தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்

ஊடக கட்டுப்பாடும் – தேர்தல் மோசடிகளும்!

ஞாயிறு மலர் ஞாயிறு மலர் ஞாயிறு மலர்

ென்ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு, ஸ்வாசிலாந்து (தற்போது இஸ்வாட்டினி என்று அழைக்கப்படுகிறது). இந்த நாட்டின் பெயரைப் பலரும் கேள்விப்படவில்லை. ஆனால், அங்கு ஊடகத் துறையின் நிலை, இன்றைய இந்தியாவின் அரசியல் ஊடக சூழலுடன் அச்சுறுத்தலாக ஒத்துப்போகிறது. இஸ்வாட்டினியில் யாராவது ஊடகத் துறைக்குள் நுழைய விரும்பினால், மன்னர் குடும்பம் முழு நிதியுதவி செய்யும். ஆனால், ஒரே நிபந்தனை: அனைத்து செய்திகளிலும் மன்னர் மூன்றாம் மஸ்வதியை மட்டுமே புகழ்ந்து பாட வேண்டும். அவர் நாடாளுமன்ற அவையில் ஸ்னூக்கர் விளையாடினால், அவரது திறமையைப் பற்றிய முழுப் பக்கக் கட்டுரை எழுத வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தொடுவதுபோல் தோன்றினால், அந்தச் செய்தியாளர் மறுநாள் சிங்கத்தின், கழுதைப்புலியின் அல்லது வேறு வனவிலங்கின் தாக்குதலில் பலியாகிவிடுவார்.

அங்கு எதிர்க்கட்சி என்று எதுவுமில்லை. பெயரளவுக்கு ஒற்றைக் கட்சி ஆட்சி; இரண்டு பேர் போட்டியிடுவார்கள், மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், மன்னர் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவர் தான் பிரதமர். தற்போது ரூஷல் தலாமினி பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இத்தகைய ஆட்சிமுறை இந்தியாவிலும் உருவாகிவிட்டதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இந்தியா ஜனநாயக நாடு; மக்களின் நலனுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சிமுறை இங்கு உள்ளது. ஆசியக் கண்டத்தில் இத்தகைய ஜனநாயகம் இந்தியாவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பேத்கர் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து கட்டமைத்த அரசியலமைப்புச் சட்டம்தான், பிரிட்டிஷ் இந்தியாவை இம்மண்ணின் மக்களுக்கான இந்தியாவாக மாற்றியது.

ஊடகங்களின் அரசியல் மாற்றம்:

1999 முதல் தொடக்கம்

1999 முதல் 2004 வரை பாஜக ஆட்சியின் போது, வட இந்திய ஊடகங்கள் பழைய ‘ஹிந்து ராஷ்ட்ர’ கருத்தியலை மீண்டும் கொண்டு வருவதற்கான அடித்தளத்தை அமைத்தன. 2010க்குப் பின் அந்த அடித்தளம் வலுவடைந்து, மன்மோகன் சிங் அரசை அகற்றி பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முழு நேரப் பணியில் ஈடுபட்டன. 2012 முதல் வடக்கு ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டத்தின் கீழ் தீவிரமாகக் களமிறங்கி, மக்களின் மனதில் ஹிந்துத்துவாவை ‘புனித’மாக்கின. குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை ‘ஹீரோ’வாகக் காட்ட, பல ‘ஜிம்மிக்குக்’ வேலைகளைச் செய்தன.

எடுத்துக்காட்டாக, 2013இல் உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர் காலத்தில், ‘15,000 குஜராத்தியர்களைக் காப்பாற்ற மோடி நூற்றுக்கணக்கான பேருந்துகளை அனுப்பினார்’ என்ற வதந்தியை அனைத்து ஹிந்தி முன்னணி செய்தி நிறுவனங்களும் பரப்பின. இதை அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வதந்தி என்று கூறியபோதும், ஊடகங்கள் மோடியை ‘ராம்போ’ போன்ற ஆங்கிலத் திரைப்பட நாயகனாகக் காட்டத் தொடங்கின. தமிழ்நாட்டு பத்திரிகையாளர் சேஷாத்திரி கூட, சமூகவலைதளத்தில் இந்த வதந்தியை ‘இத்தனை பேருக்கு இத்தனை பேருந்துகள்’ என்று அலங்கரித்துப் பரப்பினார். இது ‘குஜராத் மாடல்’ என்ற கருத்தியலை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டமிட்ட வதந்தி. விளைவு: 2014இல் மோடி தலைமை யிலான பாஜக  ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இது கார்ப்பரேட் ஆர்.எஸ்.எஸ். கூட்டு முயற்சி; கார்ப்பரேடுகளின் திட்டமிட்ட ஊடக வலைப்பின்னல்.

இஸ்வாட்டினி போன்ற ஊடக நிலை: இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்ததும், இஸ்வாட்டினி போல் இந்திய ஊடகங்களும் கார்ப்பரேட்டுகளின் கையில் சென்றுவிட்டன. நேர்மையாகப் பணிபுரிந்த ரவீஷ் குமார், அபிசேக், பங்கஜ், மனீஷா உள்ளிட்டவர்கள் வெளியேறிய பின், ஊடகங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி, உத்தவ் தாக்கரே சிவசேனா (யு.பி.எஸ்.) இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அரசியல்வாதிகளாகவும் ஊடகவியலாளர்களாகவும் மாறி, ஊடகப் பணியைப் பார்த்துக் கொள்கின்றனர். இவர்கள் சொல்லும் செய்திகள் மக்களிடம் வேகமாகப் பரவுகின்றன என்பது கண்கூடாகத் தெரிகிறது.

சமீபத்தில், பீகார் தேர்தல் ஸ்டண்ட்டுக்காக யமுனை அருகே லட்சக்கணக்கான ரூபாய் செலவில் செயற்கைக் குளம் உருவாக்கி, அதில் குளித்து சதுபூஜை கொண்டாடி பீகாரிகளைக் கவர்ந்த மோடிக்கு, ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தும் பேசியதோடு, அவர்கள் தானே செய்தியாளர்களாக மாறி அங்கு சென்று, கிருமி நீக்கப்பட்ட ஆர்.ஓ. தண்ணீர் பைப்புகள் மூலம் குளத்தில் நிரப்பப்படுவதை நேரடியாகக் காட்டினர். இதனால் மோடி அந்தக் குளிப்பு நாடகத்திலிருந்து பின்வாங்க நேர்ந்தது. ஆனால், டில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான சேனல்களின் செய்தியாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? யமுனை நீரை நேரலையில் குடிப்பது போல் நடித்து, கேமராவிற்குப் பின் தண்ணீரை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர்!

மழை பெய்யும்போது யாராவது ‘மழை பெய்ய வில்லை’ என்று சொன்னால், ஊடகவியலாளர்களின் கடமை சன்னல் வழியாகப் பார்த்து ‘மழை பெய்துக் கொண்டிருக்கிறது’ என்று வெளிப்படையாகச் சொல்வதாகும். ஊடகங்கள் எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் தெரிந்த மிகப் பெரிய உண்மையை மறைத்துவிட்டன.

தேர்தல் ஆணையத்தின் மோசடிகள்:
எஸ்.அய்.ஆர். திருத்தம்

எதிர்க்கட்சிகள் வலுவான தமிழ்நாடு, கேரளா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது பாஜகவுக்கு தெரிந்தது. ஆகையால், தேர்தல் ஆணையத்தையே கைப்பற்றி காய்நகர்த்துகிறது. இதற்கு முன்னோட்டமாக, கருநாடகா, மகாராஷ்டிரா, டில்லி, அரியானா ஆகியவற்றில் சில தில்லுமுல்லு வேலைகளைச் செய்து வெற்றி பெற்ற பின், அதை நாடுமுழுவதும் நிறைவேற்றுகிறது. போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட மோசடிகளை 4 மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் சோதனை செய்தது. அதில் கிடைத்த பலனை வைத்து, இதர மாநிலங்களிலும் செயல்படுத்துகிறது.

சரியான நேரத்தில் ராகுல் காந்தி, மம்தா, ஆம் ஆத்மி தலைவர்கள் போலி வாக்காளர்கள் தகவலை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து, புதிய மோசடியாக எஸ்.அய்.ஆர். (Special Intensive Revision) என்று எதிர்க்கட்சிகள் புகார் வைத்துள்ளன. பீகார் மாநிலத்தில் நடந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் குற்றங்கள் வெளியானது. இந்திய தேர்தல் ஆணையம் திடீரென ‘சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR)’ என்ற புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியது. இது வாக்காளர் பட்டியல்களை மீண்டும் சரிபார்க்க, இறந்தோர், இடம்பெயர்ந்தோர், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதை இலக்காகக் கொண்டது என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பீகாரில் முதலில் தொடங்கி, தற்போது தமிழ்நாடு, மகாராட்டிரா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பெரும் குழப்பத்தையும் வாக்குத் தில்லுமுல்லுகளையும் ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படுதல், இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (பாஜகவுக்கு வாக்களிக்காத பகுதிகள்) இலக்காக்கப்படுதல் – இவை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து எதிர்க்கச் செய்துள்ளன.

 சிறப்பு வாக்காளர் திருத்தம் என்றால் என்ன?

வீடு வீடாகச் சரிபார்த்து, வாக்காளர் அடையாள அட்டை (EPIC), ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைச் சரிபார்த்து தெளிவான விவரங்களைச் சேகரிக்கும் செயல்முறை. பீகாரில்: ஜூன் 2025இல் தொடங்கி, செப்டம்பர் இறுதியில் இறுதிப் பட்டியல் வெளியானது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்! அக்டோபர் 27 அன்று 12 மாநிலங்களில் (மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட) தொடங்க உள்ளது.

பீகாரில் அதிகாரிகள் வீடுகளில் செல்லவில்லை. 1.13 கோடி முஸ்லிம், தலித், பிற்படுத்தப்பட்டோர், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 88 லட்சம் பேர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். கோடிக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டன. அவற்றை குறுகிய காலத்தில் சரிபார்த்தது எப்படி? நாளொன்றுக்கு ஆயிரம் மனுக்களைச் சரிபார்க்க சூப்பர் கம்ப்யூட்டர்கள் இல்லை!

மேற்கு பீகார் சிவான் மாவட்டம், மகராஜ்கஞ்ச் தொகுதியில்: வாக்குச் சாவடி 362 & 364இல் அதிர்ச்சி! 1,035 வாக்காளர்கள்; ஒரே வீடு 52இல் 17 பேர் (பார்ப்பனர், தாழ்த்தப்பட்டோர் இஸ்லாமியர் கலந்து). வாக்குச் சாவடி 364இல்: வீடு 22இல் பார்ப்பனர் 5, இஸ்லாமியர் 7; வீடு 23இல் பார்ப்பனர் 4, இஸ்லாமியர் (மொத்தம் 640 வாக்காளர்கள்). பகவான்பூர், ஹாத்பிரகண்டன் கிராமங்களில் ஒரே வீட்டில் அனைத்து சமூகங்களும் வசிப்பதாகக் காட்டப்பட்டது.

உள்ளூர் எதிர்ப்பு: வீடு 23 உரிமையாளர் யுகல் கிஷோர் உபாத்யாய்: “என் விண்ணப்பத்தில் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம் பெயர்கள் சேர்க்கப்பட்டன.” ஆயிஷா பீவி: “எங்கள் வீட்டில் பார்ப்பனர் இல்லை, ஆனால் பட்டியலில் உள்ளனர். நம் பெயர் இல்லை. அவர்கள் வந்தால் எங்கு போவது?” மாட்டுத்தொழுவத்தில் 54 வாக்காளர்கள்! இணைய ஊடகவியலாளர் சாகரிகா: “அந்த முகவரி மாட்டுத்தொழுவம்; வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு தெரியாதா? வேண்டுமென்றே போலி முகவரிகள் சேர்க்கப்படுகின்றன.”

ராஜூராவில் 6,800 வாக்காளர்கள் நீக்கம் – ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் சான்றுகளுடன் வெளியிட்டார். கருநாடகா அலந்த் தொகுதியில் மோசடி; SIT விசாரணையில் கலபுர்கி மாவட்டத்தில் எதிர்க்கட்சி பகுதிகளில் நீக்கங்கள்.

 ஏன் எதிர்க்க வேண்டும்?
10 காரணங்கள்

  1. சிறுபான்மையினர் தாழ்த்தப்பட் டோர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு சென்றோர்கள் வாக்குரிமை இழக்கிறார்கள். வாக்குரிமை இழப்பது பின்னர் அவர்களை நாடற்றவர் களாக மாற்றி எந்த உரிமையும் பெறமுடி யாமல் தடுத்துவிடுவார்கள்
  2. இஸ்லாமியர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுகிறார்கள்
  3. வங்கிக் கணக்கு துவங்குவது முதல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் என அனைத் திலும் ஆதார் தேவைப்படும் போது தேர்தல் ஆணையம் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் பாஸ்போர்ட் போன்றவை கேட்கின்றனர். 65 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 10 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகள் பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்க
    வில்லை. இதனால் மக்கள் தொகையில் 17 விழுக்காடாக இருக்கும் முதியவர்களை நீக்க சதித்திட்டமாக உள்ளது
  4. பீகாரிலும் பருவமழை காலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் என்று கள மிறங்கியது. இப்பொது தமிழ்நாட்டிலும் இதே போல் செய்யத் துவங்கியுள்ளது
  5. வாக்களர் பட்டியலில் பெயர் இல்லை என்று புகார் தந்தவர்களின் மனுக்கள் எவ்வித காரணமும் இன்றி நிராகரிக்கப்படுகிறது
  6. இதனால் இந்தியக் குடியுரிமையே இழக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது
  7. உச்சநீதிமன்ற வழக்குகள் நிறுத்தம் வரை செயல்படுத்த வேண்டும்.
  8. தேர்தல் வாக்காளர் திருத்தப் பணிகளைச் செய்ய களமிறங்கிய வாக்காளர்கள் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அம்மக்களின் மொழியைப் பேசாத வர்களுமாக இருந்தனர்.
  9. வாக்காளர் சீர்த்திருத்தம் தொடர்பான பணிகளில் உள்ளூர் பாஜக பிரமுகர்கள் நேரடியாக ஈடுபட்ட படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
  10. பெண்கள் வாக்காளர்கள் அதிக அளவில் நீகப்பட்டுள்ளனர்

எஸ்.அய்.ஆர். திருத்தத்தின் நோக்கம் நல்லது. ஆனால், அமலாக்கத்தில் பெரும் வாக்குத் தில்லுமுல்லுகள் ஜனநாயகத்தை சீர்குலைக்கின்றன. வெளிப்படைத்தன்மை இன்றி நடக்கக் கூடாது.

அம்பேத்கரின் கனவு இந்தியாவைப் பாதுகாக்க, எதிர்க்கட்சிகள், மக்கள், ஊடகங்கள் (இன்னும் உள்ள சிலர்) ஒன்றிணைந்து போராட வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *