பெரியார் பன்னாட்டமைப்பு, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது. மெல்பேர்னுக்கு அருகே மிகவும் அழகான கால்பீல்ட் நகர அரங்கிலே 200 பேர் அமர்ந்து கலந்து கொண்டனர் . ஆஸ்திரேலிய முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு கரீனா கார்லண்ட், டேவிட் சூபிரிட்சு, லீ ரீயென்னான், முதல் இந்தியப் பரம்பரை மிசல் ஆனந்த ராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலிய நாட்டு வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும் பாடப்பட்டன.
பேராசிரியர் சுப. வீ அவர்கள் அண்ணல் அம்பேத்கர் படத்தையும், மானமிகு ஆ.இராசா அவர்கள் தந்தை பெரியார் படத்தையும் திறந்து வைத்தனர் .
ஆஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினர் உரை
மாநாடு மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக மனித நேயம் பற்றியும், சமூக நீதி பற்றியும், உலகில் நடக்கும் மனிதநேயத்திற்கு எதிரான அநியாயங்களைச் சரி செய்வது பற்றியும் விளக்கமாகப் பேசினார்கள். இதில் மிகவும் சிறப்பு என்னவென்றால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அம்மையார் லீ ரீனான் .அவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக இங்கே சிறை சென்றவர் என்பதாகும். மிகவும் அருமையாக நடக்கும் இனப்படுகொலைகளைப் பற்றி அவர் பேசினார்.
முன்னேற்றத்தைத் தடுக்கும் ஜாதி
பின்னர் பேராசிரியர்கள் பால் லாங்க் , ஹரி பாபுஜி இருவரும் சிறப்பாகப் பேராசிரியர்களுக்கே உரித்தான விளக்கமான மனிதநேய கோட்பாடுகளை, ‘நீதி எப்படிச் சமுதாயத்திற்கு மறுக்கப்படுகின்றது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசினார்கள். ‘ஒரு முன்னேற்றத்திற்கு எப்படி ஜாதி தடையாக இருக்கிறது’ என்பதைப் பற்றி பேராசிரியர் ஹரி பாபுஜி அவர்கள் விளக்கமாகப் பேசினார். இவர் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.

இந்திய வம்சாவளி அம்மையார் மிசல் ஆனந்தராஜா என்ற பாராளுமன்ற உறுப்பினர் ‘இந்தியர்களுக்கு உள்ள ஜாதி எப்படி மனித நேயத்தை அலைக்கழிக்கிறது’ என்பதை நன்றாகப் பேசினார் .அடுத்து, மாநாட்டு ஏற்பாட்டுக்கு சிறப்பாக இவர்களை எல்லாம் அழைத்து வந்த டாக்டர் முகமது ஹருண் கசிம் அவர்கள் ‘மாநாட்டின் நோக்கம், மாநாட்டின் சிறப்புகள்’ பற்றி அருமையாகப் பேசினார். ‘ஆஸ்திரேலியாவிலே எப்படி இவர்கள் போராடி, ஜாதி அநியாயங்களைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று அங்கே காண்பித்தார்கள், அதற்கான சட்ட திட்டங்களை நிறைவேற்றினார்கள்’ என்பதை பற்றிச் சிறப்பாகப் பேசினார்.
மருத்துவுர்கள் உரை
மருத்துவர் கார்த்திக் தங்கராஜ் அவர்கள் ‘மருத்துவ நீதிகள் எப்படி மனிதநேயத்திலே அலைக்கழிக்கப்படுகின்றன, மருத்துவ நீதித்துறை எப்படி மனிதநேயத்தைக் காப்பாற்ற வேண்டும்,அது எவ்வளவு முக்கியம்’ என்பதைச் சிறப்பாகப் பேசினார்.
அடுத்து நமது மருத்துவ ,சிறப்பாளர் மருத்துவர் கவுதமன் அவர்கள் ‘பகுத்தறிவும் மருத்துவமும் ‘என்ற தலைப்பில் மிகவும் சிறப்பாக, ‘சாக்ரட்டீஸ் தொடங்கி, பகுத்தறிவு எப்படியெல்லாம் மனிதநேயத்தில் இருக்கிறது’ என்பதை அருமையாக சிறப்பாக எடுத்துரைத்தார்.
‘பகுத்தறிவு உள்ள மருத்துவம் தான் சிறப்பாக மக்களுக்குப் பயன் தரும்’ என்பதைப் படங்களுடன் அருமையாக விவரித்தார். அடுத்து மருத்துவர் கோகுல் கிருபா சங்கர் அவர்கள் ‘மனித அநியாயங்கள் நடக்கும் பொழுது, எப்படி மருத்துவர்கள் பணி புரிய வேண்டும்’ என்பதை விவரமாக எடுத்துரைத்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகும், மதிய உணவிற்குப் பிறகும், சட்டத்துறை, பட்டிமன்றம் போலப் பேச்சரங்கம் நடைபெற்றது. சிறப்பான சட்டத்துறை சார்ந்த பேச்சாளர்கள், பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஓவியா அவர்கள் ‘புதிய குரல்’ நிறுவனர், மிகவும் அருமையாக ,சட்ட நுணுக்கங்களிலே எப்படியெல்லாம் ஜாதி அநியாயமாகச் செயல்படுகிறது, அதையெல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினார் .
சட்டமும் மனிதநேயமும்
அடுத்து மிகவும் சிறப்பாக கருநாடகா முன்னாள் நீதித்துறை அட்வகேட் ஜென்ரல் … ரவி வர்ம குமார் அவர்கள் நீண்ட விளக்கமான சொற்பொழிவை ஆற்றினார். ‘மனிதநேயம் சார்ந்து சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கிறது’ என்பதை எல்லாம் பற்றிப் பேசினார். அவருடைய பேச்சு அனைவரையும் கவர்ந்தது.. அடுத்து உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் முனைவர் ஆதித்யா சந்தி அவர்கள் உரையாற்றினார்.அவர் ‘அண்ணல் அம்பேத்கர் தந்த நீதிகள் உச்ச நீதிமன்றத்தில் எப்படி இருந்தது என்பதை ஓர் ஆதாரப்பூர்வமான விளக்கமாக, என்னென்ன நீதிகளை அம்பேத்கர் பெற்றுத் தந்தார், இட ஒதுக்கீட்டில் அவருடைய கருத்து என்ன’ என்பதை எல்லாம் நன்றாக விளக்கிப் பேசினார்.
பன்னாட்டவர் உரை
அடுத்து தினகரன் செல்லையா அவர்கள் ‘ஜாதி எப்படி அடி வேராக ஸநாதனா தர்மத்தில், ஸநாதன சட்டங்களில் இருக்கின்றது’ என்பதைக் கோடிட்டுக் காட்டிப் பேசினார். அடுத்து மிகவும் சிறப்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகக் குரூப்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்ட மாணவி இனியா பிரபு வாசுமதி ‘இந்தியாவின் சமூக அரசியல் வானத்திலே எப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதி அநியாயங்கள் நடக்கின்றன’ என்பதைக்காட்டி அதை எப்படி மாற்ற வேண்டும் என்ற வகையிலே பேசினார். அடுத்து செந்தில்குமார் ஜப்பான் நாட்டில் இருந்து வந்து ,ஆண் ஆதிக்கத்தைப் பற்றியும்,ஆணாதிக்கத்தின் பல்வேறு முகங்களையும் கோடிட்டுக் காட்டிச் சிறப்பாகப் பேசினார்.
அடுத்த நிகழ்வாக, ‘மனித நேயமும் செய்தித் துறையும்’ என்ற அளவிலே மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் ராஜாத்தி சல்மா மிகவும் சிறப்பாக, ‘எப்படியெல்லாம் மனிதநேயம் பாதிக்கப்படுகின்றது, மனிதநேயத்தைச் செய்தித்துறை ஒழுங்காகக் கையாள வேண்டும். அப்பொழுதுதான் சரியான செய்திகள் சரியாகப் போய்ச் சேரும். நடக்கும் அநியாயங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும். அவைகளுக்குத் திரையிட்டு மறைத்து விடக்கூடாது’ என்பதை சிறப்பாகப் பேசினார்.
அடுத்து, சிங்கப்பூரில் இருந்து அன்பழகன் அவர்கள் இரண்டு கதைகளாகச் சிறப்பாகச் சொல்லி அவருடைய மனிதநேயத்தை விளக்கினார் .ஒன்று அறிஞர் அண்ணா அவர்கள் போப்பாண்டவரை சந்தித்து அவரிடம் கோவாவின் விடுதலைப்போராட்ட வீரர் ராணடே அவர்களின் விடுதலையைப் பெற்றுத் தந்ததை விவரமாக, புதிய முறையிலே ,ஓர் ஓரங்க நாடகம் போல நடத்திப் பேசினார். அடுத்து ‘எப்படி இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது, ஒரு சீக்கிய பையன் ஒரு தமிழ்ப் பெண்ணால் எப்படி டில்லியில் காப்பாற்றப்பட்டார்’ என்பதை விளக்கினார். அவருடைய முடிகளை நீக்கி, அந்தப் பையனை ஒரு பெண்ணாக உடையணிய வைத்து, அவர் வீட்டில் வெறி பிடித்தவர்கள் துரத்தி வந்த பொழுது ஒரு பெண் போல அந்தப் பையனை மாற்றி விட்டு எப்படிக் காப்பாற்றினார் என்பதையும் ஒரு கதையாகச் சொன்னார்.
பெரியாரின் தாக்கம்
கட்டாரில் இருந்து வந்த திருப்பதியைச் சேர்ந்த மோகித் பலகிரி. இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் சிறப்பாகப் பெரியார் பற்றி எழுதி வருபவர். ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ பத்திரிகையிலும் எழுதியுள்ளார் .இவர் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளிலே ,எப்படிப் பெரியாரின் தாக்கம் இருக்கிறது என்பதைப், பல்வேறு பெண்கள் மற்ற ஒவ்வொரு துறையிலும் எப்படிப் பெரியாரின் தாக்கம் முன்னேற்றியிருக்கிறது என்பதைத் தனது உரையில் படம் பிடித்துக் காட்டினார்.
சுப.வீ அவர்கள், சுருக்கமாக, ‘ஏன் இந்த மாநாடு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது, உலக மக்கள் எப்படித் தந்தை பெரியார் அவர்களைப் புரிந்துகொண்டு மனித நேயத்தையும் ,சமூக நீதியையும் காப்பாற்ற வேண்டும். நாம் அதைப் பரப்ப வேண்டியது எப்படி நமது கடமை, அதை இங்குள்ள ஆஸ்திரேலியர்களுக்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும்’ என்பதைப் பற்றி உரையாற்றினார்
குறும்படம் திரையிடல்
முதல் நாள் இறுதி நிகழ்வாக, பேராசிரியர் விக்ரம் கிஷோர் சீனாவில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்து ஒரு படத்தைக் காண்பித்தார் .
அது ஒரு குறும்படம். அதிலே ‘ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் மற்ற இடங்களிலே வாழும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மருத்துவராக இருந்தாலும் மற்ற துறைகளில் இருந்தாலும் எப்படி அவமதிக்கப்படுகிறார்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும், எப்படி எல்லாம் அவமதிக்கப்படுகிறார்கள்’ என்பதை மிகவும் விளக்கமாக, நேர்காணலுடன் அருமையான படமாக காண்பித்தார். அந்தச் செய்தியை அங்குள்ள ஆஸ்திரேலிய மனிதநேய அமைப்பைச் சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ந்து போனார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
இரண்டாம் நாள் நிகழ்ச்சி கிஸ்ப்ளோ என்ற நிறுவனத்தின் மிகப்பெரிய வல்லுநர் சுரேஷ் சம்பந்தம், ‘தமிழ்நாடு எப்படி இருந்தது, எப்படி முன்னேறி வருகின்றது’ என்பதை விளக்கமாகக் கூறினார்
ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகளுடன் ‘தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதை எல்லாம் விளக்கமாக படமாகக் காட்டி 2030இல் 1 ட்ரில்லியன் டாலர் அதாவது 1 ட்ரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன் டாலர். அந்த அளவிற்குக் கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும், எந்தெந்த துறைகளில் எப்படியெல்லாம் முன்னேறி வருகின்றோம்’ என்பதைக் காட்டி, ‘தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் அவர்களின் பாதையிலே தமிழ்நாடு எவ்வளவு வேகமாக முன்னேறியிருக்கிறது’ என்பதை மிகவும் அருமையாக விளக்கினார். ‘எந்தெந்த துறைகளிலே எப்படியெல்லாம் முன்னேறலாம், தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு 500 திராவிட அமைப்புக்கள் ஆங்காங்கே தொடங்க வேண்டும், அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்’ என்பதை மிகவும் விளக்கமாகக் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் நடப்பதேன்
அடுத்து கார்த்திகேயன் சிவ சேனாபதி, வெளிநாடு வாழ் தமிழர்களின் நலத்திற்காக உள்ள அமைப்பின் தலைவராக இருப்பவர். எப்படி வெளிநாட்டு தமழர்களுக்கு என்ன என்ன செய்கிறோம் ,எப்படி எல்லாம் அரசு உதவி செய்து வருகின்றது என்பதைச் சொன்னார். அவருடைய முக்கிய குறிக்கோளாக மாசுக் கட்டுப்பாடு – நல்ல காற்று வேண்டும்; நல்ல காற்றும் நல்ல குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; உலகெங்கும் இந்த மாசுக் கட்டுப்பாடு காற்று தூய்மை அடைதல் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லி விளக்கமாக பேசினார்.
