அமைச்சர் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, நவ.1– 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். திராவிட மாடலின் பார்ட் 2 தொடரும் என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி உறுதி கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
“சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்அய்ஆர்) நடவடிக்கையை திமுக எப்போதுமே ஏற்றுக்கொள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு நாம் வீடு, ரேசன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது.
ஒரு வாக்காளர் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது இந்திய குடியுரிமை சட்டம் 1955. ஆனால் இந்திய குடிமகனா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்தமாக நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
வெளிமாநில தொழிலாளர்கள்
பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று இவர்களின் எண்ணிக்கை லட்சத்திலிருந்து கோடிக்கணக்கில் வந்துள்ளது,… இவர்கள் பண்டிகை காலங்களின்போது அவர்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்..
மேலும் ஒரே இடத்தில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களுக்கும் மாறி மாறி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாது. இப்படியிருக்கும்போது, இவர்களுக்கு இங்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தால், அவர்கள் தங்கள் மாநிலத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப வாக்களிப்
பார்கள். தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை, ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. நிரந்தரவாசிகளால்தான் வாக்களிக்க முடியும்.
பாஜக காணாமல் போகும்
ஆனால், அவசர அவசரமாக தேர்தல் ஆணையத்திக் கொண்டு தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்கிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் எதிர்த்து வருகிறார். நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக தேவையில்லாத கருத்துகளை சொல்லி வருகிறார்.. வரும் 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து பாஜக காணாமல் போகும். திமுகவின் 2.0 ஆட்சி மீண்டும் தொடரும்”
இவ்வாறு கூறினார்.
