சென்னை, நவ.1– நீண்டகாலமாகப் பகையுள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியைப் பார்வையிடச் சென்ற வார்டு கவுன்சிலரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தது.
செங்கல்பட்டு மாவட் டம், இடக்கழிநாடு பேரூ ராட்சியின் 6ஆவது வார்டு உறுப்பினா் வீரராகவன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு:
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
எங்கள் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள பனையூா் பெரியகுப்பம் மற்றும் சின்னகுப்பம் இடையே நீண்டகால பகை இருந்து வருகிறது.
பெரியகுப்பத்தைச் சோ்ந்த நான், வார்டு உறுப்பினா் என்ற முறையில் சின்னகுப்பத்தில் நடந்த சாலை சீரமைப்புப் பணிகளை கடந்த செப். 15ஆம் தேதி பார்வையிடச் சென்றேன். இதனால், எங்களது ஊா் தலைவா்களான நாகராஜ், முத்து, தினகரன், அரிதாஸ், குமாரவேல், சேகா் மற்றும் மனோகா் ஆகியோர் என்னையும், எனது குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனா்.
இதனால், மரக்காணத் தில் உள்ள உறவினா் வீட்டில் வசித்து வருகிறேன். இதுதொடா்பாக செய்யூா் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் அவா்கள் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டப் பஞ்சாயத்து செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு உறுப்பினராக எனது பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.முருகவேல், கடந்த செப்.22ஆம் தேதி மனுதா ரரின் உறவினா் ஒருவா் இறந்துவிட்டார்.
அதில் பங்கேற்க மனுதாரரை கிராமத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறினார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, “வார்டு உறுப்பினருக்கே இந்த நிலைமையா?” என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி கருத்து:
“இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்து செய்பவா்கள் தங்களை உச்சநீதிமன்றம் என்று நினைத்து செயல் படுகின்றனா்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என நீதிபதி கருத்து தெரிவித்
தார்.
பின்னா், இந்த மனு வுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிடப்ப ட்டது. மேலும், ஊா் பஞ்சா யத்தார் 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