அடுத்து திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் அருள்மொழி அவர்கள், ‘இந்த மாநாட்டின் குறிக்கோள், எதற்காக இந்த மாநாடு, ஏன் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படுகிறது?. எதிரிகள் ஏன் பொங்குகிறார்கள்? என்பதையெல்லாம் விளக்கமாகச் சொல்லி தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடு தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலக முழுவதும் உள்ள மக்களுக்கு சென்றடைய வேண்டும். சமூக நீதியும், சுயமரியாதையும் அனைவருக்கும் அனைத்தும் என்ற கோட்பாடும் உலகெங்கும் உள்ள அநீதிகளுக்கு விடையாக இருக்கும் என்பதைச் சொல்லி ஆஸ்திரேலிய மக்களும், மற்றவர்களும் சேர்ந்து பயணிப்போம். தந்தை பெரியார் அவர்கள் தான் உலகத்தில் எதிர்காலம் என்பதை விளக்கமாகச் சொன்னார்.
பட விளக்கம்
அடுத்து ஆர்.கே.எஸ். கவுடா என்ற காவல்துறை பெரிய அதிகாரியாக கருநாடகாவில் பணிபுரிந்தவர். ‘காவல்துறையில் எவ்வாறு அநியாயங்கள் நடக்கின்றன?. எப்படி தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தப்படுகிறார்கள், காவல்துறையில் இருக்கும் இந்த ஜாதி வேறுபாடு ,ஜாதி அடிமைத்தனம் எப்படி இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. அதை எப்படி ஒடுக்க வேண்டும்’ என்பதை அருமையாகச் சொன்னார்.
அடுத்து மேரியான் காஸ் குரூப் என்ற ஆஸ்திரேலியாவின் மனிதநேய அமைப்பாளர், மிகவும் அருமையாக ‘ஒன்பது மனிதநேய கோட்பாடுகளைக் காண்பித்து, அருமையாக படங்களாகக் காண்பித்து குழந்தைகளுக்கும் விளங்கும் அளவுக்கு படங்களாகக் காண்பித்தார். அதில் மனிதநேயம் எப்படி முன்னேற வேண்டும், எப்படி இருக்கிறது, எப்படி முன்னேற வேண்டும்’ என்பதை விளக்கமாகச் சொன்னார்.
அடுத்து ஜப்பானிலிருந்து வந்த கமலக்கண்ணன், அவர்கள் தமிழ் இலக்கியத்திலே பகுத்தறிவு எப்படி எல்லாம் இருக்கிறது. கடவுள் இல்லை, மதம் இல்லை ,ஜாதியில்லை என்பதையெல்லாம் எந்தெந்த இலக்கியங்களில்… குறுந்தொகையில், புறநானூற்றில்,அனைத்திலும் காண்பித்தார். ஒவ்வொரு பாட்டையும் சொல்லி ,அதற்கு விளக்கம் அளித்து, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் ஜாதி இல்லை, கடவுள் இல்லை என்பதைச் சொல்லி இருக்கின்றான்,தமிழ் இலக்கியம் சொல்லி இருக்கிறது என்பதைக் காண்பித்தார்.
