தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப் பட்டு அவமதிக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.
மேனாள் அய்ஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்; பாஜகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உதித் ராஜ், அக்கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் தேசியத் தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி சீமா ராஜூம் அய்ஆர்எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். புதுடில்லி, பண்டாரா பார்க்கில் C1/38 என்ற எண் கொண்ட அரசு பங்களா சீமா ராஜ்க்கு ஒதுக்கப்பட்டது.
ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தும் அரசு பங்களாவை காலி செய்யாததால், காலி செய்யச் சொல்லி ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தாக்கீது அனுப்பி உள்ளது. அவர் காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரைக் காலி செய்யச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து சீமா ராஜ் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்; அரசு பங்களாவைக் காலி செய்ய தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரி உள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த பொருட்களை அதிகாரிகள் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வைத்துவிட்டனர். இதனால், உதித் ராஜ், வீதியில் கட்டிலைப் போட்டு அங்கேயே தங்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதித் ராஜ், “சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சண்டிகரைச் சேர்ந்த அய்பிஎஸ் அதிகாரி பூரண்குமாரின் தற்கொலை தொடர்பாக அரியானாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இருந்தேன்; அவர்தான் ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக உள்ளார். பழி வாங்கும் நோக்கத்தோடு என்னை இப்படி அவமதித்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர் என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்டது; அய்பிஎஸ் அதிகாரிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் எனக்கு எதிராகவும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பூரண் குமாரைப் போல நான் தற்கொலை செய்து கொள்ள மோடி அரசு விரும்புகிறது. ஆனால், அது நடக்காது.
வீட்டைக் காலி செய்யும் விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வரும் 28ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதா? அப்படி என்ன அவசரம்? அரசு பங்களாக்களில் தங்கியுள்ள உயர் ஜாதியினர் பலருக்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. மோடி அரசாங்கம் எனது வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து எறிந்துவிட்டது. இப்போது நான் என் வீட்டின் முன் சாலையில் இரவைக் கழித்தேன். ஒரு தாழ்த்தப்பட்டவர் நாடாளுமன்ற உறுப்பினராக அல்லது தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும்கூட அவர்களுக்கு எதிரான செயல்கள் பிஜேபி ஆட்சியில் இப்படியேதான் இருக்கும். பாஜக தலைவர்களின் உத்தரவின்பேரில்தான் பொருட்கள் வலுக்கட்டாயமாக சாலையில் வீசப்பட்டுள்ளன” என்று குமுறியுள்ளார்.
பிஜேபியின் கொள்கை – அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.ஸின் தொப்புட் கொடியிலிருந்து கிடைக்கப் பெற்றதாகும். ஸநாதனத்தைக் காப்பதுதானே அவர்களின் அடிப்படைக் கொள்கை! குடியரசுத் தலைவராக இருந்தாலும்கூட சட்டப்படி முதல் குடி மகன் என்று குடியரசுத் தலைவர் கித்தாப்பாகப் பேசினாலும், அன்றாட நடவடிக்கையில் அவர்கள் இரண்டாம் தரமாகத்தான் நடத்தப்படுவார்கள்.
மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த நிலையில், குடும்பத்தோடு பூரி ஜெகந்நாத் கோயிவிலும், அஜ்மிர் பிர்மா கோயிலிலும் அவர்கள் தடுக்கப்படவில்லையா?
இப்பொழுது குடியரசுத் தலைவர் மலைவாழ் சமூகப் பெண்ணாக இருப்பதால், நாடாளுமன்றக் கட்டட அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழாக்களுக்கு சம்பிரதாய முறையில்கூட அழைப்பிதழ் கூடக் கொடுக்கவில்லையே!
தெரிந்து கொள்க – இதுதான் பிஜேபியின் ஹிந்துத்துவா கொள்கை!
