சென்னை, நவ.1– தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களுக்கான சேவைகளை இணையவழியில் வழங்கும் விதமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தேர்வாணையத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களை https://rtionline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் இந்த இணையவழி சேவையை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களை தேர்வாணையத்திற்கு கைமுறையாக தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வால்பாறைக்கு இ-பாஸ் அமல்
தமிழ்நாடு அரசுக்கு
உயர்நீதிமன்றம் பாராட்டு
தமிழ்நாடு அரசுக்கு
உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை, நவ.1– வன சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதுபோல் வால்பாறையிலும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறையை அமல்படுத்த உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் சீனிவாசன், வால்பாறையில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி துரிதமாக செயல்பட்ட அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த நடைமுறையை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
7 அய்ஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை, நவ.1– தமிழ்நாட்டில் 7 அய்ஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று (31.10.2025) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: இரா.கண்ணன் (கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குநர்) தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளர் மற்றும் தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். சா.ப.அம்ரித் (சென்னை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்) கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ச.கவிதா (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.முத்துக்குமரன் (தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, இணை இயக்குநர் – பேரிடர் மேலாண்மை) தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.எஸ்.லீலா அலெக்ஸ் (தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனம்-சிப்காட் பொது மேலாளர்) – சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மு.வீரப்பன் (சென்னை ஒழுங்கு நட வடிக்கை தீர்ப்பாயம், ஆணையர்) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இரா.ரேவதி (தனி மாவட்ட வருவாய் அலுவலர்-நில எடுப்பு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், திருநெல்வேலி) உயர்கல்வி துறை அரசு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
