வாக்குரிமையை விட்டுக் கொடுப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

4 Min Read

தென்காசி, அக்.30- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் என்றபெயரில் தேர்தல் ஆணையம் மூலம் சதிவேலை நடைபெறுகிறது. வாக்குரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசி யில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி னார்.

அரசு விழா

தென்காசி ஆய்க்குடி அனந்தபுரம் மைதானத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நேற்று (29.10.2025) காலையில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு ரூ.587 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் ரூ.141 கோடி மதிப்பிலான முடிவுற்ற 117 திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.291 கோடி மதிப்பிலான 83 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். மொத்தம் சுமார் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கனவு இல்லம்

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஆலங்குளம் கழுநீர்குளத்தில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் கடந்த சிறந்த தமிழ் மாதம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய அன்பு மகள் பிரேமாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வீடு வழங்கக்கூடிய ஆணையை நாங்கள் வழங்கினோம். இப்போது அங்கு வீடு கட்டக்கூடிய பணி வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதேபோல இப்போது மேடையில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான இலத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி முத்துக்குமார் என்பவரின் கனவு இல்லத்திற்கான சாவியை உங்கள் முன்னால் வழங்கி இருக்கிறேன். காலுக்கு கீழ் கொஞ்சம் நிலமும், தலைக்கு மேல் கூரையும் வேண்டும் என்பது, ஒவ்வொரு மனிதனின் கனவு. வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு.

குடிசைகளுக்கு பதிலாக நிரந்தர வீடுகளை கட்டித் தரவேண்டும் என்று குடிசையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும் என்று ஏராளமான திட்டங்களை உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். அவரது கனவையும், ஏராளமான குடும்பங்களின் கனவுகளையும், நிறைவேற்றுகின்ற மகிழ்ச்சியோடு உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

10 ¼ லட்சம் பேருக்கு இலவச பட்டா

கடந்த 4 ½  ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 10 லட்சத்து 26 ஆயிரத்து 743 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி இருக்கிறோம். அதேபோல, 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் இப்போது பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து நல்ல மழை பெய்வதை நல்லாட்சிக்கான அடையாளமாக மக்கள் இன்றைக்கு போற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை வைத்தும் சிலர் அரசியல் செய்கிறார்கள்.

‘விளைவித்த நெல்லை வாங்கவில்லை, அது அழுகிவிட்டது’ என அவதூறுகளை எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டு வருகிறார்.

விவசாயிகள் பாடுபட்டு, உற்பத்தி செய்கின்ற ஒரு நெல்மணி கூட வீணாக கூடாது என அதிகாரிகளுக்கு உத்தர விட்டிருக்கிறேன். அந்த அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளில், முந்தைய ஆட்சிக் காலத்தை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அடிப்படை தெரியவில்லை

கடந்த 4 ஆண்டுகளில், விவசாயி களிடம் இருந்து ஒரு கோடியே 70 லட்சத்து 45 ஆயிரத்து 545 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 டன் ஆகும்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், சரா சரியாக ஆண்டுக்கு 22 லட்சத்து 70 ஆயிரத்து 293 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அடிப்படை கூட தெரியாமல் பொய் சொல்லி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அக்டோபர் முதல் தேதி தான் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது. திராவிட மாடல் ஆட்சியில் செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் தொடங்கப்படுகிறது.

துரிதமாக செயல்படுகிறது

நெல் வரத்து அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது எதுவும் தெரியாமல், எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டிருக்கிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மழைநீர் தேங்கி பாதிக்கப்படக் கூடாது என்ற வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. மக்களை காக்க எங்களுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சரி செய்ய, நிவாரண பணிகளுக்காக நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியை ஒன்றிய பா.ஜனதா அரசு இதுவரைக்கும் வழங்கவில்லை.

யாராலும் தடுக்க முடியாது

அப்படி வழங்கினால், தமிழ்நாடு வளர்ந்து விடும் என நினைக்கிறது மத்தியில் இருக்கக்கூடிய அரசு. ஒன்றிய அரசு பணம் வழங்கினாலும், வழங்காமல் போனாலும் தமிழ் மக்களை காப்பது தான் திராவிட மாடல் அரசின் கடமை. என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இப்போது தேர்தல் ஆணையர் மூலமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கின்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையை பறிக்கின்ற சதியை அறிவித்திருக்கிறார்கள். தொடக்கம் முதலே இந்த சதியை அனைத்து வகையிலும் எதிர்த்து கொண்டிருக்கிறோம்.

வாக்குரிமையை காப்போம்

ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான். அதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட் டோம். வாக்குரிமை பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜனதாவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம். மக்களாட்சியை காப்பாற்றுவதற்கான இந்த முன்னெடுப்பில் அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு. அய்.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ராபர்ட் புரூஸ், டாக்டர் ராணி சிறீகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *