| ஆ |
பாச அழுக்கு மூட்டை கதையில் மூட நம்பிக்கைகளை வலியுறுத்தும், சுற்றுச்சுழலை பாழ்படுத்தும் இந்த ஆரிய பார்ப்பன தீபாவளி பண்டிகை தினத்தில், திரைப்படக் கொண்டாட்டங்களும் முக்கிய பங்களிக்கும். இந்த பண்டிகை எவ்வித அறிவியல் சிந்தனைகள் இல்லாமல், மூட நம்பிக்கைகள் கொண்ட வெறும் கேலிக்கூத்தாக கொண்டாடப்படுகிறதோ, அதே போன்றே முன்னணிக் கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் திரைப்படங்களும் அதே நிலையில் தான் இருக்கும். விடியற் காலையில் கதாநாயகன் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து குடி, கூத்து, விசிலுமாக, வாழும் கடவுளாக பாவித்து தன் கதாநாயகர்கள் நடித்த படத்தை பார்த்து பரவசம் அடைவார்கள்.
நல் வாய்பாக இந்த ஆண்டு தீபாவளிக்கு அப்படியான அவதார புருஷர்களின் திரைப்படங்கள் எதுவும் வரவில்லை.
இந்த ஆண்டு அதிகம் அறிமுகம் இல்லாத இரண்டு கதை நாயகர்கள் நடித்த இயக்குநர்கள் படங்களாக வெளிவந்துள்ளது. அவை மாரி செல்வராஜ் இயக்கத்தில் “பைசன்” மற்றொன்று கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் “டியூட்”.
இந்த இரண்டு திரைப்பட இயக்குநர்களும் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களிடத்தில் சமூக நீதி பாடம் எடுத்துள்ளார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் “பைசன்” இப்படத்தின் கதை நாயகன் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த கபடி விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞன்.
அவன் இச் சமூகத்தில் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளால் எப்படி எல்லாம் பந்தாடப்படுகிறான். அதை எல்லாம் கடந்து எவ்வாறு வெற்றியடைகிறான் என்பதை உண்மை கலந்த புனைவுகளோடு 1990 காலக்கட்டங்களில் தென்னகத்தில் இருந்த ஜாதிய மோதல்கள் பின்னனியில் கதை சொல்லி உள்ளார்கள்.
இப்படத்தில் வரும் வசனங்கள் மனிதர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது.
அதில் கதை நாயகன் பேசும் வசனங்கள் மூலம் அந்த கதாபாத்திரத்தின் வலியை உணரவைக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லுவதென்றால்,
“நான் பிறப்பதற்கு முன்பு, தந்தையாகிய நீங்கள் பிறப்பதற்கு முன்பு, நம் பாட்டன், பூட்டன் பிறப்பதற்கு முன்பே இங்கே ஒரு பகையை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
அந்த பகையை ஏற்றுக் கொண்டு தான் நாம் வாழ வேண்டுமா? ஒருவன் நானும் உன் ஜாதியைச் சேர்ந்தவன் என்று கட்டி அணைக்கிறான். இன்னொருத்தன் நீ என் ஜாதி இல்லை என்று கத்தியால் குத்துகிறான். எப்படி அப்பா?’’ இச்சமூகத்தில் நடைபெறும் ஜாதிய கொடுமைகளையும், அதன் பேரில் நடை பெறும் கொலைகளையும் பார்த்து கேட்கும் கேள்விகள் இவை.
இத்தகைய வலிகளை எல்லாம் கடந்து போராடி கபடியில் தேசிய அளவில் தேர்வாகிச் சென்றால்? அங்கே மதம், மொழி, இனம் என்று புறக்கணிக்கப்படுகிறார். இதனால் மனச்சோர்வு அடையும் போது, உனக்கு தகுதி, திறமை இல்லை என்று தூற்றுவார்கள், கோட்டாவில் வந்தவன் என்று ஏளனம் பேசுவார்கள். அதை எல்லாம் புறந்தள்ளி, தன்னம்பிக்கையோடு ஓடிக் கொண்டேயிருந்தால் தான் வெற்றி அடைய முடியும். உன் வெற்றித் தான் அவர்களுக்கான பதில் இப்படி தன்னம்பிக்கை ஊட்டும் வசனங்களும், இச் சமூகத்தின் மீதான கேள்விகளும் படம் நெடுகிலும் உள்ளன. படம் முழுவதும் ஜாதிய படுகொலைகள் இரத்தமும், சதையுமாக காட்டப்பட்டுள்ளது.
சமத்துவத்தை நோக்கி அனைவரும் பயணிக்க விளையாட்டும் ஒரு கருவியாக அமையும் என்பதை சமூக அக்கறையுடன் படம்பிடித்து காட்டியுள்ளார் இயக்குநர்.
இது வெறும் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல, இன்றைக்கும் ஜாதிய அடக்குமுறையில் தாழ்ந்து கிடக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் ப(பா)டம்.
இப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் மற்றும் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ள துருவ் விக்ரம் மற்றும் இப்படத்தில் நடித்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். அதே போன்று ஜாதியத்திற்கு எதிராக மற்றொரு வடிவத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ” டியூட்”.
தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
‘‘உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால், உலகம் தொல்லை யில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்கிவிட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு இது வந்தே தீரும், சம எண்ணிக்கை உடையதும், சம உரிமைகளைப் பெற வேண்டுடியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்’’ என்கிறார்.
அந்த வகையில்,இப்படத்தின் கதை பெண்களை தனது பாரம்பரிய சொத்துகளை பாதுகாக்க, தன் குலத்தை விருத்தி செய்யும் கருவியாக மட்டும் பாவித்து, இக் காலக் கட்டத்திலும் எனக்கு பிறந்த நீ, நான் சொல்லுகிறபடி நடந்தால் சகல வசதிகளுடனும் மரியாதைகளுடனும் குடும்ப குத்து விளக்காக இந்த உலகத்தில் வாழலாம். இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் சொல்லும் ஜாதி ஆணவம் பிடித்த, உயர் பதவி வகிக்கும் கிரிமினல் குற்றவாளி தகப்பன்.
இத்தகைய ஜாதி ஆணவம் பிடித்த மிருகத்திடமிருந்து தங்கள் உயிரை காத்துக் கொள்ள எத்தகைய முடிவையும் இன்றைய “ஜென்ஸி கிட்ஸ்கள்” (இணைய காலத்து இளைஞர்கள்) எடுப்பார்கள் என்பதை நகைச்சுவையுடன் படம்பிடித்து காட்டுகிறது இத் திரைப்படம். கலாச்சார பாதுகாவலர்களை எல்லாம் அலற வைத்துள்ளது இத் திரைப்படம்.
இப்படத்தின் கதைநாயகி தன் ஜாதியை சாராத ஒருவரை விரும்புகிறார். ஆனால், ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டால், தன் தந்தையே தங்களை கொலை செய்து விடுவான் என்ற சூழ்நிலையில், அதிலிருந்து தப்பிக்க ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட தன் ஜாதியை சார்ந்த கதை நாயகன் ஒத்துழைப்போடு, ஒரு வாய் மொழி ஒப்பந்தத்தோடு திருமணம் நடைபெறுகிறது. அது தாலி மட்டும் தான் அவள் சொந்த ஜாதிக்காரனது, மீதி அனைத்தும் தன் மனத்திற்கு பிடித்த, இச் சமூக பார்வையில் பார்க்கும் வேறொரு ஜாதிக்கார காதலனோடு.
ஒரு பெண்ணுக்கு தாலி முக்கியமல்ல, அவள் மனதுதான் முக்கியம். அவளுக்கு மட்டும் தான் தெரியும்,தான் கருவில் சுமக்கும் குழந்தைக்கு, தனக்கு பிறக்கும் குழந்தைக்கு யார்? உண்மையான அப்பன் என்று.
அப்படி வாழும் அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது.
சொத்துக்கு வாரிசு கிடைத்து விட்டது. நம் குலம் விருத்தி அடைந்துவிட்டது என்று தன் பெண்ணிற்கு பிறந்த குழந்தையை கொஞ்சிப் புளங்காங்கிதம் அடைகிறான். அக் குழந்தை வேறொரு ஜாதியைச் சார்ந்தவனுடன் கலப்பில் பிறந்தது என்பதை அறியாமலேயே..
இங்கே பல பெண்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டிற்கு, சமூகக் கட்டுபாட்டிற்கு கட்டுப்பட்டு, தனது ஆசைகளை எல்லாம் பொசுக்கி கொண்டு,ஒருவரிடம் தாலி கட்டிக் கொண்டு மனதளவில் வேறு ஒருஆண்டுன் தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்படத்தின் கதை நாயகி உண்மையிலே ஒருவரிடம் தாலி கட்டிக் கொண்டு இன்னொரு ஆணுடன் மனதளவில் வாழாமல் உடலால் தனக்கு பிடித்தவரோடு வாழ்கிறார்.
அதற்கு தாலி கட்டியவரும் ஒத்துழைக்கிறார்.
இத்தகையக் குழப்பங்கள், இத்தகைய முடிவுகள், தங்கள் பிள்ளைகள் எடுக்காமல் இருக்க ஜாதி ஆணவம் பிடித்த மனிதர்களே திருந்துங்கள். இல்லையென்றால் இன்றைய ஜென்ஸி இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டு முழிப்பீர்கள். தன் “ஜாதி அக்மார்க்கோடு” பிறந்தாக நினைத்துக் கொண்டு நீங்கள் கையில் எடுத்து கொஞ்சும் குழந்தை உங்க ஜாதியில் பிறந்ததாக இருக்காது.
சம உரிமையுடன், அவரவர்கள் விருப்பத்திற்கு ஜாதி, மதங்களை கடந்து வாழ இச் சமூகமும், பெற்றோர்களும் வாழ வழி விட வேண்டும். இல்லையென்றால் எவ்வளவு காலத்திற்கு நாங்கள், உங்களிடம் பலி ஆடுகள் போல் பலி ஆவது?
கிரிமினலாக நீங்கள் யோசித்தால் உங்கள் பிள்ளைகள் நாங்களும் கிரிமினலாக யோசிப்போம் என்று எச்சரிக்கும் படமாக இது உள்ளது. இங்கே இப்போது மீண்டும் தந்தை பெரியார் குறிப்பிட்டதை நினைவுப்படுத்துவோம். திருமணங்களை கிரிமினல் குற்றமாக்கி விட வேண்டும்.
அப்படி தான் திருமணங்கள் கிரிமினல் குற்றங்களாக மாறிவருகிறது என்பதை உணர்த்துகிறது இத் திரைப்படம்.
ஜாதி ஆணவத்தால் நீ கிரிமினல் குற்றம் செய்யத் தயாரானால், உங்கள் பிள்ளைகளும் அதே போன்று கிரிமினல் குற்றம் செய்து தப்பிக்க யோசிக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஜாதி ஆணவம் கொண்ட ஜன்மங்களே திருந்துங்கள்.
இல்லையென்றால் அரசாங்கமும் தயாராகிக் கொண்டிருக்கிறது ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்தை தீட்டி உங்களை வலிமையாக தண்டிக்க. இப்படத்தின் வெற்றி குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் குறிப்பிட்டு சொன்னார். ‘‘இத் திரைப்படம் இங்கே சமூகத்தில் பல கேள்விகளை, சர்ச்சகளை எழுப்பி உள்ளது. அவர்களுக்கு நாங்கள் சொல்லும் பதில் இது தமிழ்நாடு,
இங்கே பல முன்னோர்கள் பேசியவுள்ளார்கள். முக்கியமாக ஒரு “பெரியவர்” பேசியது தான் எங்களை போன்றவர்களுக்கு வழிகாட்டி’’ என்கிறார்.
அந்த பெரியவர் “பெரியார் “.
இன்றைய “ஜென்ஸி கிட்ஸ்கள்” களிடையே பெரியாரின் சிந்தனைகள் வெகு வேகமாக பரவி விவாதிக்கப்படுகிறது. அவர் எண்ணப்படி விரைவில் ஜாதிகள் பெயரில் கட்டப்பட்டுள்ள கற்பிதங்கள் எல்லாம் தூள் தூள் ஆகும் நம்பிக்கை பிறக்கிறது.இப்படத்தில் இயக்கிய கீர்த்தீஸ்வரன், இதில் நடித்த கதையின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கதைநாயகி மமிதா பைஜு மற்றும் இப்படம் உருவாக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
(இன்றைய இயக்குநர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை தவிர்ப்பது தமிழுக்கு நல்லது என்பதை உணர வேண்டும். படத்தை பாராட்டும் அதே வேளையில் இதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.)
– பெ.கலைவாணன், திருப்பத்தூர்.