மாணவர்கள் பங்கேற்பு
இங்கு ஆஸ்திரேலியாவின் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் போஸ்டர் பிரசன்டேஷன் என்னும் விரிவான விளக்கமான சமூக நீதிக் கொள்கை பரப்பிய படங்களை காண்பித்தனர். அந்த படங்களுக்கு விளக்கங்களை தந்தார்கள். மாணவர்கள் வந்து கலந்து கொண்டது மிகவும் சிறப்பு .அங்கு வந்திருந்த மாணவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் எழுதிய நூல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூல் பரிசாக வழங்கப்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
அடுத்த நிகழ்விலே, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வந்த பேராசிரியர் ராம் மகாலிங்கம் அவர்கள்.. ‘எப்படி சமூக நீதி எங்கெல்லாம் எப்படியெல்லாம் போராடி போராடி வெற்றி பெற்றுள்ளது’ என்பதை காண்பித்தார். ‘அமெரிக்காவிலும் சமூக நீதிக்காக போராடி, மனிதநேயத்துடன் தந்தை பெரியார் அவர்கள் கொள்கைகள் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன’ என்பதை எடுத்துரைத்தார். அடுத்து இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் மூளையின் படத்தைக் காண்பித்தார்.
மதவெறியர்கள் பகுத்தறிவாளர்கள் மூளை எப்படி வேலை செய்கிறது?
‘மதவெறி பிடித்தவர்களின் மூளை எப்படி வேலை செய்கிறது, பகுத்தறிவாளர்கள் மூளை எப்படி வேலை செய்கிறது? சிந்தனை எப்படித் தோன்றுகிறது’ என்பதை எல்லாம் படங்களாகக் காண்பித்து மருத்துவத்துறையிலே மூளையின் முக்கியத்தை, சமூகவியலை எப்படிக் காட்ட வேண்டும் ,எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும், சிந்தனைகள் எப்படி தெளிவு பெற வேண்டும் என்பதை அருமையாக விளக்கிக் காண்பித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
மலேசியபெரியார் பன்னாட்டமைப்பிலுருந்து கோவிந்தசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் மலேசியப் பயணம் , அதற்கு முன்னும் பின்னும் இருந்த நிலைகளை விரிவாகெடுத்துரைத்தார். சாரங்கபாணி அவர்கள் ‘மற்ற தலைவர்களின் செயல்பாடுகள் விளைந்த நன்மைகளை’ எடுத்துக் காட்டினார். இன்றைய நிலையையும் 50 அமைப்புகளும் 10000 உறுப்பினர்கள் இருப்பதையும் பெருமையுடன் எனுத்துக் காட்டினார்.
அடுத்து லண்டனில் இருந்து வந்திருந்த சிறப்பான சமூக வலைத்தள நண்பர், ஹரிஷ் மாரிமுத்து ‘மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பகுத்தறிவு எப்படியெல்லாம் உதவுகின்றது. மக்களின் முக்கிய குறிக்கோளே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். அதற்கு பகுத்தறிவு மிகவும் தேவை .அந்தப் பகுத்தறிவினால் எப்படி மக்கள் நன்றாக வாழலாம்’ என்பதைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
அடுத்து பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான பொன். தங்கமணி ஆஸ்திரேலியாவில் ‘எப்படி ஜாதி வேறுபாடுகள் வாழ்க்கையிலே நடைமுறைகளில் இருக்கின்றது. எப்படி நடத்துகிறார்கள். மறைமுகமாக எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை மிகவும் சிறப்பாக எடுத்து வைத்தார். இங்கே உள்ள இந்துத்துவா எப்படி எல்லாம் செயல்பட்டு, என்னவெல்லாம் செய்கிறார்கள் .அதை எப்படி நாம் முறியடிக்க வேண்டும்’ என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் பணிகள்
இறுதி நிகழ்வாக,பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் சோம இளங்கோவன் அவர்கள், தந்தை பெரியாரின் கொள்கைதான் எதிர்காலத்தில் உலகமயமாகும். மனித நேயமும், சமூக நீதியும், சுயமரியாதையும் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். புத்தருக்குப் பின் தோன்றிய பெரிய மாமனிதர் அய்யா தந்தை பெரியார் அவர்கள் .அவருடைய சுய சிந்தனையால் வெளியான சுயமரியாதை, மனிதநேய தத்துவம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று .அதைப் பரப்புவது தான் பெரியார் பன்னாட்டு அமைப்பின் முக்கிய வேலை என்று சொன்னார்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு எப்படித் தொடங்கியது, வீரமணி சமூக நீதி விருதுகள் எப்படி வழங்கப்பட்டது, சென்ற மூன்று பன்னாட்டு மாநாடுகள் எப்படி நடந்தன. புதிதாக நாம் என்ன செய்ய வேண்டும், ரன் ஃபார் பெரியார், (பெரியாருடன் ஓடுங்கள்), குழந்தைகளுக்காக போட்டிகள் ,அதிலே ஓவியப் போட்டி மிகவும் சிறப்பாக நடந்தது,அதில் வரையப்பட்ட ஓவியங்களைக் காண்பித்தார்.
