திருவாங்கூர் சமஸ்தானம் (8) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’

“தோள் சீலைப் போராட்டம்” என்ற மாபெரும் மனித (பெண்களின்) உரிமைப் போராட்டம் சுமார் 37 ஆண்டுகள் நடந்தது. பார்ப்பனர்கள் அதற்கு எப்படியெல்லாம் தடைக் கற்களாக இருந்தார்கள் என்று வரலாற்றை ஆய்வு செய்தால், கீழ் ஜாதிக்காரர்களுக்கு பார்ப்பனர்கள் கொடுத்தத் தொல்லைகளை நாம் அறிய முடியும். கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து, இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசு 1858ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. நவம்பர் 1, 1858 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியார் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ‘‘எங்கள் நம்பிக்கைகளை எங்கள் ஆளுகைக்கு உட்பட்ட  எவர் மீதும் திணிக்க மாட்டோம். ‘‘மத நம்பிக்கை அல்லது வழக்கத்தின் காரணமாக யாருக்கும் சலுகை காட்டப்பட மாட்டாது’’.  யாரும் துன்புறுத்தப் படமாட்டார்கள் அல்லது யாரும் நிம்மதி இழக்கப்பட செய்யமாட்டார்கள். அனைவருக்கும் சமமான, பாகுபாடில்லாத சட்டப்பாதுகாப்பு வழங்கப்படும்’’ என்றது அந்தப் பிரகடனம்.

அந்தப் பிரகடனத்தில் இருந்த “சமமான பாகுபாடில்லாத சட்டப் பாதுகாப்பு’’ என்பதைக் கண்டுக் கொள்ளாமல், ‘‘மத நம்பிக்கை அல்லது வழக்கத்தின் காரணமாக சலுகைக் காட்டப்பட மாட்டாது’’ என்ற பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை வைத்து, ஜாதிக் கலவரத்தை மேல் ஜாதி நாயர்கள், நம்பூதிரிகள் தொடர்ந்தனர். மேல் ஜாதிக்காரர்கள் மகாராணியின் பிரகடனத்தை பெண்களை வழக்கம் போல் இழிவுபடுத்துவதற்கான உரிமமாக மாற்றிக்கொண்டனர். கீழ் ஜாதிப் பெண்கள் தோள் சீலைப் போராட்டத்தைத் தொடர்ந்ததை அடக்க மேல் ஜாதிக்காரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் கீழ்ஜாதி நாடார்களுக்கும் அவர்கள் வீட்டுப் பெண்களுக்கும், நாயர்களுக்கும்  இைடயே பெரும் கலவரங்கள் நடந்தன. பல ஊர்களில் நாடார் பெண்கள் துகிலுரியப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும் தொடர்ந்தது.  திருவாங்கூர் அரசாங்கம் சட்டப்பூர்வ அணுகுமுறைப்படி ‘நாடார்கள் தோள் சீலை அணிவது குற்றம்’ என்று விளக்கப்பட்டது. தோள் சீலை அணிவதை நிறுத்தாத நாடார் பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று அரசாங்கம் அறிவுறுத்தியது. (29.8.1859 தோள் சீலை அணிந்த குற்றத்திற்காக  பத்மநாபபுரம் நீதிமன்றம் நாடார் பெண்களுக்கு நான்கு மாதம் சிறைத் தண்டனை விதித்தது) நாடார் பெண்கள் தோள் சீலை அணிவதை கண்காணிக்க அரசு ராணுவத்தை அழைத்தது. அரசு ஓர் உத்தரவையும் போட்டது.

‘‘இப்போது வரை இருந்துவரும் வழக்கத்திற்கு மாறாக சில நாடார் பெண்கள் தோள் சீலை அணிவதால் உயர்
ஜாதிக்காரர்களுக்கும், சாணார்களுக்கும் இடையே மோதல் உருவாகி வருவதால் அந்தப் புராதன வழக்கத்தை நிறுத்த விரும்புகிறவர்கள், அது குறித்து ஒரு மனுவை அரசாங்கத்திற்கு அளித்து, அரசாங்கத்தின் உத்தரவிற்கேற்ப நடப்பதுதான் சரியான வழியாக இருக்கும். அதிகாரப்பூர்வ அனுமதியில்லாமல் புராதன வழக்கத்தை மீறுதல் ‘தவறு’ என்பது தெளிவாக இருப்பதால், எதிர்காலத்தில் அப்படி யார் மீறினாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என இவ்வுத்தரவின் மூலம் அறிவிக்கப்படுகிறது; சாணார்கள் இதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டியது முக்கியம்’’ என்பதே அந்த உத்தரவு.

இந்த உத்தரவு திருவாங்கூர் சமஸ்தான திவான் (தஞ்சாவூர் பார்ப்பனர்) மாதவராவ் பெயரில் வெளியானது. மராத்தி மொழி பேசும் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்ப்பனர் தோள் சீலைப் பிரச்சினையில், பிற்போக்குத் தனமான கருத்தியலோடு ஆரம்பம் முதலே எதிர்த்தவர். நம்பூதிரிப் பார்ப்பனர்களின் எண்ணத்திற்கு துணை நின்று ஆங்கிலேய அரசின் ஆணைகளை முடிந்தளவு கடைசிவரைத் தவிர்க்கப் பார்த்தவர் இவர். மாதவராவ், ‘‘அய்ரோப்பாவின்  மிஷனரிகள் சில இடங்களில் மாற்றமேற்படுத்த நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் சில தனிநபர்கள் மதப்பரப்பாளர்கள் முன்பு அதைச் செய்தார்களே ஒழிய பல இடங்களில் அந்த முயற்சியில் தோற்று விட்டனர். ஆடைகளில் மாற்றம் செய்வது, குறிப்பாக பெண்கள் விசயத்தில் சாத்தியமில்லாத ஒன்று என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். நாடார் பெண்கள் மார்பகங்களை தோள் சீலையால் மறைப்பதற்கு எதிரான தடை தொடர வேண்டும்” என்று பேசினார். 3-2-1829, முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்த பிரச்சினை எழுந்தபோது திருவாங்கூர் அரசாங்கம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

“தோள் சீலையை வைத்து மார்பகங்களை மறைக்க நாடார் பெண்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது” என்பதே   அந்த உத்தரவு. அப்பொழுதும் இந்த பிரச்சினையில் பெரும் சமூகப் பதற்றம் உருவானது. 1829இல் வெளியான அந்த உத்தரவு, ‘‘உத்தரவுகளுக்கும், சரியான புராதன வழக்கங்களுக்கும் எதிராக துணியை அவர்களின் தோள்களுக்கு மேல் அணிவதன் விளைவாக நாட்டில் கலவரங்கள் ஏற்படுகின்றன” என்று குறிப்பிட்டது.

ஆனால் ஆங்கிலேய அரசு கொடுத்த அழுத்தத்தால் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறியவர்களுக்கு ஒரு சலுகை அளித்தது. சாணார் பெண்கள் தோள் சீலைக்குப் பதிலாக “குப்பாயம்” எனப்படும் சிறிய இறுக்கமான ஜாக்கட் போன்ற உடையை அணியலாம். தோள் சீலை அணியும் பொழுது சாணார் பெண்களை உயர் ஜாதிப் பெண்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அதனால் மாப்ளா முஸ்லிம் பெண்கள் அணியும் குப்பாயம் உடையை மேலாடையாக அணியலாம் என்ற உரிமையை பெண்களுக்கு அளித்தது. 1812இல் ஜான் மன்றோ என்ற ஆங்கிலேயர் திருவாங்கூரின் திவானாகவும், மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரதிநிதியாகவும் திருவாங்கூர் நாட்டில் இருந்தார். தோள் சீலைத் தொடர்பாக 1812இல் திவான் ஜான் மன்றோ ஒரு உத்தரவை போட்டார்.

“கிருத்துவர்களாக மாறிவிட்ட பெண்கள், கிருத்துவ மதத்தின் கண்ணியத்திற்கு ஏற்பவும், கிருத்துவ நாடுகளில் இருக்கும் வழக்கத்திற்கு ஏற்பவும் தோள் சீலை அணியலாம். அப்படி ஆடை அணியும் கிருத்துவப் பெண்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று இங்ஙனம் நாம் உத்தரவிடுகிறோம்” என்பதே அந்த உத்தரவு. ஆனால் மன்றோவின் உத்தரவு,  ஜாதிவேறுபாடுகளை அழித்து எல்லாவற்றையும் தீட்டாக்கி விடும் என்று நம்பூதிரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பு மன்றோவாலேயே மாற்றம் பெற்றது. அவரே தோள் சீலைக்குப் பதில், குப்பாயம் என்று பின்னாளில் தன் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை வந்தது.  தோள்சீலை எனும் மார்பை மறைக்கும் மேல் துணி ஆதிக்க ஜாதியினரின் தனி உரிமையாக மாறிப்போனது. இது நடந்து 40ஆண்டுகள் கடந்த பின்தான் திவான் மாதவராவ் என்ற பார்ப்பனர் காலத்தில் மீண்டும் பெரிதாக எழுந்தது.

மாதவராவ் திவானாக இருந்த காலக் கட்டத்தில், திருவாங்கூருக்கு பிரிட்டிஷ் பிரதிநிதியாக ெலப்டிெனன்ட் ஜெனரல் வில்லியம் கல்லன் என்பவர் பொறுப்பில் இருந்தார். அவர் பார்ப்பனர்களுக்கும், நாயர்களுக்கும் ஆதரவான நிலையினையே எடுத்தார். திவான் மாதவராவ் எடுக்கும் முடிவுகளை ஆதரித்து மெட்ராஸ் கவர்னருக்குக் கடிதங்கள் எழுதினார். 13.1.1859 அன்றி மெட்ராஸ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘சூத்திர நாயர்கள் பெண்கள் போலவே சாணார் பெண்களும் துணி அணிவது வன்முறையான எதிர்வினைகளுக்கும், மோதல்களுக்கும் ஓர் எழுச்சி போன்ற நிலைக்கு இட்டுச் சென்றது’’ என்று எழுதினார். நாடார்கள் மெட்ராஸ் அரசுக்கு வில்லியம் கல்லனை எதிர்த்து பல மனுக்களை அனுப்பினர். உயர் ஜாதியினருக்கு மரியாதை செலுத்த, கீழ்சாதியினரை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்று, அங்கீகரிக்கிறார்  ஜெனரல் வில்லியம் கல்லன்”  என்று அந்த மனுக்கள் கூறின. மேலாடை அணிய அரசாங்கம் கூறிய ‘‘குப்பாயம்’’ ஆடை சாணார்களை திருப்திப்படுத்தவில்லை. அதை அந்நிய மதமான இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாப்ளா வீட்டுப் பெண்கள் அணியும் ஆடை என்பதால் நாடார்கள் அதை அந்நியமாகப் பார்த்தனர். தாமும் உயர்ஜாதிக்காரர்கள் போல் இந்துக்கள்தான். தாங்கள் ஏன் மாற்று மதக்காரர்கள் ஆடையை அணிய  வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு மனு செய்தனர். ஆனால் திவான் மாதவராவ், “ஆடைகளில் மாற்றம் செய்வது, குறிப்பாக பெண்கள் விஷயத்தில் சாத்தியமில்லாத ஒன்று என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என்பதோடு நில்லாமல் ஏற்கனவே இருக்கும் உத்தரவுகளை மேற்கோள்களாகக்காட்டி நாடார்   பெண்கள் தோள் சீலை போடுவதை, ஜாதிய கலவரங்களுக்கு காரணமாகக் காட்டி, அதற்கு எதிரான தடை நீடிக்க வேண்டும்’’ என்று எழுதினார். கல்லன் இந்தக் கடிதங்களை, அதை ஏற்க வேண்டும் என்று சென்னையில் இருக்கும் மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார்.

மெட்ராஸ் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தாமல் பைகிராஃப்ட் கடுஞ்சொற்களால் கல்லனனுக்கு பதில் எழுதினார். பைகிராஃப்ட் தன் கடிதத்தில்,”1814, 1829ஆம் ஆண்டுகளில் வெளியான உத்தரவுகளின்படி தோள் சீலை ஆடைக் கட்டுப்பாடு இந்த யுகத்திற்கும், ஓர் அறிவார்ந்த மன்னரின் தகுதிக்கும் ஏற்றதல்ல. அந்தத் தடைகளைத் தொடரும் எந்த முயற்சிகளுக்கும் பிரிட்டிஷ் அரசின் ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது” என்று குறிப்பிட்டு திவான் மாதவராவிற்கு வில்லியம் கல்லன் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்குப் பின் பலமான கண்டனங்களுடன் கடிதப் போக்குவரத்துகள் தொடர்ந்தன. மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் புதிய ஆளுநராக சார்லஸ் டிரவெல்யன் பொறுப்பேற்றார். திருவாங்கூர் நாட்டின் தோள் சீலை பிரச்சினை அவர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மார்புகளை மறைக்க இவ்வளவு நீண்ட போராட்டத்தை ஜாதியின் அடிப்படையில் கீழ்ஜாதிக்காரர்கள் நடத்துவதையும், மேல்ஜாதிக்காரர்களின் செயல்பாடுகள் பற்றியும் அவர் மிகவும் கேவலமாகக் கருதினார். அவர் கல்லனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “உண்மை மற்றும்  நீதி மட்டுமின்றி, மனித குலத்தின் பொதுவான உணர்வுகள் ஒரு சாராருக்கு (பார்ப்பனர்கள், நாயர்கள்) மட்டும் ஆதரவாக இருக்கும் பிரச்சினையை இப்பொழுதுதான் சந்திக்கிறேன்.இந்த மாதிரி தருணத்தில் நாம் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வில்லையென்றால், நாகரிக உலகம் முழுவதும் நம்மைப் பார்த்து “வெட்கக் கேடு” என்று சொல்லும். அதனால் மகாராஜா சாணார் பெண்கள் உடைமீது விதிக்கப்பட்டிருந்த காட்டுமிராண்டித்தனமான, கண்ணியமற்ற கட்டுப்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் – இது மெட்ராஸ் கவர்னர் உத்தரவு” என்று சார்லஸ் டிரெவெல்யன் உத்தரவு இட்டார். அதற்குப் பின் வேறு வழியில்லாமல் 26.7.1859 அன்று உத்திரம் திருநாள் அரசரின் அரசகுலப் பிரகடனம் என்ற பெயரில் திவான் மாதவராவ் வெளியிட்டார். ‘‘3-2-1829 அன்று நாடார் பெண்களுக்கான ஆடைவிதிகள் கஷ்டத்தைக் கொடுப்பதாக உணரப்படுவதாக எங்களுக்குத் தெரியப்படுத்திய நிலையில், கிருத்துவ சாணார்கள் அணிவதுபோல் மீதமுள்ள சாணார் பெண்களும் உடை உடுத்த ஆட்சேபனை இல்லை என்று இதன் மூலம் பிரகடனம் செய்யப் படுகிறது” என்று அரசாங்க ஆணை வெளி வந்தது. ஆடை அணியும் போராட்டம் அந்த நாட்டில் 37 ஆண்டுகள் நடந்தன.மேற்கூறிய பிரகடனம் குப்பாயம் அல்லது மீனவப் பெண்கள் உடையணிந்து தங்கள் மார்புகளை மறைக்கலாம் என்று தான் கூறியது. இயல்பான மற்ற பெண்களின் உடைகளைப் போல் கீழ்ஜாதிப் பெண்கள் உடை உடுத்தும் அனுமதி கிடைக்க மேலும் பல ஆண்டுகள் ஆயின (Ref: ‘‘சாதிப் பெருமை” by மனோஜ் மிட்டா.)

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *