மூடநம்பிக்கைகளால் மூழ்கும் புதுடில்லி-பேராசிரியர் மு.நாகநாதன்

5 Min Read

காற்று மாசடைதல் உலகின் பெரும் கேடாக அமைந்து, ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து வருகிறது.

2023ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி உலகில் மாசு காற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

2023 ஆம் ஆண்டில் 20 இலட்சம் நபர்கள் இந்தியா வில் இறந்துள்ளனர்.

உலகச் சுகாதார நிறுவனம் காற்று மாசடைதல் அளவைக் கணக்கீடு செய்து வெளியிட்டு வருகிறது.

காற்றில் இருக்கும் மாசு அளவு உலகளாவிய சராசரி அளவைவிட இந்தியாவின் பல நகரங்களில் அதிகரித்து வருகிறது என்பதை உலகச் சுகாதார அமைப்பு உட்பட பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உயிரைப் பறிக்கும் காற்று மாசு இந்தியாவின் பல நகரங்களில் பெருகி வரும் அபாயச் சூழலில்; தீபாவளிக்கு முன்பும் பின்பும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசு அளவு பெருகி குழந்தைகள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

உலகின் இரண்டாவது அதிகக் காற்று  மாசடைந்த  நகரமாகப் புதுடில்லி உள்ளது.  இதை மனதில் வைத்துக் கொண்டுதான் 2020 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனங்கள் தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் தீபாவளி காலத்தில் பட்டாசுகள் வெடிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்றுத் தீர்ப்பாயம் பட்டாசு வெடிப்பதைத் தடை செய்தது.

உச்ச நீதிமன்றம் 2024இல் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. 2025இல் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞரே பட்டாசு வெடிக்கும் தடைக்கு விதிவிலக்குக் கோரி நீண்ட விண்ணப்பத்தை அளித்தார்.

கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன

இதை ஏற்று நீதியரசர் கவாய் தலைமையில் நீதியரசர் வினோத் சந்திரன் உள்ளடங்கிய அமர்வு நேரக்கட்டுப்பாடு உட்பட  பல கட்டுப்பாடுகளை விதித்துப் பசுமை பட்டாசுகளை மட்டுமே, இரண்டு நாள்கள் மட்டுமே  வெடிக்க அனுமதி அளித்தது.

அலுவல் காரணமாகத் தீபாவளி முடிந்து அக்டோபர் 23-25 வரை புதுடில்லியில் தங்கியிருந்தேன். இரவு எட்டு மணியளவில் விமானம் புதுடில்லியில் தரையிறங்கும் போது எங்கே பார்த்தாலும் வண்ண வண்ணப் பட்டாசுகள் வெடிப்பதைக் காண முடிந்தது. உச்ச நீதிமன்றம் அமர்வின் தீர்ப்பு விதித்த கட்டுப்பாடுகள் புதுடில்லியில் காற்றில் மிதந்ததைக் காண முடிந்தது.

இதன் தொடர்பாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில ஏடும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில ஏடும் அக்டோபர் 23, 24 அன்றைய பதிப்புகளில் தீபாவளி பட்டாசுகள் ஏற்படுத்திய பாதிப்புகளைப் புள்ளி விவரங்களைக் கொண்டு வரைபடங்களுடன் வெளியிட்டன.

இதன் தொடர்பாக, புதுடில்லி மட்டுமல்லாமல், அரியானா போன்ற புதுடில்லி அருகில் உள்ள மாநிலங்களின் உள்ள நகரங்களில் ஏற்பட்ட காற்று மாசுகளைப் பற்றிப் பல செய்திகளை வெளியிட்டன.

தீபாவளி காற்று மாசு முற்றிலும் நீக்கவில்லை, பல இலட்ச ரூபாய் செலவில் செயற்கை முறையில் மழையை வரவழைத்துக் காற்று மாசினைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு அதிலும் வெற்றி அடையவில்லை என்று செய்திகள் இன்று (29.10.2025) வெளியாகி உள்ளன.

மேலும், 23 அக்டோபர் அன்று புதுடில்லியின் பாஜக முதலமைச்சர் ரேகா யமுனை நதியில் சுற்றுச்சூழல் கேட்டினால் பாதிப்புக்குள்ளாகி ஆற்று நீரின் மேல் பகுதியில் படர்ந்துள்ள மாசு நுரையை  நீக்கும் நடவடிக் கையைப் பார்வையிட்டார் என்ற செய்திப் படங்களோடு புதுடில்லியின் அனைத்து ஏடுகளிலும் வெளி வந்தன.

மோடியின் அரசியல் ஆதாய பூசைக்கு பல இலட்சம் செலவு

காற்று மாசு, ஆற்று மாசு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதே புதுடில்லி நகரில் மாசால் பெருமளவில் மக்கள் திண்டாடி வரும் வேளையில் பிரதமர் மோடி  ‘சத் பூசை’   (சத் பூசை    என்பது சூரியக் கடவுளான சூரியனுக்கும் அவரது மனைவி உஷாவிற்கும் (சத்தி தேவி) நன்றி தெரிவிக்கும் ஒரு இந்து விழா)  நாளான 28.10.2025  அன்று யமுனை நதியில் குளிப்பார் என்ற  அறிவிப்பும் வெளி வந்தது.

யமுனை நதி போன்று பல இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் செயற்கை நீரமைப்பை உருவாக்கி, அந்த நீரில்   குளியல் செய்து பிரதமர் மோடி பூசை அரசியல்  செய்வதையும் ஆம் ஆத்மி கண்டித்துள்ளது.

இந்தியா பொருளாதாரத்தில் பல சரிவுகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் நாள்தோறும் இந்தியாவின் மீது அறிவிக்கும் அதிரடி வரி நடவடிக்கைகள், அதானி மீது அமெரிக்க ஏடுகள் ஆதாரங்களுடன் வெளியிடும் பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை மடைமாற்றம் செய்வதற்காக இதுபோன்ற சத் பூசைகளைத் புதுடில்லியில் அமைந்துள்ள இரட்டை எஞ்சின் பாஜக அரசு செய்து வருகிறது என்பதை இந்நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகின்றன.

உச்சநீதிமன்றமும்
விதி விலக்கு அளிப்பதா?

சுற்றுச்சூழல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிப் பல நாள்கள் பள்ளிகளை மூடும் சூழல் ஏற்படுகின்ற நிலையில் உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி அளிக்கலாமா? உச்ச நீதிமன்றம் அனுமதித்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து பல நாட்களாக மீறப்பட்டே வருகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளில் 51(A)(G), ‘உயிரினங்கள் மீது இரக்கம் காட்டுவதற்கும், வனவிலங்குகள், நதிகள், ஏரிகள், காடுகள் முதலியவற்றைப் பாதுகாத்து அங்குள்ள இயற்கைச் சூழலைப் போற்ற வேண்டும்’ (To protect and improve the natural environment including forests, lakes, rivers, and wild life, and to have compassion with living creatures) என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமர், இந்த அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக் கடமையை மீறலாமா?

மக்களை மத இருளில் மாய்க்கலாமா?

உச்ச நீதிமன்றமும் பட்டாசு வெடிப்புகளுக்கு விதி விலக்கு அளிக்கலாமா?

உண்மையான மக்கள்
விடுதலை எப்போது?

தீபாவளி ஒரு மூட நம்பிக்கை விழா என்று தந்தை பெரியார் 1930ஆம் ஆண்டுகளிலேயே குறிப்பிட்டுப் பட்டாசுகளை வெடித்துக் காசைக் கரியாக்காதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்.

ஆனால் இன்றோ காசு கரியாகி, கரி மாசாகி, நாட்டின் தலைநகரான புதுடில்லியை மாசு நிறைந்த நகரமாகவே மாற்றிவிட்டது.

என்று முடியும் இந்த மூடநம்பிக்கைகள்?

என்று தணியும் இந்தக் காற்று, நீர், நில மாசுகள்.

அன்றுதான் இந்தியாவின் உண்மையான மக்கள் விடுதலையைக் காண முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *