வாக்குரிமையை மட்டுமல்ல – குடியுரிமையையும் பறிக்கும் பேராபத்து!

சட்டப் போராட்டம் – உரிமைப் போராட்டம் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்!

தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்வைத்த கருத்துரு!

 

Contents

சென்னை, நவ.2  சிறப்புத் தீவிர மறு ஆய்வு (SIR): சட்டத்திற்கும், விதிகளுக்கும் புறம்பானது – இது வாக்குரிமையைப்  பறிக்கும் ‘சூழ்ச்சிப் பொறி’ என்றும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தற்காலிகமாக வேலைக்கு வந்திருப்போரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சட்டத்தில் இடமில்லை என்றும், வாக்குரிமையை மட்டுமல்ல – குடியுரிமையையும் பறிக்கும் பேராபத்து என்றும், சட்டப் போராட்டம் – உரிமைப் போராட்டம் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறு ஆய்வு நடவடிக்கை (SIR)  தொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (2.11.2025) கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்வைத்த சில சட்டக் குறிப்புகளும் – விளக்கங்களும் பின்வருமாறு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உள்பட, இக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்களுக்கு, வணக்கம்.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில்…

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு முன், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைச் ‘சிறப்பு தீவிர மறு ஆய்வு’க்கு (Special Intensive Revision – ‘SIR’)  உட்படுத்தும் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாட்டில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கும், சட்ட நிபுணர்கள், அனுபவம் வாய்ந்த மூத்த வழக்குரைஞர் பெருமக்களுக்கும், தேர்தலில் ஈடுபடும் பெரும்பாலான கட்சிகளுக்கும் மிகப்பெரிய அய்யம் தோன்றியுள்ளது; தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிர மறு ஆய்வு’ என்னும் நடவடிக்கையின் பார தூர விளைவுகளை யோசித்து, ‘இது சூழ்ச்சி வலையோ?’ என்ற அய்யம் மற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர், தக்க பரிகாரம் காண முனைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது

வருமுன்னர் காக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காலத்தே கடமையாற்றி, முதலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து, இது பற்றிக் கலந்தாலோசித்ததுடன், இந்தக் கருத்துடைய அனைத்துக் கட்சிகளையும் பரவலாக அழைத்துக் கலந்தாலோசித்து, தக்க பரிகாரம் காண முனைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது!

தேர்தல் ஆணையத்தின் இந்த ‘SIR’ என்ற முன்னெ டுப்பைப் பயன்படுத்தி, அவசர நடவடிக்கைகளைத் தமிழ்நாட்டில் முடுக்கிவிட முனைந்திருப்பது குறித்து, இப்படி ஒரு சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படக் காரணம் என்ன?

இறுதித் தீர்ப்பு இனிமேல் தான்
வர வேண்டும்!

இதே ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறு ஆய்வு (Special Intensive Revision – SIR)’ என்ற பெயரில், பீகாரில் ஒரே அடியாக 65 லட்சம் வாக்காளர்களைத் திடீரென வாக்குரிமை இழந்தவர்களாக்கியது போன்ற கொடுமையான சில நடவடிக்கைகள், அம் மாநிலத்தில் மக்கள் எதிர்ப்பை மிகப்பெரிய அளவில் உருவாக்கியதுடன், உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குக்கும் அடிகோலியது. உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை விமர்சித்து, பல ‘குட்டுக்கள்’ தந்து, ‘குறிப்பிட்ட தேதிக்குள் இதற்குரிய தக்க விளக்கமும், செயல்முறைத் தீர்வுகளும் தேவை’ என்று ஆணையிட்டதால், தேர்தல் ஆணையம் வேறு வழியின்றி, மறுபரிசீலனை செய்து, ஒரு திருத்தப் பட்டியலை அவசர மாகத் தயாரித்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. இறுதித் தீர்ப்பு இனிமேல் தான் வர வேண்டும்.

வாக்குப் பறிப்பினை ஏற்படுத்தும் ஒரு ‘சூழ்ச்சிப் பொறியாக’த் தமிழ்நாட்டிலும் அமைந்துவிடக் கூடாது!

இத்தகைய ‘சிறப்புத் தீவிர மறு ஆய்வு (Special Intensive Revision-SIR)’ நடைமுறை, தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் நுழைந்து, வாக்குப் பறிப்பினை ஏற்படுத்தும் ஒரு ‘சூழ்ச்சிப் பொறியாக’த் தமிழ்நாட்டிலும் அமைந்துவிடக் கூடாது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய, முக்கியமான, சட்டப்படியான செய்திகள் உள்ளன; சில கேள்விகளும் எழுகின்றன.

(i) இந்த ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறு ஆய்வு’ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல கூறு களுக்கு (Articles) முரணானது.

(ii) தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லை எது?

தேர்தல் ஆணையத்திற்கு விதிகளை (Rules) வகுக்க உரிமை உண்டா?

ஒன்றிய அரசு சட்ட முறைகளைப் பின்பற்றிச் செய்ய வேண்டிய ஒன்றை, தேர்தல் ஆணையம் செய்ய சட்டப்படி உரிமை உண்டா?

சட்டங்களிலோ, விதிகளிலோ (Acts & Rules) அனுமதி உண்டா?

(iii) தேர்தல் ஆணையத்தின் இந்தச் ‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு’ நடவடிக்கைகள்மூலம், வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்து, திரும்பி, தங்கள் வாழ்விடத்திற்கு – அந்தந்த மாநிலங்களுக்குச் செல்லவேண்டிய தற்காலிகமானவர்களைத் (Migrating Workers) தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடும் முயற்சிக்கு இடம் தர, சட்டங்களிலோ, விதிகளிலோ (Acts & Rules) அனுமதி உண்டா? நீதிமன்றங்களின் ஆணை என்ன?

இதனைச் சட்டபூர்வமாக அணுகி, மேலே காட்டிய பல வினாக்களுக்கு அடுத்து விளக்கமும் தர வேண்டியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுவதென்ன?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் (Articles) 324 முதல் 329 வரை தேர்தல்கள் தொடர்புடைய செய்திகள் இடம்பெறுகின்றன.

(iv)  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 327-இன் படி,

327. சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு நாடாளு மன்றத்திற்குள்ள அதிகாரம்:

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்ற ஈரவைகளில் எதற்கும் அல்லது ஒரு மாநிலச் சட்டமன்ற அவைகளின் அல்லது அதன் ஈரவைகளில் எதற்குமான தேர்தல்களைப் பொறுத்து அல்லது அவை தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் தயாரித்தல், தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல், அத்தகைய அவையை அல்லது அவைகளை உரியவாறு அமைப்பதற்குத் தேவையான பிற பொருட்பாடுகள் ஆகிய அனைத்தையும் பொறுத்து நாடாளுமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் வகைசெய்யலாம்.”

இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றாத பிரச்சி னைகளில், மாநில சட்டமன்றங்கள் சட்டம் கொண்டு வருவதற்கு அடுத்த கூறான 328 உரிமை வழங்குகிறது.

“328. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் பொறுத்து வகைசெய்வதற்கு அச் சட்டமன்றத்திற்குள்ள அதிகாரம்:

இந்த அரசமைப்பின் வகையங்களுக்கு உட்பட்டு, நாடாளுமன்றத்தால் இதன்பொருட்டு வகைசெய்யப்பட்டிராத அளவுக்கும், ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் அவைக்கான அல்லது அதன் ஈரவைகளில் எதற்குமான தேர்தல்களைப் பொறுத்து அல்லது அவை தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் தயாரித்தல், அத்தகைய அவையை அல்லது அவைகளை அமைப்பதற்குத் தேவையான பிற பொருட்பாடுகள் ஆகிய அனைத்தையும் பொறுத்து அந்த மாநிலச் சட்டமன்றம் அவ்வப்போது சட்டத்தினால் வகைசெய்யலாம்.”

இப்படி, மாநில சட்டமன்றங்களுக்கு, தங்களுடைய மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக முடி வெடுக்கவும், தேவையான பிற பொருட்பாடுகள் குறித்து முடிவெடுக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 328 (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) உரிமைகளை வழங்கித் தெளிவுபடுத்துகிறது!

அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டக் கூறு 327-இன் படி, தேர்தல் தொடர்பான சட்டம் செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் முடிவெடுக்காத விசயங்களுக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டக் கூறு 328-இன்படி மாநில சட்டமன்றங்களுக்குச் சட்டம் செய்ய அதிகாரம் உள்ளது. இது மாநில உரிமையை உறுதி செய்யும் முக்கியமான கூறு ஆகும்.

மாநில சட்டமன்றம், சட்டமியற்ற உரிமை படைத்த பொருட்பாடுகள் யாவை என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் 326 ஆம் கூறு தெளிவுபடுத்துகிறது.

“326. மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயதுவந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும்:

மக்களவைக்கும், ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவைக்குமான தேர்தல்கள் வயதுவந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும்; அதாவது இந்தியக் குடிமகனாகவும், உரிய சட்டமன்றம் இயற்றிய சட்டத்தாலோ அதன் வழியாலோ அதன் பொருட்டுக் குறித்திடப்படும் தேதியன்று பதினெட்டு வயதுக்குக் குறையாதவராகவும், இந்த அரசமைப்பின்படி அல்லது உரிய சட்டமன்றம் இயற்றிய சட்டம் எதன்படியும் குடியிருப்பின்மை (Non-residence), பித்துநிலை, குற்றம் புரிதல் அல்லது தேர்தலில் ஒழுங்கீனமான அல்லது சட்டமுரணான நடவடிக்கை காரணமாகப் பிறவாறு தகுதிக்கேடுறாதவராகவும் உள்ள ஒவ்வொருவரும், அத்தகைய தேர்தல் எதிலும் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு உரிமை கொண்டவர் ஆவார்.”

ஒருவருக்கு ஒரு மாநிலத்தில், அல்லது குறிப்பிட்ட தொகுதியில் வாக்கு உண்டா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தகுதிகளுள் ஒன்று அவரது ‘குடியிருப்புடைமை’ (Residence) நிலை ஆகும். குடியிருப்பின்மை (Non-Residence) என்பதை ஒரு தகுதிக் கேடு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுப்பதை நாம் இங்கு முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(‘குடியிருப்பவர்’, ‘சாதாரணமாக வசிப்பவர் (Ordinarily resident)’ தொடர்பான சட்ட விளக்கங்களும், தீர்ப்பும் பிற்பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.)

The Representation of People Act, 1950
சொல்வது என்ன?

(v) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 327, நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி உருவாக்கப்பட்டது தான் “The Representation of People Act, 1950” ஆகும். அதன் படி தான் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; அதன்படிதான் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. The Representation of People Act, 1950-இன் பிரிவுகளில் தான் தேர்தல் ஆணையத்தின் உரிமைகள், அதிகாரிகளின் நடத்தைகள் உள்ளிட்ட அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின்படியும், The Representation of People Act, 1950 (மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், 1950) என்பதன் விதிகளுக்கு உட்பட்டுமே தேர்தல் ஆணையம் செயல்பட முடியும்.

அதன்படி, Intensive Revision என்பதற்குத் தான் வழி உண்டே தவிர, Special Intensive Revision என்ற பெயரால் செய்ய தனி வழி கிடையாது. ஏனெனில், சட்டத்திலும், வாக்காளர் பதிவு விதிமுறைகளிலும் Special Intensive Revision என்ற சொல்லாடலே கிடையாது.

வழக்கமான “மறு ஆய்வு (Revision)” என்பதை ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு, அல்லது இடைத் தேர்த லுக்கு முன் செய்வது குறித்து, The Representation of People Act, 1950 சட்டத்தின் பிரிவு 21 கூறுகிறது.

சிறப்பு மறு ஆய்வு (Special revision) என்பது குறித்து பிரிவு 21 (3) கூறுகிறது.

  1. (3) Notwithstanding anything contained in sub-section (2), the Election Commission may at any time, for reasons to be recorded, direct a special revision of the electoral roll for any constituency or part of a constituency in such manner as it may think fit:

Provided that subject to the other provisions of this Act, the electoral roll for the constituency, as in force at the time of the issue of any such direction, shall continue to be in force until the completion of the special revision so directed.

இதன் படி, எந்த ஒரு தொகுதிக்கோ, அல்லது ஒரு தொகுதியின் குறிப்பிட்ட பகுதிக்கோ சிறப்பு மறு ஆய்வை மேற்கொள்ளலாமே தவிர, ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்திற்கே என்று ‘சிறப்பு’ ‘தீவிர’ ‘மறு ஆய்வு’ செய்யலாம் என்று எங்கேயும் சொல்லப்படவில்லை; சட்டத்தில் அதற்கு இடமே இல்லை.

இச் சட்டத்தின் பிரிவு 28-இன் படி, ஒன்றிய அரசுக்குத் தான் விதிகளை உருவாக்கும் அதிகாரம் உள்ளது. அப்படி, 1960-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட “The Registration of Electors Rules, 1960” என்பதிலும் Special Intensive Revision என்பதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

1960-ஆம் ஆண்டின் விதிமுறைகளில், பிரிவு 25-இன் படி,

  1. Revision of rolls – (1) The roll for every constituency shall be revised under sub-section (2) of section 21 either intensively or summarily or partly intensively and partly summarily, as the Election Commission may direct.

சட்ட விரோதம்

இதில் intensive revision, summary revision என்று தான் இருக்கிறது; அந்த தீவிர மறு ஆய்வு (intensive revision) என்பதும், வழக்கமான மறு ஆய்வுகளைப் (Routine Revision) பற்றிய விதி மட்டுமே! ஆக, The Registration of Electors Rules, 1960 விதிமுறைகளிலும், Special Intensive Revision என்று எதுவும் இல்லை. எனவே, அப்படிச் செய்தால், அது சட்ட விரோதம்.

BLO என்னும் புதிய ‘அதிகார’ மய்யம் உருவாக்கம்

இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், மேற்கண்ட விதிகளில் (Rules) இல்லாத ஒன்றை, 2006-ஆம் ஆண்டு தொடங்கி, 2022 ஆம் ஆண்டு வரையில் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களின் மூலமாகவே புதிதாக, வலுவானதாக உருவாக்கியிருக்கிறார்கள். அது “Booth Level Officers” என்ற அதிகார மய்யமாகும்.

வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களை நீக்குவதற்கான பரிந்துரையை இவர்கள் தான் Electoral Registration Officerக்குச் செய்கிறார்கள். இந்த ERO, AERO பதவிகள், அவர்களின் பணிகள் பற்றியும் தான் சட்டத்திலும், விதி முறைகளிலும் இருக்கின்றனவே தவிர, BLO என்ற புதிய இடைச் செருகல் பதவி, அதன் அதிகாரம் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பிறகு எங்கிருந்து இப்படி ஒரு நடைமுறை வருகிறது என்றால், The Representation of People Act, 1950 – பிரிவு13 (B)-இன் படி,

13 (B). Electoral registration officers

The electoral roll for each parliamentary constituency in the State of Jammu and Kashmir or in a Union territory not having a Legislative Assembly, each assembly constituency  and  each  Council constituency shall be  prepared  and revised by an electoral registration officer who shall be such officer of  Government or of a local authority as the Election Commission may, in  consultation  with  the  Government  of the  State  in which  the constituency is situated, designate or nominate in this behalf.

An electoral registration officer may, subject to any prescribed restrictions, employ such persons as he thinks fit for the preparation and revision of the electoral roll for the constituency.

இந்த 13(B)(2) என்னும் சட்டப் பிரிவு, ERO-க்களுக்கு உதவுவதற்காக AERO-க்களை உருவாக்க 13(C) மூலம் வாய்ப்பளிக்கிறது. ஆனால், புதிதாக BLO என்ற புதிய பதவியை 2006-இல் உருவாக்கியுள்ளனர். 2007 முதல் 2022, அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கான கடிதங்கள் மூலமாக, BLO–க்களின் பல்வேறு பணிகளைப் பட்டியலிடும் தேர்தல் ஆணையம், படிப்படியாக அப்படியொரு அதிகார மய்யத்தை நிலைப்படுத்தியிருக்கிறது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது, இடம் மாறிய (shifted) வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கும் அதிகாரமிக்க பதவியாக, மறைமுகமாக BLO-க்களை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதக் கடிதம் மூலம் தொடங்கி, 2022 அக்டோபர் வரையிலான கடிதம் வரை இந்த BLO-க்கள், “Identification of dead and shifted voters during period of continuous updation என்பதைச் செய்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய பகுதி தான், சட்டத்திலும், விதிமுறைகளிலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் இல்லாத, தற்காலிகமாகப் பணிக்கு வேறு மாநிலத்திற்குச் சென்றுள்ள Migrating workers-அய், அவர்களின் சொந்த மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலமாக, மற்றோரிடத்தில், மற்றொரு மாநிலத்தில் இணைப்பதற்கான சூழ்ச்சி மிகுந்த, ஆபத்தான புதிய வாய்ப்பைத் திணிக்கிறது. 

வெகு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழ்ச்சி!

10 ஆண்டுகளுக்கும் மேலாக மெல்ல மெல்லத் திணிக்கப்பட்ட ஒன்றை, இப்போது பயன்படுத்தி, வெகு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழ்ச்சி அரங்கேற்றப்படுகிறது.

சட்டப்படி தேர்தல் நடத்துவது, வாக்குரிமை தொடர்பான எந்த விதிகளையும் வகுக்க, ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதே தவிர, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஏற்கெனவே கண்டோம். அதற்குப் புறம்பாக, அடித்தளத்தில் ஓர் அதிகாரமிக்க புதிய பிரிவையே (BLOs) உருவாக்கி, அதற்குப் பொறுப்புகளை வழங்கியிருப்பதற்கு எந்தச் சட்ட அங்கீகாரமும் கிடையாது.

பிற மாநிலத்திலிருந்து தற்காலிகமாக இங்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களை இம் மாநில வாக்காளர்களாக அங்கீகரிக்க முடியுமா?

ஒருவர் ஒரு தொகுதியின் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்குரிய தகுதியைப் பற்றி, The Representation of People Act, 1950 பிரிவு 19 கூறுவது என்ன?

  1. Conditions of registration

Subject to the foregoing provisions of this Part, every person who —

(a)  is not less than eighteen years of age on the qualifying date, and

(b) is ordinarily resident in a constituency, shall be entitled to be registered in the electoral roll for that constituency.

“சாதாரணமாக வசிப்பவர்”
(Ordinarily resident) என்பவர் யார்?

அதில், ordinarily resident என்பதற்கான விளக்கம் அச் சட்டத்தின் பிரிவு 20-இல் தரப்பட்டுள்ளது.

  1. Meaning of “ordinarily resident”

(1) A person shall not be deemed to be ordinarily resident in a constituency on the ground only that he owns, or is in possession of, a dwelling house therein.

(1A) A person absenting himself temporarily from his place of ordinary residence shall not by reason thereof cease to be ordinarily resident therein.

அதாவது, ஒரு நபர் ஒரு தொகுதியில் ஒரு குடியிருப்பு வீட்டைச் சொந்தமாக வைத்திருக்கிறார் என்பதற்காகவோ, அல்லது உடைமையாக்கியிருக்கிறார் என்பதற்காகவோ மட்டுமே அவர் அந்தத் தொகுதியில் ‘சாதாரணமாக வசிப்பவராகக்’ கருதப்படமாட்டார்.

அதே போல, ஒரு நபர் தனது சாதாரண வசிப்பிடத்தி லிருந்து தற்காலிகமாக வெளியேறினால், அதன் காரணமாக அங்கு வழக்கமாக வசிப்பவர் என்ற தகுதி மறுக்கப்படாது என்று சொல்கிறது. (இவை தவிர, சிறப்பு அம்சங்களுக்காக உள்ள மற்ற பிரிவுகள் இங்கு அவசியமில்லை.)

மேலும், சாதாரணமாக வசிப்பவர் (Ordinarily Resident) என்ற வரையறை குறித்து, ஏதாவது சந்தேகம் ஏற்படின் அது குறித்துத் தேர்தல் ஆணையத்துடன் கலந்துரையாடி, அதனை வரையறை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு (ஒன்றிய அரசுக்கு) இச் சட்டம் வழங்குகிறது.

The Representation of People Act, 1950 சட்டத்தின் பிரிவு 28இன் படி, விதிகளை உருவாக்கக் கூடிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரிவு 28 (2) (அ)-இன் படி, “the determination of ordinary residence under sub-section (7) of section 20” என்று ‘சாதாரணமாக வசிப்பவர் (குடியிருப்பவர்)’ என்பதற்கான விதியை நிர்ணயிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளமை இங்கும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள் “The Registration of Electors Rules, 1960”-லும் ‘சாதாரணமாக வசிப்பவர்’ (ordinary residence) என்ப தற்கான வரையறை விதிகள் (Rules) ஒன்றிய அரசால் உருவாக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றம் தந்த
சட்ட வலிமை பெற்ற தீர்ப்பு!

உச்சநீதிமன்றம் உறுதி செய்து, இந்தியத் தேர்தல் ஆணையமும் ஏற்றுள்ள ஒரே ஒரு தீர்ப்பு மட்டுமே இது குறித்துக் கூறுகிறது. அந்த மிக முக்கியமான வழக்கு Dr.Manmohan Singh Vs Election Commission of India என்ற வழக்காகும். உச்சநீதிமன்றம் தந்த அத் தீர்ப்பு – சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகும்.

அத் தீர்ப்பு, டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான வழக்கில், கவுகாத்தி (அஸ்ஸாம்) உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 1999 ஆம் ஆண்டு  உச்சநீதிமன்றம் தந்த சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகும்.

1996 ஜனவரி 1 அன்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சட்டத்தின் 20 ஆம் பிரிவில் உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.

That the “Ordinary resident” in a constituency as mentioned in the Representation of the People Act, 1950 shall mean a habitual resident of that place or a resident as a matter of fact in regular, normal or usual course. It means an usual and normal redident of that place. The residence must be permanent in character and not temporary or casual. It must be as above for a considerable time; he must have the intention to dwell premanently. He must have a settled abode at that place for a considerable length of time for which a reasonable man will accept him as the resident of that state” என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

“‘சாதாரணமாக வசிப்பவர்’ என்பவர் அந்தப் பகுதியில் வழக்கமாக, பொதுவாக எப்போதும் வசிப்பவர் ஆவார். நிரந்தரமாக அவர் வசிக்கவேண்டும். அவரது வாசம் நிரந்தரமானதாக இருக்கவேண்டும். தற்காலிகமாக இருக்க முடியாது; ஏதோ வந்துவிட்டுப் போவதாக (casual) இருக்கக் கூடாது.’’

வெளிமாநிலத்தவரையோ, பிறரையோ, தற்காலிகமாக வேலை செய்பவர்களையோ, வந்துவிட்டுச் செல்ப வர்களையோ வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிட முடியுமா? என்றால்,  அப்படிச் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், இது தொடர்பான பிற சட்ட விதிகளுக்கும் முரணாகும்.

மாநில சட்டமன்றங்களுக்கே
உரிமை உண்டு!

இந்தியாவைப் பொறுத்தவரை ‘Ordinarily resident’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதற்கு இத் தீர்ப்பு ஒன்றே சரியான விளக்கம் தருகிறது. இது குறித்து வேறு விளக்கங்கள் தந்து நாடாளுமன்றத்தால் சட்டம் எதுவும் இயற்றப்படாத நிலையில், தேவையானால், இதற்கு விளக்கமளிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 326, 328 ஆகியவற்றின் படி உரிமை மாநில சட்டமன்றங்க ளுக்கே உண்டு.

சொந்த மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு வந்து, வேலை செய்துவிட்டு, மீண்டும் சொந்த மாநிலம் – ஊருக்குத் திரும்புகிறவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா? என்றால், தற்போதுள்ள

(1) சட்டம்

(2) விதிமுறைகள்

(3) உச்சநீதிமன்றத் தீர்ப்பு – இவற்றின்படி செய்ய முடியாது – கூடாது. மீறினால் சட்ட விரோதமாகும்!

பிற மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்து திரும்பு வோர் – வாக்காளர் பட்டியலில் ‘Ordinary resident’ என்ற தகுதி கூறி, அங்கே வாக்களிக்கவோ, தேர்தலில் நிற்கவோ முடியாது என்பதே சட்டப்படியாக இப்போதுள்ள நிலை.

அதை மாற்றி, வெறும் கடிதப் போக்குவரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பதவியையும் (BLO), தற்காலிகமாகப் பணிக்கு வந்தோரின் வாக்குரிமை குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தையும் நிரந்தரமானதாக்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், அதன் படி உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும், வாக்காளர் பதிவு விதி முறைகளுக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முற்றிலும் புறம்பானது. எனவே, வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வந்து தற்காலிகமாகத் தங்கியிருப்போரைத் தமிழ்நாட்டின் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் தேர்தல் ஆணையம் முனைந்தால் அது முழுமையான சட்ட விரோதமே ஆகும்.

நமது கருத்து:

மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டியுள்ள பல்வேறு அம்சங்களின் படி, சிறப்பு தீவிர மறு ஆய்வு என்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என்பது வெளிப்படை. அதில், ‘சாதாரணமாக வசிப்பவர்’ என்ற பெயரில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து, தற்காலிகமாகத் தங்கியிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் வழியில்லை.

இந்தச் செய்திகளை எடுத்துச் சொல்லி, நாம் மக்கள் மன்றத்திற்குத் தொடர் விழிப்புணர்வை, எழுத்து, பேச்சு, காட்சிகள்மூலம் அடைமழை போல செய்து வரவேண்டும்.

அதே நேரத்தில், தொடர் சட்டப் போராட்டத்திற்கும், நீதி வேண்டி நீதிமன்றத்திற்கும் சென்று அனைவரும் போராடவும் முன்வரவேண்டும். நம் உரிமைகளை மீட்க – சட்டப்பூர்வமான முயற்சிகளைச் செய்து இச் சதிகளை முறியடிக்கவேண்டும்.

இது வெறும் தேர்தல், வாக்குரிமைப் பறிப்பு தொடர்பானது மட்டுமே அல்ல; இதன் நீட்சி ‘குடியுரிமைப் பறிப்பு’ என்னும் பேராபத்துக்கு இட்டுச் செல்லும் என்பதை ஒரு போதும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

இதை எதிர்த்து, ஒரே ஒரு வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும், அமைப்பும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க விரும்பும் தனி நபர்களும் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்.

நமது கடமையாகும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள “இறை யாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு” என்றும் தத்துவங்களைக் காக்க வேண்டியது நமது கடமையாகும்.

மக்களை ஒருங்கிணைத்து உரிமைப் போராட்டம் மூலம் ஜனநாயகத்திற்குத் தக்க பாதுகாப்பளிக்க வேண்டும் என்பதனை இந்த அவைக்கும், நமது முதலமைச்சர் அவர்களுக்கும் முன்வைக்கிறோம்.

– இவ்வாறு  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *