தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்

5 Min Read

ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்
செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை!
தென்காசியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி

தென்காசி, அக்.31 ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர்  பட்டியல் சிறப்புத்  திருத்தம் செய்யப் போகி றோம் என்று சொல்வதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை. தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை; அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (30.10.2025) தென்காசிக்கு பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

வாக்காளர்  பட்டியல் சிறப்புத்  திருத்தம் – தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?

செய்தியாளர்: வாக்காளர் பட்டியல் சிறப்புத்  திருத்தம் இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் விரைவில் கொண்டுவரப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற உள்நோக்கத்தோடு ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு செயல்படுகிறது. இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை போகக்கூடிய அளவிற்கு வாய்ப்பு இருக்கின்றது என்கின்ற சந்தேகம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், வாக்காளர்கள் மத்தியிலேயே பொதுவாக இந்த அய்யப்பாடு மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கின்றது.

பீகாரில், 65 லட்சம் வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியது
‘தானடித்த மூப்பான’ ஒரு செயல்!

காரணம், இன்னும் சில நாள்களில் நடைபெற விருக்கக்கூடிய பீகார் மாநிலத் தேர்தலுக்கு முன்பாக, 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது தானடித்த மூப்பான ஒரு செயல்.

இதனைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, தேர்தல் ஆணையம் குட்டு வாங்கியி ருக்கிறது.

இதனைச் சுட்டிக்காட்டி, நீங்கள் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பை  மறுபடியும் செய்யுங்கள் என்று சொன்ன பிறகுதான், தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்தது, மறு முயற்சிகள் செய்தது, வேறொரு புதிய வாக்காளர்ப் பட்டியலைத் தயார் செய்யும்படி, உச்சநீதிமன்றம் அவர்களுக்குத் தாக்கீது கொடுத்தது.

இதுவே, நமக்குத் தமிழ்நாட்டில் ஒரு புதிய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரமாகும்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு
விரோதமான ஒரு செயல்!

காரணம், எங்கெல்லாம் தங்களுக்கு வாக்கு வங்கி சாதகமாக இருக்காதோ, அங்கெல்லாம் ‘ஓட்டு் நீக்கம்’ நடத்தலாம் என்றிருக்கின்றார்கள் போலும், பீகாரின் 65 லட்சம் வாக்காளர் நீக்கம் மாதிரி. அதற்கு எதிர்ப்பு என்பது மக்கள் இயக்கமாகவே அங்கு மாறியிருக்கக் கூடிய அளவில் இருக்கிறது.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு இது முற்றிலும் விரோதமான ஒரு செயல் என்பதைச் சட்டம் அறிந்தவர்கள்  பொது மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், தேர்தல் ஆணையத்திற்குத் தனிப் பகுதி இருக்கிறது. அதன்படி பார்த்தால், தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்ப் பட்டி யலைத் திருத்துவதற்காக, இறந்து போனவர்கள், விடுபட்டு போனவர்களை நீக்குவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால், இன்றைக்குப் பலரைப் புதிதாகக் கொண்டு வந்து, அவர்களுக்கு விரும்பத்தகுந்தவர்கள், ஏற்கத்தக்க வர்கள் என்ற கண்ணோட்டத்தோடு பல இடங்களில் ஒரு பெரிய அளவில் அந்த மாற்றம்
நடந்திருக்கின்றது.

எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் வாக்காளர்  பட்டியல் சிறப்புத் திருத்தம் செய்ய முடியாது

ஒட்டுமொத்தமாக SIR என்று சொல்லக்கூடிய Special Intensive Revision இருக்கிறதே, அதனைத் தேர்தல் ஆணையம், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் விதி இருக்கிறது.

எனவே, இப்போது அவர்கள் அறிவித்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயலாகும். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றால், மறுபடியும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வரும்.

அதற்காகத்தான், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்கள் தோழமைக் கட்சிகளை மட்டும் அழைத்து ஆலோசிக்காமல், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளையும் அழைத்து, ஆலோசனை நடத்த விருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்நோக்கத் தோடு செய்யப்படுகின்ற ஒன்று என்கின்ற அய்யம் பொதுமக்களிடையே இருக்கிறது.

பொதுவாகவே, நீதி வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டது என்கின்ற தோற்றமும், நம்பிக்கை யும் மக்களுக்கு ஏற்படவேண்டும் என்பது நீதித் தத்துவம், சட்ட விளக்கத் தத்துவம்.

சந்தேகத்திற்குரியதாகத்தான் தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் இருக்கின்றன!

அதன்படி, இதில் சந்தேகத்திற்குரியதாகத்தான் தேர்தல் ஆணையம் நிறுத்தப்படுகிறது. ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரே நேரத்தில், 12 மாநிலங்களில் வாக்காளர்  பட்டியல் சிறப்புத்  திருத்தம் செய்யப் போகிறோம் என்று சொல்வ தற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை.

மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற முயற்சியை எடுத்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்!

நீதிமன்றத்திற்குச் சென்றால்கூட, இது நிற்காது என்ற அளவில்தான் இருக்கிறது. அதற்காகத்தான், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நவம்பர் 2 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில், அவர்களுடைய கருத்துகளை அறிந்து செயல்படவிருக்கிறார். அடுத்தபடி மக்கள் மன்றத்திற்குச் செல்லவும், ஒரு ஜனநாயகப் பாதுகாப்பு அரணை உருவாக்க மதச்சார்பற்ற கூட்டணி முடிவெடுத்தாலும், அனைத்து மக்களுடைய வாக்குரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இம்முயற்சியை எடுத்திருக்கிறார்.

பல நேரங்களில், அரசியல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை என்று கருதுகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு, இதுபோன்ற பல திசை திருப்பல்களைச் செய்து, குறுக்குவழிகளில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறது. தமிழ்நாடு மண், பெரியார் மண் – அதற்கு ஒருபோதும் இடந்தராது.

ஒன்றிணைந்து செயல்பட்டு இருக்கிறார்கள்!

செய்தியாளர்: பசும்பொன்னில், இன்றைக்குத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அவ்விழாவிற்கு முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். இவ்விழாவிற்கு வந்த ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படு வோம் என்று சொல்லியிருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: பசும்பொன்னில் மூன்று பேரும் சேர்ந்து மாலை வைத்திருக்கிறார்களே, அதுதான் ஒன்றிணைந்து செயல்பட்டு இருக்கிறார்களே!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *