வாறு இருக்க வெள்ளைக்காரர்கள் மீது பழி போடுகிறார் – கோல்வால்கர்.
‘‘பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள்; க்ஷத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள்; வாணிபம், விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள்; தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்திற்குச் சேவை செய்பவர்கள் சூத்திரர்கள்’’ என்று ‘ஞானகங்கை’ நூலில் குறிப்பிடுகிறார் – ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர்.
அதே நேரத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் – இந்த வர்ணங்கள் என்ற வேதக் கருத்தையும், மனுதர்ம சுலோகத்தையும் திட்டமிட்டு மறைத்திருப்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.
பிறப்பின் அடிப்படையில் பிராமணர்கள் அறிவுத் திறமையால் உயர்ந்தவர்கள் என்றால், மற்ற மூன்று வருணத்தார்களும் பிறப்பின் அடிப்படையில் அறிவில்லாதவர்களா? இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்களுக்குப் பிறப்பின் அடிப்படையில் இன்னனின்ன தொழில் என்று வரையறுத்ததாக வருணிக்கும் கோல்வால்கர், சூத்திரர்கள் என்று வரும்போது தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம்… என்று நழுவி ஓடுவதைக் கவனிக்க வேண்டும். ஏன் சூத்திரர்களுக்கு மட்டும் இன்ன தொழில் என்று வரையறுக்கவில்லை? காரணம் இருக்கிறது.
மனுதர்மம் 8ஆவது அத்தியாயம் 416இல் சூத்திரன் என்றால் யார் என்று வரையறுத்துள்ளது.
(1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.
(2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.
(3) பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியம் ெசய்கிறவன்
(4) விபசாரி மகன்
(5) விலைக்கு வாங்கப்பட்டவன்
(6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
(7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் – என்று மனுதர்மத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் அந்தப் பகுதியை மறைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டையொட்டி துண்டறிக்கை வெளியிடுபவர்கள் அறிவு நாணயம் இருந்தால் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்!
இந்த ஆரிய விஷத்தை முறி(யடி)க்க தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது தான் திராவிடத் தத்துவம்!
புரிந்து கொள்வீர். பார்ப்பனரல்லாத தோழர்களே! மற்றொன்று, தாழ்த்தப் பட்டவர்கள்பற்றி கண்டு கொள்ளாதது ஏன்? என்ற கேள்வியையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் கேளுங்கள்! கேளுங்கள்!! தோழர்களே!
