தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா?
பிரதமர் பொறுப்புக்கான மாண்பு இழந்து மோடி பேசுவதா?
சென்னை, நவ.1– பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக ஆட்சி துன்புறுத்துகிறது என்று குற்றம் சாட்டினார். அவரது பேச்சைக் கண்டித்துத் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (31.10.2025) சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
‘‘இந்த நாட்டிலுள்ள அனை வருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று, ஒரு தமிழனாக வேத னையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா, பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.வி னர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும், பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி எம்.பி

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளு மன்ற தி.மு.க. உறுப்பினருமான கனிமொழி தனது ‘எக்ஸ்’ பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.
ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடு மைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழி லாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டிற்கு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்கு வார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்ய முடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்.
இவ்வாறு கனிமொழி எம்.பி., தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டு இருக்கும் ‘எக்ஸ்’ பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்க ளில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஒரு மக்களாட்சியின் தலைவராக, அனைத்து மாநிலங்களையும், அனைத்து மக்களையும் சமமாகக் கையாளுவது பிரதமரின் அடிப்படை பொறுப்பாகும். ஆனால், தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்களை பழித்துக் கூறுவது அரசியல் நாகரிகத்துக்கும், ஜன நாயகக் கொள்கைக்கும் எதிரானது.
தமிழர்கள், உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள். அவர்களை குறைத்து பேசுவது, தமிழ் மக்களின் மனதை மட்டும் அல்லாது, இந்திய ஒற்றுமையையே பாதிக்கும் வகை யில் உள்ளது.
தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்நிலையிலேயே, தமிழர்களின் மீதான அவதூறுகருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக தமது கருத்துகளை திரும்பப்பெ ற்று, தமிழர்களிடம் தனது பேச்சுக் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரிவினை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
மாநிலங்களின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தை யும் பாதுகாப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பிரதமர் செயல்பட வேண்டும்.
தமிழர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்தவித செய லும், எந்தவித கருத்தும் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:
தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் நேசிப்பது போல வேஷம் கட்டும் பிரதமர் நரேந்திர மோடி வேறு மாநிலங்களில் தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் வன்மம் கக்குவதையும், அவதூறு பொழிவதையும், இழிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஒடிசா சட்டமன்ற தேர்தல்களின் போது ஒரு தமிழன் ஒடிசாவை ஆளலாமா என்று இனவெறி கிளப்பினார். பூரி ஜெகநாதர் கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அவதூறு செய்து இழிவுபடுத்தினார். தற்போது, பீகாரில் தேர்தல் ஆதாயத்திற்காக பீகாரிகள் தமிழ்நாட்டில் சித்தரவதை செய்யப்படுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கு உரிய சட்டப்படியான நிதிகளை வழங்க மறுப்பது என்பதில் தொடங்கி இப்போது தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தும் நிலைக்கும் அதன் மூலம் இதர மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது பகை உணர்வை தூண்டுவதற்கும் முயற்சிக்கிறார்.
தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத இயலாமையில் சில நேரங்களில் இஸ்லாமியர்கள், சில நேரங்களில் கிறித்தவர்கள், சில நேரங்களில் அந்நிய நாட்டினர் என்று பகை உணர்வை தூண்டிய நரேந்திர மோடி தற்போது இனரீதியாக தமிழ்நாட்டின் மீது இந்த வன்மத் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்.
பிரதமரின் இந்தப் பேச்சு அவர் வகிக்கும் பத விக்கு பொருத்தமானதல்ல என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நரேந்திர மோடியின் இந்தப் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி பொய் பிரச்சாரம் செய்கிறார்.
பாஜகவினர் தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும் கருப்பர்கள் எனக்கூறி தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.
பீகாரில் ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் இங்கே வரப்போகிறார்கள்?; வேலை கேட்டு வரும் பீகார் மக்களுக்கு இங்கு வேலை கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கான நிதி, கல்விக்கான நிதி என மாநிலத்திற்கான எந்த நிதியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை.
திமுக கூட்டணி பெற்ற வெற்றி, திமுக ஆட்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பிரதமர் பேசியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் செய்கிறார். பாஜகவினர் பொய்களுக்கு தமிழ்நாடு மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள், பீகார் மக்களும் பாஜகவின் பொய்களை அறிவர்.
பீகார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழில் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
நாங்கள் ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். ஹிந்திக்காரர்களுக்கு எதிரி அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியதற்குத் திமுக கண்டனம் தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
