போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசு மணி மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை வெ.இறையன்பு அறிவுறுத்தல்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மே 15  அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண் டும் என்று செய்தித் துறை அலுவ லர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கேட்டுக்கொண்டார்.

செய்தித் துறையின் கீழ் உள்ள சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள இராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு  நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து சுதந்திரப் போரட்ட வீரர்கள் அரங்கம், தமிழ்மொழித் தியாகிகள் அரங்கம், பெரியவர் எம்.பக்தவச்சலம் நினைவிடம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், காமராஜர் நினைவிடம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது,. காந்தி மண்டப வளாகத்தில் அதிக அளவில் நமது மண்ணிற்கேற்ற நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுத்தினார். காமராஜர் நினைவு இல்லம், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லம் மற்றும் ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பொது மக்கள் அதிக அளவில் பார்வையிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றியடைய பாடுபடும் மாணவ மாணவியர்கள் இதுபோன்ற அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் செய்தித்துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *