மணியம்மையார் 103 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வாசகி போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு திராவிட கழக பிரச்சார செயலர் வழக்குரைஞர் மானமிகு அ அருள்மொழி பேசிய உரை தக்காளி ரசம் வைக்கவா எம் ஏ படித்தாய்? என்ற தலைப்பில் Periyar Vision OTT இல் வெளியிடப்பட்டிருக்கிறது..
“இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல் அரசு வீட்டு வசதி வாரியம் என்பதை மாற்றி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயரிட்டு அத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படுகின்ற வீடுகளுக்கு பெண்கள் உரிமையாளராக இருப்பார்கள் என்று அறிவித்தது. 1989 இல் பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று கலைஞர் சட்டம் இயற்றினார். அதை பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி கலைஞர் அவர்களுக்கு மகளிர் உரிமை காத்த மாண்பாளர் என்ற பட்டத்தை கலைவாணர் கலையரங்க கூட்டத்தில் வழங்கினார். அந்தக் கூட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க சார்பில் வாசுகி அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அங்கே பேசிய வாசுகி அவர்கள் பெண்கள் உரிமைகளுக்காக அதிகமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மேலும் கோரிக்கைகள் எதுவும் வைக்க வேண்டாம் என்று என்னிடத்தில் கேட்டுக் கொண்டாலும் கூட நான் சில கோரிக்கைகளை வைப்பேன் என்று கூறி முக்கியமாக உபரி நில பட்டா வழங்கும் போது அது பெண்கள் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கலைஞர் தனது ஏற்பு உரையில் தோழர் வாசுகி அவர்கள் தனது அம்மா பாப்பா போலவே பிடிவாத குணம் கொண்டவராக திகழ்கிறார், அவருடைய தந்தை தோழர் உமாநாத் போலவே அரசியல் அடையாளமாகவும் விளங்கி வருகிறார் என்று பாராட்டினார்.
மணியம்மையார் அவர்கள் ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, உணவருந்த கழக பிரமுகர் ஒருவர் இல்லத்திற்கு சென்றிருந்தார். சாப்பாட்டுக்கு அவர்கள் அளித்த தக்காளி ரசத்தை சுவைத்த அம்மையார் ரசம் நன்றாக இருக்கிறது யார் தயாரித்தது என்று கேட்கிறார். என்னுடைய மகள் தான் இதை வைத்தது என்று பெருமையாக பெற்றவர்கள் கூற மணியம்மையார் அவர்கள் மகளிடம் என்னம்மா படித்திருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த பெண் எம் ஏ என்று பதில் உரைத்தார். மற்றவர்களாய் இருந்தால் அந்தப் பெண்ணை மேலும் ஊக்கப்படுத்தி ரசம் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி இருப்பார்கள். ஆனால் மணியம்மையார் ரசம் வைப்பதற்காகவா எம் ஏ படித்தாய்? என்று கோபமாய் கேட்டதை கோடிட்டு காட்டியும், அடுப்படியில் பெண்களின் கைகளில் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை வழங்க வேண்டும் என்று தந்தை பெரியார் பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை வகுத்த பேச்சையும் நினைவு கூர்ந்து அருள்மொழி தனது உரையை நிறைவு செய்தார்
T.பங்கஜம்
மாயவரம்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
