சென்னை, நவ. 1- தமிழ்நாட்டில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி யுள்ளது. ஓஆர்எஸ் என்றால் ஓரல் ரீஹை டிரேஷன் சொல்யூஷன் என்பதாகும்.
வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும் போது ஓஆர்எஸ் வழங்கப்படுகிறது. உலக பொது சுகாதார அமைப்பு, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் பெயர் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஓஆர்எஸ் என்ற பெயரில் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் பானங்களை ஒன்றிய அரசு கடந்த வாரம் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஓஆர்எஸ் என்ற பெயரில் போலி பானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டங்களில் உள்ள மருந்த கம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் ORSL, ORSL PLUS, ORS FIT என்ற பெயர்களில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக பொது சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் அங்கீகாரம் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் ஓஆர்எஸ்எல் என்று பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்ட போலியான பானங்கள் பல்வேறு வண்ண நிற பெட்டிகளில் விற்பனை யாகி வந்தது. அதில் கடைசியில் கீழ் பகுதியில் இவை ஓஆர்எஸ் இல்லை என்றும் அச்சிடப்பட்டுள்ளது. ஓஆர்எஸ்எல் என்ற கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஓஆர்எஸ் என்பது குளுக்கோஸ், சோடியம், பொட்டாசியம், பிற எலக்ட்ரோலைட்டுகளின் கலவையாகும். இது தூய நீரில் கரைக்கப்படும் போது உடலில் இழந்த திரவங்கள், தாதுக்களை விரைவாக நிரப்பும் ஒரு கரைசலை உருவாக்குகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக ஏற்படும் நீரிழப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உப்பும் சர்க்கரையும் கலந்த கலவைதான் ஓஆர்எஸ் கரைசல் ஆகும். எனவே இதை வீட்டிலேயே தயாரிக்கலாம் என்கிறார்கள். இந்த கரைசல் தயாரித்த 24 நேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். உடலில் உள்ள நீரிழப்பை சமன் செய்ய இது உதவுகிறது.