மகளிர் குடும்பங்களாகச் சேர்ந்து விழாக்கள் எடுக்க வேண்டும். பகுத்தறிவு குடும்பங்கள் சேர்ந்து குடும்ப விழாக்களாக, மக்கள் கோவிலுக்கு போவதை விட நமக்கு வரவேண்டிய செயல்பாடுகளை நாம் செய்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்னார். ‘பெரியார் உலகம்’ எப்படி சிறப்பாக ,அடுத்த தலைமுறைக்கு தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் செல்லும் என்பதைச் சொல்லி அங்கே வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆ.இராசா, அம்மா சல்மா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத ஊதியமாக 1.7 கோடி ரூபாய் கொடுத்ததையும், ஆ.இராசா அவர்கள் தனிப்பட்ட முறையில் 5 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்ததையும் சுட்டிக் காண்பித்து அனைவரும் பெரியார் உலகத்திற்கும் உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
பெரியார், அம்பேத்கர் உழைப்பும் வெற்றியும்
தமிழ்நாட்டில் இருந்து இந்த மாநாட்டிற்காக சிறப்பாக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசா அவர்கள் மிகவும் அருமையாகப் பேசினார். வரலாற்று ரீதியாக, தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உழைப்பு ,அவர்களின் வெற்றி இவற்றை கோடிட்டுக் காட்டி எப்படி தமிழ்நாடு முன்னோடியாக இருந்திருக்கிறது, முன்னோடியாக விளங்குகிறது, எதிர்காலத்தில் முன்னோடியாக எப்படி இருக்கும்? .உலகம் எப்படி தமிழ்நாட்டைப் பார்க்கும் .தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின்,அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புதல்…
உற்சாகமூட்டிய தமிழர் தலைவரின் காணொலி உரை
இவற்றைச் சிறப்பாக எடுத்துரைத்து ஒரு தொகுப்பாக சிறப்பான பேச்சாக பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரை போல் மிகவும் சிறப்பாக வழங்கினார் .அவற்றை அங்குள்ள மனிதநேயர்கள், வந்திருந்த ஆஸ்திரேலியர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். இறுதியில் அவர்கள் சொன்னது வீ் லேர்ன்டு லாட் ..நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம் என்று சொன்னார்கள். அதுவே மாநாட்டில் வெற்றியாக நான் கருதுகின்றேன்.
இறுதியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் காணொலி காட்டப்பட்டது .அய்யா அவர்கள் மிகவும் சுருக்கமாக, ஆனால் தெளிவாக நாம் எப்படி நடக்க வேண்டும், ஆஸ்திரேலியா எப்படி முன்னோடியாக இருக்கிறது ,அங்கு ஜாதிகள் ஒழிக்கப்பட்டு மனிதநேயம் மிகுந்த, சமத்துவம் நிறைந்த நாடாக ஆஸ்திரேலியா உலகிற்கு தனித்துவத்துடன் விளங்கி காண்பிக்க வேண்டும். வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்த மாநாட்டிற்கு, சிறப்பாக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து இங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்து மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
மாநாட்டிற்காக உழைத்த அத்தனை பேரையும் மேடையிலே ஏற்றி, அவர்களுக்கு நூல் பரிசாக வழங்கப்பட்டு தந்தை பெரியார் அவர்களே நேரில் வந்து வாழ்த்தியது போல் சோம. இளங்கோவன் அவர்கள் தந்தை பெரியார் குரலிலே ஒவ்வொரு ஒவ்வொரு பெயரையும் சொல்லி மகிழ்நன், அருள்மொழி, மூர்த்தி ,சுரேஷ் என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி அவர்களை எல்லாம் தந்தை பெரியார் அவர்களே வாழ்த்துவது போல் வாழ்த்தியது முத்தாய்ப்பாக மாநாட்டு உழைப்பாளிகளுக்கு கிடைத்த பெரும் பரிசாக இருந்தது மாநாடு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது .நன்றி.
தொகுப்பு: மருத்துவர் சோம. இளங்கோவன்
