2–ஆம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
சென்னை, அக்.31– சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக தி.மு.க. சார்பில் 2-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல் திருத்தம்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி எஸ்.அய்.ஆர். எனப்படும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி’யை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல் பீகாரில் நடந்தபோது பல லட்சம். வாக்காளர்கள் நீக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 27-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத் தில் நடைபெற்றது. இதில், ‘தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் உன்னிப்பாக கண்காணித்து எஸ்.அய்.ஆரை தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், தியாக ராயநகரில் உள்ள “ஓட்டல் அகார்டில்” நடைபெறும். இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெயரில் அழைப்புக் கடிதம் அச்சடிக்கப்பட்டு தி.மு.க. சார்பில் கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், ‘நாம் தமிழர்’ கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் ஜான் பாண்டியன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களை தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல் த.வெ.க.வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
60 கட்சிகளுக்கு அழைப்பு
இதுதவிர பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு ஆதரவான நிலைப் பாட்டில் இருப்பதால் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பா.ம.க.வில் இருந்து டாக்டர் அன்புமணியை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கி உள்ளதால் அவருக் கும் அழைப்புக் கடிதம் அளிக்கப் படவில்லை என்று தெரிகிறது.
தற்போது, அழைப்பு விடுக்கப் பட்டுள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்போம் என்று உறுதி அளித்துள்ளதாக தி.மு.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
