மழையின் ஏக்கம்

சூ

ல் கொண்ட மேகம், துடிக்கிறது. பாரம் தாங்க மாட்டாமல், என் செய்யும்? நான் வெளியேறினால்தான் வேதனை தீருகிறது. மேகத் திரளுக்கு வருகிறேன், பொழிகிறேன். வாழ்த்துகிறீர்; சில வேளை; தூற்றுகிறீர் சில சமயம். வாழ்த்தும் போது தேனாகவும் மாறிட முடியாது.   தூற்றும் போது மீண்டும் மேகத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டுவிடவும் இயலாது.

கீழே வருகிறேன்! வரவேற்பு பெறுகிறேன்! ஆனால் நான் செல்ல சரியான பாதை உண்டா? இல்லை! தங்கிட முறையான இடங்கள் உள்ளனவா? கிடையாது! விரிந்து, நெடுந்தூரம் பறந்து கிடக்கும் வழியை நாடி செல்கிறேன். ஆறு என்கிறீர்களே அதனைத்தான் கூறுகிறேன். அதனை ஒழுங்குற வைத்திருந்தால் எனக்கு இல்லை தொல்லை. ஊருக்கும் ஆபத்து இல்லை. மண்மேடுகள் தடுக்கின்றன! என் வேகத்தைத் தடுத்து, தேக்கி வைத்துப் பயன் பெறலாம் – அதனையும் செய்கிறீர்கள் இல்லை. ஏரி என்கிறீர்கள் – கரை காப்பளிக்கவில்லை. குளம் என்கிறீர்கள் என் வேகம் பொறாமல் குமுறி உடைபட்டுப் போகிறது, நான் என்ன செய்வேன்?  என்னை வாழ்த்தி வரவேற்றுப் பயன் பெற்ற மக்கள் ஒரு ஊர் என்றால், அதற்கு உள்ளேயும் வெளிப்புறங்களிலும் நான் வந்து இருக்க ஏரிகளையும், குளங்களையும் அமைத்து வைத்திருந்தனர். இப்போது? ஏரிகள் தூர்க்கப்பட்டுப் புது ஊர்களாக்கப் பட்டுவிடுகின்றன! ஆற்றோரம் குடில்கள் மயமாகிவிடுகின்றன! கடல் ஒன்றே அன்று போல் இன்றும் அளித்திடுது அடைக்கலம்.  ஊர்களிலே எனக்கென்று முன்பு இருந்த இடமெல்லாம் பறித்துக்கொண்டீர்கள், ஒவ்வொன் றாய், என் செய்வேன்? ஒழுங்காகத் தங்கி இருக்க இடமில்லை! கண்ட இடத்தில் நடமாடும் காலம் வந்தது, அதனால் காண்கிறீர் அழிவு. என் மீதோ குற்றம்! காரணம் புரியாமல் கடு மொழி பேசுகிறீர், கவலை நான் கொள்ள, கருத்தற்றோ உள்ளேன்? குறைமதியாளர் கூற்று அதுவென்று தள்ளிவிடுகிறேன். நிறை மதியாளர்கள் எம் நீடு புகழ் புலவோர்கள் வாழ்த்திப் பாடியுள்ள பாடல் வகை எல்லாம் நான் எண்ணி மகிழ்ந்து உலவுகின்றேன்.

(மழையின் ஏக்கம் குறித்து அறிஞர் அண்ணா திராவிடநாடு – பொங்கல் மலர் – 1961)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *