சேலம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் பரபரப்பு
சென்னை, நவ.1– டிவி விவாதம் ஒன்றில் பட்டியலின மக்கள் குறித்து அதிமுக அய்டி விங் பொறுப்பாளரான கோவை சத்யன் என்பவர் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக சார்பில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவும் இல்லை. இதையடுத்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஒளிப்படத்தை கிழித்து நேற்று (31.10.2025) போராட்டம் நடத்தினர்.
இதேபோல கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப் புலிகள் கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் போது, பட்டியலின மக்களை இழிவாக பேசிய கோவை சத்யன் மீது எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பீகார் தேர்தல் பிரசாரத்தில் தமிழர்களை கேவலமாக பேசி நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதே போல திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் எடப்பாடி உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாழ்த்தப்பட்டோர் மக்களை ஏளனமாகவும், அவதூறாகவும் பேசிய சத்யனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
