சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

11 Min Read

* ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று நாசகார சக்திகள் அறைகூவல்கள் விடுக்கின்றன!
எல்லோரும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்குங்கள்- அதனைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்குங்கள்!

சென்னை,  அக்.31-  ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி, ஏதேதோ பித்தாலட்டப் பிரச்சாரங்களைச் செய்து, பொய் வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சியைப் பிடித்துவிட்டோம் குறுக்குவழியில் என்பதை வைத்துக்கொண்டு, இஸ்லா மிய சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று நாசகார சக்திகள் அறைகூவல்கள் விடுக்கின்றன.  இந்தச் சமுதாயம் பிளவுபட்டு இருக்கக்கூடாது. எல்லோரும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்குங்கள். அத னைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்குங்கள். நாம் மதங்களால் பிரிக்கப்பட்டு இருக்கலாம். மனங்களால் ஒன்றுபட்டவர்கள் நாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழா!

கடந்த 26.10.2025 அன்று சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இந்திய யூனியன் முசுலீம் லீக் அமைப்பின் சார்பில் நடைபெற்ற, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இஸ்லாமிய நூற் பிரச்சார சங்கப் பிரசுரம் என்று திருச்சி இஸ்லாமிய அச்சு இயந்திர சாலையில் அச்சிட்டு, 1930 இல், இயற்கை மதம்’ என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.

யார்?

நம்முடைய நூற்றாண்டு விழா நாயகரின் தந்தைதான் அவர்.

அந்தப் புத்தகம் ஒரு மத நூல் என்று மற்றவர்கள் கருதினார்கள். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு இந்த ஆண்டு – அப்துல் சமது அவர்களுக்கும் இந்த ஆண்டு நூற்றாண்டு.

‘இயற்கை மதம்’ நூலைப்பற்றி  ‘குடிஅரசு’ இதழில் மதிப்புரை எழுதினார் தந்தை பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகைதான் சுயமரியாதை இயக்கத்திற்கு உள்ளோட்டம், கருவி. அந்தப் பத்திரிகையில், ‘இயற்கை மதம்’ நூலைப்பற்றி மதிப்புரை எழுதினார் தந்தை பெரியார்.

அதை அவர் மத நூல் என்று நினைக்கவில்லை. எல்லோரும் அந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும் என்று எழுதியிருந்தார்.

அந்தப் புத்தகத்தின் விளம்பரத்தை இலவசமாக வெளியிடுகிறார்.

புதிய பண்பாட்டு உறவு, கொள்கை உறவு, மனிதநேய உறவு!

ஆகவே, இஸ்லாமிய சகோதரர்களின் உறவு என்பது இருக்கிறதே, அது அரசியல் உறவு அல்ல நண்பர்களே, இது ஒரு புதிய பண்பாட்டு உறவு, ஒரு கொள்கை உறவு, மனிதநேய உறவாகும்.

நம்முடைய உறவு என்பது அடிக்கடி புதுப்பிக்கின்ற புரோ நோட் உறவல்ல. எப்போதும் இருக்கின்ற குடும்ப உறவாகும்.

‘இயற்கை மதம்’ புத்தகத்தின் அடுத்த பதிப்பில்,  மதிப்புரை (இப்போது அணிந்துரை என்று சொல்கிறோம்) யாருடையது என்று சொன்னால்,  திருவாளர் ஈ.வெ.இராமசாமி பெரியார் அவர்களுடையதுதான்.

உரிமையோடும்,  உவகையோடும் கலந்துகொள்கிறேன்!

ஆகவே, இந்த மேடையில் நான் உரிமையோடும் கலந்துகொள்கிறேன், உவகையோடும் கலந்து கொள்கிறேன்.

இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கின்றவர்களுக்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள உறவு ஓர் இயல்பான உறவாகும். எனக்கு எத்தனையோ நிகழ்வுகள் நினை விற்கு வருகின்றன. அத்தனையும் சொல்வதற்கு நேரமில்லாத காரணத்தினால், ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

‘‘எனக்கு ஒரு சந்தேகம்?’’ என்றேன்!

நூற்றாண்டு விழா நாயகர் அப்துல் சமது அவர்களோடு ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அரசியல் நில வரங்களைப்பற்றியும் பேசினோம். அப்போது நான் சொன்னேன், ‘‘என்னங்க சமது அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம்’’ என்றேன்.

‘‘என்னங்க, சொல்லுங்க ஆசிரியர்’’ என்றார் சமது.

நான் சொன்னேன், ‘‘உங்களோடு நெருக்கமாக இருக்கிறோம் திராவிடர் கழகத்துக்காரர்கள் என்பதால் எங்களை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசியதைக் குறித்து என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் பதில் சொல்லாமல், அலட்சியப்படுத்தினேன். அவர் என்ன பேசினார் என்றால், ‘‘இவர் ஏன், இஸ்லாமியரை ஆதரிக்கிறார் என்றால், எச்சில் கஞ்சியைக் குடித்துவிட்டு ஆதரிக்கிறார் என்று  சொன்னாராம்’’ என்றேன்.

எச்சில் கஞ்சியைக் குடித்துவிட்டு இஸ்லாமியரை ஆதரிக்கின்றோமாம்!

உடனே நான் சொன்னேன், ‘‘எச்சில் கஞ்சியைக் குடித்துவிட்டு ஆதரிக்கிறேன் என்று அவர் சொல்கிறாரே, இதுவரையில் நான் அந்தக் கஞ்சியைக் குடித்ததில்லை’’ என்றேன்.

உடனே அப்துல் சமது, ‘‘அப்படியா? நான் வீட்டிற்குப் போனதும் அனுப்புகிறேன், குடித்துப் பாருங்கள்’’ என்றார்.

நான் சொன்னேன், ‘‘கஞ்சியைக் குடிக்காமல் கெட்ட பெயர் வாங்குவதைவிட, அந்தக் கஞ்சியைக் குடித்துவிட்டு, கெட்ட பெயர் வாங்குவது நல்லது’’ என்றேன்.

நான் அடையாறில் குடியிருக்கிறேன்.  நம்முடைய சமது அவர்கள் இந்திரா நகரில் இருக்கிறார்.

ஒரு நாள் மாலை நேரத்தில் வீட்டில் நான் இருக்கும்போது,  ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சியைக் கொடுத்து, ‘‘இதைக் கண்டிப்பாக ஆசிரியரைக் குடிக்கச் சொல்லுங்கள்’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்தக் கஞ்சியை அப்போதுதான் நான் முதன்முத லாகக் குடித்துப் பார்த்தேன்.

எச்சில் கஞ்சி இயக்கம்தான், எல்லோரையும் ஒன்று சேர்க்கின்ற இயக்கமாகும்!

எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால், ‘‘அன்றைக்கு எங்களை எச்சில் கஞ்சியைக் குடித்த இயக்கம்’’ என்று சொன்னார். ஆனால், இந்த எச்சில் கஞ்சி இயக்கம்தான், எல்லோரையும் ஒன்று சேர்க்கின்ற இயக்கமாகும்.

அக்கார அடிசில் என்பவையெல்லாம் ஆளைப் பிரிப்பது. இந்தக் கஞ்சிதான் எல்லோரையும் ஒன்று சேர்ப்பது.

அவ்வளவு நெருக்கம் எங்களோடு.  அவரைப் பாராட்டுகின்ற அற்புதமான ஒரு விழா.

இந்த விழாவில், அவருடைய சிறப்புக ளைப்பற்றி, பண்புகளைப்பற்றி, அவருடைய பேச்சுகளைப்பற்றி, ஆற்றலைப்பற்றி நிறைய எடுத்துச் சொல்லலாம்.

நூற்றாண்டு விழா நாயகரின் இலக்கு நோக்கி நாமெல்லாம் செல்லவேண்டும்!

ஆனால், ஒரு நூற்றாண்டு விழா என்று சொல்லும் போது, நான் ஆரம்பத்தில் சொன்னதைப்போல, அவரு டைய இலக்கு என்னவோ – அந்த இலக்கு நோக்கி நாமெல்லாம் செல்லவேண்டும்.

எப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த நூற்றாண்டு விழா நடைபெறுகிறது என்பதை எல்லோரும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

இது மகிழ்ச்சிகரமான தருணம் நூற்றாண்டு விழா என்று சொல்லும்போது. நம்முடைய உறவுகள் தெளிவாக இருக்கின்றன. அது இன்னும் சிறப்பானது, மகிழ்ச்சிதான்.

ஆனால், அருமைச் சகோதரர்களே, சகோதரிகளே, இன்றைய காலகட்டம் என்பது மிகவும் சோதனையான காலகட்டம் இந்த சமுதாயத்திற்கு.

அப்துல் சமது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடு கின்ற நேரத்தில், அவர்களைப் போன்றவர்களின் தொண்டை, நம்மைப் போன்றவர்கள் தொடர்ந்தாலும்கூட, இப்போது எப்படிப்பட்ட ஒரு சோதனையான காலம் வந்திருக்கின்றது?

இஸ்லாமிய சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று நாசகார சக்திகள் அறைகூவல் விடுகின்றன!

ஒரு வெறுப்பு அரசியலைத் தூண்டி, ஏதேதோ பித்தாலட்டப் பிரச்சாரங்களைச் செய்து, பொய் வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சியைப் பிடித்துவிட்டோம் குறுக்குவழியில் என்பதை வைத்துக்கொண்டு, இந்த சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த சக்திகள், நாசகார சக்திகள் கொடுக்கின்ற அறைகூவல்களை, சவால்களைச் சமாளிக்கவேண்டிய பொறுப்பை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்த சமுதாயத்திற்கு உண்டு. நாங்கள் என்றென்றைக்கும் உங்களோடு இருப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது.

மதங்களால் பிரிக்கப்பட்டு இருக்கலாம்; மனங்களால் ஒன்றுபட்டவர்கள் நாம்!

உங்கள் சமுதாயம் என்று நான் பிரித்துச் சொல்ல வில்லை.  நம்முடைய சமுதாயம்தான். ஆனால், வந்தவன் பிரித்து விட்டான். நாம் மதங்களால் பிரிக்கப்பட்டு இருக்கலாம். மீண்டும் சொல்கிறேன், மனங்களால் ஒன்றுபட்டவர்கள் நாம்.

எனவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு ஒரு பக்கம் பெரும்பான்மை – இன்னொரு பக்கத்தில் சிறுபான்மை.

ஆணவத்தினுடைய உச்சத்திற்குப் போய், ‘ஹராம்’ என்று சொல்கிறார்கள்!

சிறுபான்மையாக இருந்தாலும், எங்களுக்குச் சலுகைகள் இருக்கின்றனவே, இதோ அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய சலுகைகள் இருக்கின்றனவே என்று நாம் கேட்டாலும், அவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவனிக்காமல், ஆணவத்தினுடைய உச்சத்திற்குப் போய், ‘ஹராம்’ என்று சொல்கிறார்கள்.

இந்த சமுதாயம், அப்துல் சமது வாழ்ந்திருந்தால் எப்படிப்பட்ட களத்தை அமைத்திருப்பார்கள் என்பதை, நூற்றாண்டு விழா முடிந்து கலைந்து போகின்ற நேரத்தில், நீங்களெல்லாம் ஒன்றுபட்டு சிந்திக்கவேண்டும்.

உங்களுக்கு என்னுடைய
அன்பான வேண்டுகோள்!

ஒரே ஓர் அன்பு வேண்டுகோளை, இங்கே இருக்கக்கூடிய தோழர்களுக்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் இருக்கக்கூடியவர்களுக்காகவும் சொல்கி றேன். ஒரு கட்சி, ஒரு கூட்டணி என்ற பார்வையோடு நான் சொல்லவில்லை.

யாராக இருந்தாலும், வெறுப்பு அரசியலுக்கு ஆளாகக் கூடாது.

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’’

என்று சொன்னார்.

எனக்கு ஓர் அடையாளம் உண்டு!

அப்துல் சமது அவர்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் மாபெரும் தலைவர் அவர். என்னை யார் என்று கேட்டால்,  எனக்கு ஓர் அடையாளம் உண்டு. ஆகவே, அடையாளம் சொல்வதினாலேயே அவர்களைப் பிரித்துப் பார்க்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்? என்று கேட்டால், நான் வாழுகின்ற பகுதியைச் சொல்வேன்.

அது எங்கே இருக்கிறது? என்று  கேட்டால்,  சென்னை என்று சொல்வேன்.

சென்னை எங்கே இருக்கிறது? என்று கேட்டால், தமிழ்நாட்டில் இருக்கிறது என்பேன்.

தமிழ்நாடு எங்கே இருக்கிறது? என்று கேட்டால், இந்திய யூனியனில் இருக்கிறது என்று சொல்வேன்.

இந்திய யூனியன் எங்கே இருக்கிறது? என்று கேட்டால், உலக நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்று சொல்வேன்.

அதுபோலத்தான், இஸ்லாமியச் சகோதரர்கள். அவர்கள் பிறப்பால், இன்றைக்கு ஒரு மதத்தைச் சார்ந்த வர்களாக இருப்பார்கள்.

இஸ்லாமியர்கள் எல்லா உரிமைகளோடும், உழைப்புகளோடும் வாழக்கூடியவர்கள்!

ஆனால், இந்த சமுதாயத்தவர்கள், எல்லா உரிமை களோடும், உழைப்புகளோடும் வாழக்கூடியவர்கள். அவர்கள் சோம்பேறிகள் அல்ல. மற்றவர்களுடைய வாழ்க்கையில், தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, சுரண்டுகின்றவர்கள் அல்ல நண்பர்களே அவர்கள்!

மரைக்காயர் என்றால் என்ன அர்த்தம்?

மரைக்கல ஆயர்.

கப்பல் ஓட்டத் தெரியாத நேரத்தில், கப்பல் கட்டி ஓட்டுபவர்கள் என்ற பெருமைக்குரிய ஒரு சமுதாயம்.

மனிதநேயம் இருக்கின்றவர்கள், மானுடனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை எள்ளி நகையாடி, ‘தூ’ என்று தூக்கி எறிந்துவிட்டு, அவர்களை அடையாளம் தெரியாது ஆக்கலாம் என்று நினைத்தால், அதைப் பார்த்துக் கொண்டு, மனிதநேயம் இருக்கின்றவர்கள், மானுடனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

இதுதான் இன்றைய கேள்வி.

இந்தப் பார்வை சரியான பார்வையாகும். வெறும் அரசியல் பார்வையில் பார்க்கக் கூடாது.

உரிமையோடு, உங்களுக்காகப் பாடுபடக் கூடியவன் நான். எனவே, ஒரு கருத்தை உங்கள் முன்னால் வைக்கி றேன்.

என்றைக்கும் உங்கள் உரிமைகளுக்காகக் களத்தில் நிற்கக்கூடியவர்கள் நாங்கள் என்ற அடிப்படையில், ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன்.

எல்லோரும் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்குங்கள்!

அது என்னவென்றால், இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய சோதனையை உருவாக்குகின்ற ஓர் அறைகூவல் வந்திருக்கின்றது. வெறுப்பு அரசியல் என்ற மிகப்பெரிய கொள்ளிக்கட்டை சுழன்று கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், நீங்கள் என்ன செய்யவேண்டும்?

தயவு செய்து பிரிந்திருக்காதீர்கள்.

தயவு செய்து இந்தச் சமுதாயம் பிளவுபட்டு இருக்கக்கூடாது.எல்லோரும் சேர்ந்து ஓர் கூட்ட மைப்பை உருவாக்குங்கள்.

அவரவர்கள்,  ‘‘கட்சி அடையாளத்தை நாங்கள் விட்டுவிட முடியாது; தலைவர்கள் அடையாளத்தை விட்டுவிட முடியாது’’ என்று சொல்லாதீர்கள்.

ஒரு பொது அமைப்பை – கூட்டமைப்பை உருவாக்குங்கள். தமிழ்நாட்டில் முதலில் அதனைத் தொடங்குங்கள்.

காரணம், நம்முடைய எதிரி யார்? நம்முடைய கொள்கை  எதிரி யார்? யார் நம்மை வீழ்த்தக்கூடியவர்? நம்முடைய உண்மையான நண்பர்கள் யார்? என்று இன்றைய இளைய தலைமுறையினர்கூட அறி வதில்லை.

தெருவில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்தால், சிறுபிள்ளை என்ன நினைப்பான், ‘‘ஆகா, ரொம்ப அழகாக எரிகிறது’’ என்று நினைப்பானே தவிர, அதனுடைய ஆபத்து என்னாகும்? என்று நினைக்கத் தெரியாது.

இன்றைய இளைய தலைமுறையினருக்கெல்லாம், வயதானவர்கள் அறிவுரை சொன்னால், ஏதோ தாத்தா, பாட்டி சொல்கிறார்கள் என்று அலட்சியப்படுத்துவார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து தொடங்குங்கள்!

உங்களுக்குள் தனித்தனி கட்சிகளாக இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், முதலில் ஒரு கூட்டமைப்பை உருவாக்குங்கள்; அதைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்குங்கள்.

நம்முடைய கொள்கையை அழிப்பவர்கள் யார்? அவர்களோடு நீங்கள் ஒருபோதும் சேராதீர்கள். தேர்தல் கூட்டணியாக இருந்தாலும், களமாக இருந்தாலும் அவர்களை அடையாளம் காணுங்கள்.

ஓரணியில் நீங்கள் இருந்தால், உங்கள் சமுதாயத்தினுடைய மதிப்பையும், மரியாதையையும் மற்றவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

உண்மையான ஜனநாயகம் இந்த நாட்டில் தழைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் சொல்லியிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் பெயரை மறைப்பதற்கான முயற்சிகள்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்துக் கொடுத்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரை மறைப்பதற்கான முயற்சிகள்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

நமக்கு நாமே வழங்கிக் கொள்வது – ‘‘வீ தி பீப்பிள் ஆஃப் இண்டியா’’ என்றுதான் தொடங்குகிறது.

பீப்பிள் ஆஃப் இண்டியா என்பதில், முஸ்லிம் வேறு, மற்றவர்கள் வேறு, கிறிஸ்தவர்கள் வேறு; ஆண்கள் வேறு, பெண்கள் வேறு. உயர்ஜாதிக்காரர்கள் வேறு; தாழ்ந்த ஜாதிக்காரர்கள் வேறு என்று இருக்கிறதா?

அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் தோழர்களே!

இஸ்லாமிய சமுதாயத்தில் ஒற்றுமை உருவாகவேண்டும்!

ஆகவேதான், இந்த சமுதாயத்தில் ஒற்றுமை என்பது முதலில் உருவாகவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தன்முனைப்பு இருக்கத்தான் செய்யும்.  யார், யாரிடம் விட்டுக் கொடுப்பது என்று. கணவன் – மனைவிக்கிடையே கூட தன்முனைப்பு உண்டு.

தன்முனைப்பை விட்டுவிட்டு, ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும்!

எனவே, தன்முனைப்பை விட்டுவிட்டு, சமுதாயத்தைக் காக்கவேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றவேண்டும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கின்ற உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டுமானால், அதற்கு தேர்தலும் ஓர் ஆயுதமாக இருக்கின்ற காரணத்தினால், நீங்களெல்லாம் பிரிந்திருக்கக் கூடாது.

சரியான தலைமை!

சரியான அமைப்பு!

பாதுகாப்பனது எது என்று கருதி, அத்தனை பேரையும் ஒரே எண்ணத்தில் நீங்கள் கொண்டு வாருங்கள்; ஒரே புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துங்கள்!

அந்த முயற்சி உடனே நடந்துவிடாது.

பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் – சிராஜுல் மில்லத் அப்துல் சமது  ஆகியோரை ஒன்றாக இணைத்த ஒருவன்!

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள்!

நம்முடைய இரு சகோதரர்களும் நன்றாகப் பழகியவர்கள்தான். சில காரணங்களால் பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் அவர்களுக்கும், நம்முடைய சிராஜுல் அப்துல் சமது அவர்களுக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது பழைய வரலாறு, இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.

உடனடியாக நான், கலைஞரிடம் சென்று இதுபற்றி சொன்னேன். அவர்கள் பிரிந்து இருக்கக்கூடாது என்றேன்.

ஆமாம், நானும் சொல்லிப் பார்க்கிறேன். நீங்களும் சென்று பேசிப் பாருங்கள் என்றார்.

நான், இரண்டு பேரிடமும் பேசி, ஒரே மேடையில், கலைஞர் முன்னிலையில் ஒன்றாக அவர்களை இணைத்த ஒருவன், என்ற முறையில் சொல்கிறேன்.

எனக்கு உரிமையும் உண்டு; அதற்கான வரலாறும் உண்டு.

ஆகவேதான், இதை நீங்கள் கொள்ளலாம்; தள்ளலாம். ஆனால், தள்ளுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆகவேதான், அதைச் சொல்லுவதற்கு எனக்கு உரிமை உண்டு என்ற உணர்வோடு உங்கள் முன்னால், இதை அப்துல் சமது நூற்றாண்டு விழா செய்தியாகச் சொல்கிறேன்.

சிராஜுல் மில்லத் அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழா – உறுதி!

அவருடைய நூற்றாண்டு விழாவில், ‘‘ஒரு பெரிய சமூகம், ஒரு பெரிய பாதுகாப்புக் குடை அமைத்தது. அரசியலில் யாரும் ஏமாந்துவிட மாட்டோம். அரசியலில் எதிரி யார்? எது போலி நாணயம்? எது உண்மையான நாணயம்? என்று கண்டுபிடித்து, அந்த நாணயத்தினுடைய மதிப்பைக் காட்டுவோம்’’ என்று உறுதி எடுத்தால், அதுதான் சிராஜுல் மில்லத் அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழா நாயகருக்கு நாம் கொடுக்கின்ற காணிக்கை என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *