ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு

அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆணையம் உத்தரவு!

சென்னை, அக்.31 மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன்  அதிமுக செய்தி தொடர்பாளரும், அய்டி பிரிவு பொறுப்பாளருமான கோவை சத்யன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989இன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்த தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கோவை சத்யன் கலந்துகொண்டார்.

அந்த விவாதத்தின்போது, அவர் பேசியதாவது: > “வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. அரசு எப்போதெல்லாம் சட்டத்தை கொண்டு வருகின்றதோ அப்போதெல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் மக்கள் நாங்கள் ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட் டோம், நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுகிறார்கள்”

கோவை சத்யன் தொலைக்காட்சியின் பொதுவழி விவாதத்தின்போது பேசிய மேற்கண்ட கருத்துகள், நம் நாட்டில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் கருதுகிறது. எனவே, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ரூ.3,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம்

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, அக்.31 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 3000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1000 கோடி மற்றும் 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் நவம்பர் 04, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) நவம்பர் 04, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய், பூனை வளர்க்க உரிமம்

பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்

சென்னை, அக்.31 சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று (30.10.2025) நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாநில சிவில் சேவை அதிகாரிகளுக்கு அய்ஏஎஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு!

புதுடில்லி, அக்.31 இந்திய ஆட்சிப் பணியில் (IAS) பதவி உயர்வு மூலம் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாநில சிவில் சேவை அதிகாரிகளுக்கு அய்ஏஎஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:  பதவி உயர்வு பெற்றவர்கள்: 2023ஆம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில சிவில் சேவையில் பணியாற்றி வந்த 5 அதிகாரிகள் இந்திய நிர்வாக சேவைக்கு (IAS) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

விதிகளின் அடிப்படையில் நியமனம்: இந்த நியமனங்கள், இந்திய ஆட்சிப் பணி விதிகள், 1954இன் விதி 8(1), பதவி உயர்வின் மூலம் நியமனம் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் பணியாற்றும் பயிற்சி விதிகள் ஆகிய 3 விதிகளின் அடிப்படையில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் நிரப்புதல்: ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் ஆலோசனையுடன், 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் வகையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நியமிக்கப்பட்ட அதிகாரிகள்: கவிதா சி.முத்துக் குமரன் பி.எஸ்.லீலா அலெக்ஸ் எம்.வீரப்பன் ஆர்.ரேவதி

கேடர்: இந்த அதிகாரிகள் அனைவரும் தமிழ்நாடு கேடரில் பணியாற்ற உள்ளனர்.

பயிற்சி காலம்: தற்போது, இவர்கள் “பயிற்சி காலத்தில்” பணியாற்றி வருவார்கள் எனவும், பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *