துனிசியாவில் 48 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு

துனிஸ், நவ. 2– துனிசியாவுக்கு வேலைக்குச் சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் உணவுக்கு வழியின்றி தவிப்பதால், ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டில்லி குருகிராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 48 பேரை ஆப்பிரிக்க நாடான துனிசியாவுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால், அவர்களுக்கு ஒப்பந்த ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்துச் சென்றவர்களை 12 மணி நேரம் வேலை பார்க்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை. ஊதியம் கேட்டால் நாடு திரும்ப முடியாது, சிறைக்கு செல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் தற்போது சாப்பிடுவதற்கு கூட பணம் இன்றி தவிக்கின்றனர். இவர்களை மீட்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்சிப் பதிவு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட ஜார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் நாகேந்திர மகதோ கடிதம் எழுதியுள்ளார்.

30 பாலஸ்தீனர்கள் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

ஜெருசலேம், நவ. 2– போர் நிறுத்தம் ஏற்பட்டதை யடுத்து, பணய கைதிகளாக பிடித்து சென்ற இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்து வருகிறது. 30.10.2025 அன்று 2 பணய கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இஸ்ரேல் 31.10.2025 அன்று  30 பாலஸ்தீன கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ளது.

இதுவரை 195 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ள இஸ்ரேல் அவர்களை பற்றிய விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் சிறையில் இருந்த போது அவர்கள் இறந்தார்களா அல்லது போரின் போது கொல்லப்பட்டார்களா என்பது தெரியவில்லை.

முன்பின் தெரியாதவருக்கு சிறுநீரக கொடை ஆஸ்கர் நாயகனின் மனிதாபிமான செயல்

நியூயார்க், நவ. 2– ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெஸ்ஸி அய்சன்பெர்க், தனது சிறுநீரகங்களில் ஒன்றை முன்பின் தெரியாத ஒருவருக்கு கொடையளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் ஆஸ்கர் நடிகரான ஜெஸ்ஸி அய்சன்பெர்க், நீண்ட காலமாக குருதிக்கொடை செய்து வருபவர் ஆவார்.

இந்நிலையில், தனது புதிய திரைப்படமான ‘நவ் யூ ஸீ மீ: நவ் யூ டோன்ட்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவர் அளித்த பேட்டி ஆச்சரியமடைய செய்துள்ளது. அவர் கூறுகையில், ‘சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே எனது சிறுநீரகங்களில் ஒன்றை கொடை செய்ய திட்டமிட்டிருந்தேன்.

அப்போது அது கைகூடவில்லை. சமீபத்தில், எனது மருத்துவர் நண்பர் ஒருவரின் உதவியுடன், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லேங்கோன் மருத்துவ மனையை அணுகி, சிறுநீரகக் கொடையளிக்க பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்ேடன். குருதிக் கொடை செய்வதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம், அடுத்த கட்டத்திற்கு செல்லத் தூண்டியது.

அமெரிக்காவில் உறுப்புக் கொடை செய்வோரின் பற்றாக்குறை மிக அதிகமாக இருப்பதை அறிந்த பிறகு, இந்த முடிவை எடுத்தேன். இதைச் செய்வது ஆபத்தில்லாதது, மிகவும் தேவையானது. இதைச் செய்ய மிகவும் ஆவலாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்பின் தெரியாதவருக்கு தனது ஒரு சிறுநீரகத்தை வழங்கிய அவருக்கு வரும் டிசம்பர் மாதம் சிறுநீரக கொடைக் கொடை அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

கல்வித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது: இலங்கை பிரதமர்

கொழும்பு, நவ. 2– கல்வித் துறையில் தொடர்ந்து பங்களிப்பை செய்து வரும் இந்தியாவின் சேவை மகத்தானது என்று இலங்கை பிரதமரும் கல்வித் துறை அமைச்சருமான ஹரிணி அமரசூர்யா தெரிவித்தார்.

இந்திய நிதி உதவியில் இலங்கை பொலன்னறு வையில் கட்டப்பட்ட மும்மொழிப் பள்ளிக் கட்டடத்தை இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூர்யாவும், இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் திறந்து வைத்தனர்.

இந்தப் பள்ளி கட்டடத்தை கட்ட இந்தியா ரூ.32 கோடி (இலங்கை ரூபாய்) நிதி உதவி அளித்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹரிணி அமரசூர்யா, ‘இலங்கையின் கல்வித் துறையில் கட்டமைப்பு, ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்தியா தனது பங்களிப்பாக பள்ளிக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்துவிட்டது. இனி, இலங்கை அரசுதான் இதனை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

இரு நாட்டு மக்களின் நலனுக்காக இந்தியாவும் – இலங்கையும் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்றும் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் செயல்படும் கல்வி நிலையங்களுக்கு எண்ம இயந்திரங்களையும், பகுதிநேர பயிற்சி மய்யங்களையும் உருவாக்கி இந்தியா வழங்கி உள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *