திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், நல்லதொரு சிறப்புமிகுந்த பொன்னேட்டை உருவாக்கிய நூற்றாண்டு விழா நாயகர்!

9 Min Read

அய்யா முனுஆதி அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நடத்துகின்ற வாய்ப்பினைத்
திராவிடர் கழகத்திற்கு அளித்தமைக்காக அவருடைய குடும்பத்தாருக்கும், கொள்கை, குருதிக் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டு, நன்றி!முனுஆதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

சென்னை,  நவ.3-   திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், நல்லதொரு சிறப்புமிகுந்த பொன்னேட்டை உருவாக்கிய நூற்றாண்டு விழா நாயகர்- என்றென்றைக்கும் நம்மால் மறக்க இயலாத, அதிலும் குறிப்பாக தாய்க் கழகத்தினரால் அவரை என்றைக்கும் மறக்க முடியாது; அத்தகைய சிறப்பு வாய்ந்த அய்யா முனுஆதி அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நடத்துகின்ற இந்த சிறப்பான  வாய்ப்பினைத் திராவிடர் கழகத்திற்கு அளித்தமைக்காக  அவருடைய குடும்பத்தாருக்கும், கொள்கைக் குடும்பத்தாருக்கும், குருதிக் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா!

கடந்த 27.10.2025 அன்று சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள இராஜகோபால் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் முனுஆதி அவர்களின் நூற்றாண்டு விழா – மற்றும் ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

கொள்கைக் குடும்பத்தாருக்கும், குருதிக் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டு, நன்றி!

நெஞ்சங்களில் நிறைந்துள்ள நூற்றாண்டு விழா நாயகர் – மிகப்பெரிய கொள்கைச் செம்மல், மற்ற வர்கள் எல்லாம் கொள்கை வாழ்வு வாழ்ந்தால், அது எத்தகைய சிறப்பாக இருக்கும் என்பதைத் தன்னுடைய வாழ்க்கையின்மூலமாக சிறப்பாக வாழ்ந்து காட்டி, ஒரு பெரிய இயக்கத்தின் வரலாற்றில்,  திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், நல்லதொரு சிறப்பு மிகுந்த பொன்னேட்டை உருவாக்கிய நூற்றாண்டு விழா நாயகர்- என்றென்றைக்கும் நம்மால் மறக்க இயலாத, அதிலும் குறிப்பாக தாய்க் கழகத்தினரால் அவரை என்றைக்கும் மறக்க முடியாது; அத்தகைய சிறப்பு வாய்ந்த அய்யா முனுஆதி அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நடத்துகின்ற இந்த சிறப்பான  வாய்ப்பினைத் திராவிடர் கழகத்திற்கு அளித்தமைக்காக அல்லது நாங்களே எடுத்துக்கொண்டமைக்காக உங்கள் அனைவருக்கும், முதற்கண், அவருடைய குடும்பத்தாருக்கும், கொள்கைக் குடும்பத்தாருக்கும், குருதிக் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டு களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூற்றாண்டு விழாவிற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறன்.

வெளியில் மழை பொழிகிறதோ இல்லையோ என்று தெரியாது; இந்த நூற்றாண்டு விழா நடைபெறுமோ, நடக்காதோ என்று நினைத்தேன். ஆனால், எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல், இயற்கை எப்படி இருந்தாலும், அதை வென்று காட்டுவதுதான் திராவிட இயக்கம் என்று காட்டக்கூடிய அளவில், ஓர் அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு நூற்றாண்டு சாதனை என்று சொன்னால், அதைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம். ஆனால், அதை மனதில் சுருக்கமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், எந்நாளும் கொள்கை வீரராக இருந்தவருமான அய்யா முனுஆதி அவர்களுடைய நூற்றாண்டு விழா ஒருபக்கம்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின்
நாயகருக்குப் பாராட்டு!

இன்னொரு பக்கம், பாராட்டு விழா! யாருக்குப் பாராட்டு?

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்கு கின்ற, உலகமே இன்றைக்குப் பாராட்டக்கூடிய தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!

அதிலும் பொதுவான பாராட்டு என்பதைத் தாண்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை அவருடைய கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

ஆணவக் கொலைகள் நடக்கின்ற கொடுமையைக் கண்டித்து, அதனைத் தடுப்பதற்கு சட்டப் பாது காப்புத் தேவை என்பதற்கான தீர்மானத்தை எடுத்துக்காட்டி னோம்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் பாதையை முடிவு செய்வது பெரியார் திடல்தான்!

அந்த மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றும்போது, அது என்னுடைய கவனத்திற்கு வந்துவிட்டது என்று சொன்னது மட்டுமல்ல, எங்களுக்குக்கூட ஓர் இன்ப அதிர்ச்சி என்னவென்றால், ‘‘எங்களுடைய பாதையை, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பாதையை முடிவு செய்வது பெரியார் திடல்தான்’’ என்று நம்முடைய முதலமைச்சர் சொன்னது, வெறும் வாய்ப் பேச்சல்ல. அதற்கு ஒரு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஏதுவாக, சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது.

அக்கூட்டத்தின் மூன்றாவது நாளில்,  ஒரு மசோதா வைக் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு!

‘‘சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்தி ருக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.

ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படு கொலைகளுக்கு ஜாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.  எதன்பொருட்டு நடந்தாலும், கொலை – கொலை தான்.  அதற்கான தண்டனைகள் மிக, மிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாரும், எவரும் – எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம்.  எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.

மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை

அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.  நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஜாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை; அனைவரும் சமம்; பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஓர் அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.

அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும் – சமத்துவ சிந்தனையும் கொண்ட,  சுயமரியாதையும் – அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை!  சீர்திருத்தப் பரப்புரையும் – குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்
ஓர் ஆணையம் அமைக்கப்படும்!

இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்கள் தலைமையில் சட்ட வல்லு நர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுட வியல் அறிஞர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.

இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், ச‌‌ட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.   அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்து அமைகிறேன்’’ என்று சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, 14 நாள்களில் அந்தத் தீர்மானம் சட்டமாக வரவிருக்கிறது என்பதை அறிவித்துள்ளார்.

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தீர்மானங்களாகும்!

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு அப்போது கலைஞர் அவர்கள் 5 வயது குழந்தை.  அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தான், இந்தியாவிற்கே வழி காட்டக்கூடிய தீர்மானங்களாகும்.

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, மகளிருக்குச் சொத்துரிமை, மகளிர்கள் காவல்துறையில் அதி காரிகளாக வரவேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானங்களுக்குப் பிற்காலத்தில் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது.

எங்களுடைய மாநாட்டுத் தீர்மானங்கள், நாளைய சட்டங்கள்!

நாங்கள் பல மேடைகளில் உரையாற்றும்போது சொல்வோம், எங்களுடைய மாநாட்டுத் தீர்மானங்கள், நாளைய சட்டங்கள் என்று.

அது வெறும் அலங்காரத்திற்காகவோ, அழகுக்காகவோ சொல்லவில்லை. செயலுரு கொள்ளவேண்டும் என்ப தற்காகத்தான்.

1929 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் 40 ஆண்டுகள், 60 ஆண்டுகள் கழித்து சட்ட வடிவம் பெற்றன.

அப்போது 5 வயது குழந்தையாக இருந்த கலைஞர் அவர்கள், முதலமைச்சராக ஆனவுடன், நூற்றாண்டு விழா நாயகர் முனுஆதி அவர்கள், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்.

இது எவ்வளவு பெரிய இயக்கம் என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.

இன்றைக்கு அந்த வரலாறெல்லாம் தெரியாதவர்கள், வேரைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்கிறார்கள். எந்த வேரையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

கட்டடம்தான் உங்கள் கண்களுக்குத் தெரியுமே தவிர, அதனுடைய அடிக்கட்டுமானம் தெரியாது. அது எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த அடிக்கட்டுமானத்தை அமைத்தவர்கள்தான் இன்றைய நூற்றாண்டு விழா நாயகர் அய்யா முனுஆதி போன்றவர்கள்.

அவருடைய நூற்றாண்டு விழாவை நாம் கொண்டா டுகிறோம் என்றால், வெறும் விழாவிற்கா கவோ, வெறும் பெருமைகளைப் பேசிவிட்டுப் போவதற்காகவோ அல்ல.

இந்த இயக்கம், எத்தனைத் தடங்கல்களைத் தாண்டி யிருக்கிறது; எத்தனைத் தடைகளை உடைத்தி ருக்கிறது என்பது அவர்களுக்கெல்லாம் தெரியாது.

ஸநாதன சக்திகள் அதனை அனுமதிக்கவில்லை!

அன்றைக்கு ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், பெண்களுக்குச் சொத்துரிமை என்ற மசோதாவைக் கொண்டு வந்தார். ஸநாதன சக்திகள் அதனை அனுமதிக்கவில்லை. அதனால், அம்பேத்கர் அவர்கள் சலிப்படைந்துவிட்டார்.

ஆனால், அதனை தமிழ்நாட்டில் முதன்முதலில் செய்து காட்டிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்கு, திராவிட  முன்னேற்றக் கழக ஆட்சியையே சாரும்.

தீர்மானம் நிறைவேற்றிய
14 நாள்களிலேயே செயலுரு பெற்றது!

1929 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 40, 60 ஆண்டுகளுக்குப் பின் செயல் பெறுகிறது.  ஆனால், ஆணவப் படு கொலைகளுக்கு எதிரான தடுப்புச் சட்டம் – திராவிட மாடல் ஆட்சியின் நம்முடைய முதல மைச்சருடைய ஆட்சியில், தீர்மானம் நிறை வேற்றிய 14 நாள்களிலேயே செயலுரு பெற்றது.

அதை மிக அற்புதமாகச் செய்திருக்கிறார் நம்மு டைய முதலமைச்சர் அவர்கள்.

அய்யா முனுஆதி அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம்.

நண்பர்களே! ஏன் ஒருவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம்?

நூறு வயதானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால்,  அவர்களுடைய செயல்திறன், வரலாற்றுப் பெருமை வாய்ந்தது.

நூற்றாண்டு நாயகரின் சாதனைகள், அவருடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் – அவருடைய இலக்கு என்ன என்று தெரிந்து, அந்த இலக்கினை எவ்வளவு தூரம் அடைந்தார்; மீதி எவ்வளவு பாக்கி இருக்கிறது – நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றவர்கள் அதை நிறைவேற்றவேண்டும்.

சாதாரண கிராமத்திலிருந்து வந்தவர்  அய்யா முனுஆதி

அவருடைய திறமை, செயல்பாடுகள் சிறப்பானவை. ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்தவர் அவர். தோழர் மகேந்திரன் அவர்கள் மிக அழகாக அதைச் சொன்னார்.

அந்தக் கிராமம். ஊராட்சியிலிருந்து, இன்றைக்கு மாநகராட்சியாக அது ஆகிவிட்டது. தாம்பரம் மாநகராட்சி ஆனதோடு மட்டுமல்ல, ஒரு மகளிரை மேயர் நாற்காலியில் அமர வைத்து, ‘அனைவருக்கும் மேயர்’ அவர் என்ற நிலைக்கு ஆக்கியிருக்கிறது.

பெண்களுக்குத் தைரியத்தைக் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்!

ஒரு நூறாண்டுக்கு முன்னால், நாற்காலி இருந்தது; ஆனால், அந்த நாற்காலியில் உட்காருகின்ற தைரியம் எந்தப் பெண்ணுக்கும் இல்லை. அந்தத் தைரியத்தைக் கொடுத்தவர்தான் தந்தை பெரியார்; அந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *