| எ |
ன்னது… ‘‘2400 கூட்டங்களா?’’ எனக் கேட்டால், ஆம் என்பதுதான் நமது பதில். திராவிட இயக்க வரலாறுகளை வாசித்தவர்களுக்கு இந்த வியப்புகள் எழாது! இதுபோன்ற சாதனைகளைத் தனி மனிதர்களாகப் பலரும் செய்துள்ளனர். இந்தச் செய்தியில் கூடுதலாக ஒரு ஆவணமும் பொதிந்துள்ளது. நாம் ஏதோ ஹிந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என எல்லாமே எதிர்மறைக் கருத்துகளைப் பேசுவதாகச் சிலர் சொல்வார்கள். அது சிந்தித்துப் பார்க்காததால் வரும் விளைவு! மனிதகுல வரலாற்றில் திராவிடம் யாருக்கும் தீங்கு செய்ததில்லை. நம்மை வளரவிடாமல் செய்பவர்களையே நாம் எதிர்க்கிறோம்; வன்முறையற்ற மனித உரிமை போராட்டம் நடத்துகிறோம்!
ஹிந்தி மொழியைக் கூட, தமிழை அழிக்க வந்த ஆபத்து என்பதால் தடுப்பரண் கட்டினோம். அதிலும் கூட ஹிந்தி முக்கியம் அல்ல; சமஸ்கிருதமே முன்னோடி எனக் கண்டுபிடித்தார் பெரியார்! ஆக எந்த ஒன்றிற்கும் அதன் தத்துவம் தான் எதிர்ப்பே தவிர, தனி மனிதர்களோ, அதன் சமூகமோ கிடையாது.
அதற்கு எடுத்துக்காட்டாக சத்யநாராயணா சிங் (85) அவர்களையே எடுத்துக் கொள்ளலாம். விடுதலை ஞாயிறு மலருக்காக, சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த போது நமது முதல் கேள்வியே, “உங்கள் பெயரில் உள்ள “சிங்” என்பது எதைக் குறிக்கிறது? பஞ்சாப் மாநில சிங்கா அல்லது வேறு எதைக் குறிக்கிறது?”, என்று கேட்டோம். வெகு இயல்பாகப் பதில் சொன்னார்.
பொந்தில்ஹர் கிராமம்!
நாம் முதல் கேள்வியாக அதைக் கேட்பதற்கும் காரணம் இருந்தது. திராவிட இயக்கங்ளோடு (திமுக, திக) மிக நெருக்கமாக இருந்தவர் சத்யநாராயணா சிங். எத்தனை ஆண்டுகள் என்றால் சற்றொப்ப 45 ஆண்டுகள். இவ்வளவு நீண்ட வரலாறு கொண்டிருந்தாலும், அவரது வாழ்க்கைக் குறிப்புகள் மிக, மிக முக்கியமானவை.
ஆம் தோழர்களே! உத்திரப்பிரதேசம், பீகாருக்கு இடையே இருப்பது “பொந்தில்ஹர்” எனும் கிராமம். அதுதான் இவரின் சொந்த ஊர். அங்கே இருக்கிற ஒரு பின்னொட்டு தான் இந்த ‘சிங்’. இது ஹிந்து மதத்தைச் சார்ந்தது. பஞ்சாப்பில் உள்ள “சிங்” என்பது சீக்கிய மதத்தில் வருவது. “ராஜா தேசிங்கு என்கிற அரசர் குலத்தில் வந்தவர்கள் நாங்கள். அதனாலே எங்கள் பெயரிலும் ‘சிங்’ உள்ளது எனச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது,” என்கிறார் சத்யநாராயணன்.
தாய்மொழி ஹிந்தி!
இவரின் தாத்தா காலத்தில் பணி நிமித்தமாகத் தமிழ்நாடு வந்திருக்கிறார்கள். வெள்ளையர்கள் ஆட்சியில், இராணுவ அலுவலகத்தில் சுபேதார், தபேதார் எனும் பொறுப்புகளில் பணி செய்துள்ளார். அதன் பொருட்டு வேலூர், ராணிப்பேட்டையில் 1941 இல் பிறந்து வளர்ந்து, பின்னர் சென்னைக்கு வந்திருக்கிறார் சத்யநாராயண சிங். இவரின் தாத்தா பெயர் ஜெகன்நாத் சிங், பாட்டி பெயர் கிருஷ்ணா பாய். ஆண்களுக்கு ‘சிங்’ என்றும், பெண்களுக்கு ‘பாய்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தாத்தா பாட்டிக்கு 11 குழந்தைகளாம்! ஹிந்து மதத்தின் பிற்பட்ட வகுப்பில் இவர்கள் வருகிறார்கள். இவர்களின் தாய்மொழி ஹிந்தி. இந்தத் தாத்தா பாட்டியின் ஒரே மகளான புவனேஸ்வரி என்பவரைத் தான், வ.ரா என்று அழைக்கக்கூடிய ராமசாமி (அய்யங்கார்) காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திராவிடக் கொள்கைகள்!
அன்றைய ஒன்பதாம் வகுப்பு வரை (IV பார்ம்) படித்த சத்யநாராயண சிங், 1959 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 2001 இல் ஓய்வு பெற்றுள்ளார். பணியில் இருந்த போது திராவிடர் கொள்கைகள் அறிமுகமாகி, நண்பர்கள் வட்டாரமும் அதிகமாகி இருக்கிறது. மதுரை, ஜெய்ஹிந்தபுரத்தில் வசித்த கமலாபாய் என்பவரை இவர் திருமணம் செய்துள்ளார். இவரின் சொந்த ஊரும் பொந்தில்ஹர். தற்சமயம் சிங், பாய் என்பது மாறிவிட்டது என்கிறார். இவர்களுக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அதில் முதல் பெண், விடுதலை அலுவலகத்தில் பணி செய்துள்ளார். தற்போது பிள்ளைகள் அனைவருமே திராவிடக் கொள்கைகள் அறிந்தவர்களாகவும், திமுகவில் பொறுப்பில் இருப்பதாகவும் சத்யநாராயண சிங் தெரிவித்தார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் இருந்த போது, திமுகவின் சிட்டிபாபு வீட்டிற்கு எதிரில் குடியிருந்துள்ளார். அவருடன் நட்பு ஏற்பட்டு, பல நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதேபோல பெரியார் திடலுக்கும் அவ்வப்போது வந்துள்ளார். குறிப்பாக மணியம்மையார் நடத்திய இராவண லீலா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் பெருங்களத்தூர் பகுதியில் “மக்கள் நல உரிமை மன்றம்” எனும் அமைப்பை நண்பர்கள் இணைந்து நடத்தியுள்ளனர். மாணவர்களுக்கு இலவச வகுப்புகளும், அப்பகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளனர்.
பெரியார் திடல் அறிமுகம்!
இப்படியான சூழலில் இவர் பெரம்பூருக்கு மாற்றமாகி வந்துள்ளார். வந்த பிறகு திமுக தொண்டர்களுடன் அறிமுகமாகி, அவர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளார். அவ்வப்போது பெரியார் திடல் சென்று வந்தாலும், திமுக தோழர் இராயப்பன் மூலம் 1978 ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். இந்நிலையில் பெரியார் திடலுக்கு அடிக்கடி போய் வந்த நிலையில், அங்குள்ள நூலகத்தில் தோழர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதுவே பிறகு கலந்துரையாடலாக மாறுகிறது. இதையே வாரம் ஒரு கூட்டமாக நடத்தினால் என்ன என்கிற சிந்தனைதான் “பெரியார் நூலக வாசகர் வட்டம்” உருவாகக் காரணமாக இருந்துள்ளது! இதற்கு மாணிக்க சண்முகம், சூளை நடேசன், தென்னவன், சேலம் ராஜ், கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
“பெரியார் நூலக வாசகர் வட்டம்” என்கிற பெயரை ஆசிரியர் அவர்கள் தான் சூட்டி இருக்கிறார்கள். அதேபோல முதல் நிகழ்ச்சியில் மத்தாய் எழுதிய “நேரு கால நினைவுகள்” (Reminiscences of Nehru Age By M.O.Mathai) எனும் நூல் குறித்த ஆய்வுச் சொற்பொழிவையும் ஆசிரியர் வழங்கியுள்ளார்.
2400 கூட்டங்கள்!
நிகழ்ச்சியின் போது தேநீர், பிஸ்கட் எதுவும் கொடுப்பதில்லையாம். ஆசிரியர் தான் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் எனக் கூறி, அதையும் தன் சொந்த செலவிலே வழங்குகிறேன் என்று கூறினாராம். நூலகத்தில் தொடங்கப்பட்ட வாசகர் வட்டம், பிறகு எம்.ஆர்.ராதா மன்றத்தில் செயல்பட்டுள்ளது. பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் புரவலர் ஆசிரியர். 1979 ஆம் ஆண்டு சத்யநாராயணா சிங் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்போது தலைவராக மயிலை கிருஷ்ணன், செயலாளராக மாணிக்க சண்முகம் இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது தொடங்கி 2019 வரை தொடர்ந்து 2400 கூட்டங்களை நடத்தியுள்ளார். கரோனா நேரங்களில் கூட, நிகழ்ச்சிகள் தடைப்படாமல் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளன. தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வருகிறார்.
ஜாதி சங்கம் வேண்டாம்!
இவரின் தொடர் சுறுசுறுப்பு, சமூக ஆர்வத்தைக் கண்டு, இவரின் உறவினர்கள் ஜாதி சங்கத்தில் இணையக் கூறியுள்ளனர். திராவிடர் சித்தாந்தத்தில் ஊறிய இவருக்கு அதில் விருப்பமில்லை. தம் பிள்ளைகளில் மூவருக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தவர் இவர். கலைஞர் தொலைக்காட்சியில் “சந்தித்த வேளை” எனும் நிகழ்ச்சியை ரமேஷ் பிரபா என்பவர் நடத்தி வந்தார். அதில் இவரையும் ஒரு நேர்காணல் செய்துள்ளார்.
1973 ஆம் ஆண்டில் ஒரு திருமணத்தில் பெரியாரைச் சந்தித்து, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதே ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் பெரியார் மறைவையொட்டி குடும்பத்தினர் அனைவரும் சென்று வீரவணக்கம் செய்துள்ளனர். இவரது இணையர் கமலாபாய் ஆசிரியரை அண்ணா என்று அழைப்பாராம். ஒவ்வொரு திருமண நாளிலும் ஆசிரியரைச் சந்தித்து வருவார்களாம். உடல் நலன், ஆரோக்கியம், குடும்பத்தினர் நலன் எனப் பேரன், பேத்திகள் வரை ஆசிரியர் விசாரிப்பாராம்.
ஆசிரியரின் 115 கூட்டங்கள்!

பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் பெரியார் எனும் தலைப்பில் மட்டும் ஆசிரியர் 115 கூட்டங்கள் பேசியுள்ளாராம். அது பிறகு நூலாகவே வந்துள்ளது. அதேபோல வாசகர் வட்டத்தில் பேசிய பல பேச்சுகள் நூல்கள் வடிவத்தில் வந்துள்ளன. பல்கலைக் கழகங்களில் உள்ள பாடத் திட்டங்கள், அதன் தலைப்புகளை விட, பல்லாயிரம் தலைப்புகளில் வாசகர் வட்டத்தில் பேசப்பட்டுள்ளன. அதேபோல பேச்சாளர் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காது. வாரத்தில் இரண்டு நாட்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரியார் திடலில் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசிரியர் எண்ணம், 47 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து வருகிறது.
போற்றுதலுக்கு உரியவர்!
வட இந்தியப் பகுதியில் இருந்து வந்து, திராவிடச் சித்தாந்தை உள்வாங்கி, தமிழர்கள் நலன், தமிழ்நாட்டு நலன் என 50 ஆண்டுகளாகப் பணியாற்றும் சத்யநாராயணா சிங் போற்றதலுக்கு உரியவர்!
