தொழிலாளருக்கான கொள்கையா – மனுதர்மத்தின் மறுபதிப்பா?

3 Min Read

ஒன்றிய அரசின் தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதிய நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (தமிழில் ‘ஞானகங்கை’)  என்ற நூல் மற்றும் மனுஸ்மிருதி உள்ளிட்ட ஹிந்துத்துவ சிந்தனைகளைத் திணிக்கும் கருத்துகளை நினைவில் வைத்தே உருவாக்கப் பட்டுள்ளது என்று தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை வரைவை  – ‘ஷ்ரம் சக்தி நிதி 2025’ வெளியிட்டுள்ளது. இது நாட்டில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் தொடர்பான அணுகுமுறையை முழுமையாக வரையறுக்கும் முதல் முயற்சி என்று  ஒன்றிய அரசு கூறிவருகிறது

எந்த ஒரு தொழிலாளர் தொடர்பான கொள்கைகள் என்பது – தொழிலாளர் நலம் என்பது சமூக நல்லிணக்கம், சமத்துவம், பொருளாதாரம், நிதிப் பரவல், நல்வாழ்வும் கூட்டுறவு அடிப்படையில் இருக்கவேண்டும். ஆனால், தொழிலாளர் வரைவுக் கொள்கை  – குறிப்பாக தொழி லாளர்களையும் அவர்களின் உழைப்பையும் தார்மீக கடமையாகவும், ‘புனித’மான ‘ராஜ்தர்மம்’ என்று கூறும் மனுதர்ம விதிமுறையின் படி இந்தக் கொள்கை வரையறுக்கப் பட்டுள்ளது.

ராஜ்தர்மம்: மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்கியஸ்மிருதி, நாரதஸ்மிருதி, சுக்ரநீதி மற்றும் அர்த்தசாஸ்திரம் போன்ற பண்டைய நூல்கள் ‘ராஜ்தர்மம்’ என்ற நெறிமுறையை வலியுறுத்துகின்றன, இதையே கோல்வால்கர் ‘ஞான கங்கை’ என்னும் நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்துத்துவ நூல்கள் அனைத்துமே பார்ப்பனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மலம் அள்ளும் தொழிலாளர்களை ‘நீங்கள் கடவுளுக்குச் செய்யும் சேவை இந்த பாக்கியம் வேறு யார்க்கு கிடைக்காது’ என்று தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருந்ததை (‘கர்மயோக்’) இங்கே கவனிக்கவேண்டும்.

தொழிலாளர் வரைவுக் கொள்கை முழுக்க முழுக்க மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளது.

அதாவது, தொழிலாளர் உழைப்பை வெறும் உழைப்பாகப் பார்க்காமல் விசுவாசத்தின் அங்கமாக கருதவேண்டும்; அதே நேரத்தில் தனது தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும்; விசுவாசம் நம்பிக்கை, உழைப்பு போன்றவற்றை கைகொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன்படி, ‘முதலாளிகள் எதைச் சொன்னாலும் அதனை விசுவாசம் என்ற பெயரில் அடி பணிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும், தனது கடமையைச் செய்துகொண்டே இருக்கவேண்டும், இதன் மூலம், தனது தொழில் தர்மத்தினை நிறைவேற்றவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தானே மனுதர்மமும் கூறுகிறது.

‘பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்யவே சூத்திரர்கள் பிறந்துள்ளனர். அவர்கள் பார்ப்பனர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வித மறுபேச்சுமின்றி செய்யவேண்டும்’ என்றும் கூறுகிறது.

‘மனுதர்ம’ சாஸ்திரத்தில், ‘சூத்திரன் கண்டிப்பாக பார்ப்பனருக்கு பணிவிடை செய்ய வேண்டும்’ என்று அரசன் கட்டளையிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது (அ. 8).

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) கட்டுப்பாட் டில் உள்ள அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

வேலை பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வரையறை  போன்ற மிக முக்கியமான பிரச்சினைகள் இந்தக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

பண்டைய காலங்களில் பண்ணையாள்(எஜமானர்)  முறை  இருந்தது – அங்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லை, மேலும் அவர்கள் தங்கள் வேலைக்கு ஈடாகப் பெரும்பாலும் பொருட்களாகக் குறைந்தபட்ச கூலியையே பெற்றனர்; வேலைக்கு என்று நேரம் கிடையாது; ஊதிய உயர்வு குறித்து அவர்கள் பேசக்கூட முடியாது; உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுக்க அனுமதியில்லை; அவர்கள் வர இயலாவிட்டால், அவர்கள் இடத்தில் வேறு ஒருவரை அனுப்பவேண்டும்; அப்படி அனுப்புவர்களுக்கு பண்ணையில் கூலி கொடுக்கமாட்டார்கள்;  பண்ணையாள் முறையில் ஊதியத்தை நிர்ணயிப்பதில் எந்த உரிமையும் அற்றவர்களாக இருந்தனர்.

அதே சூழலை புதிய தொழிலாளர் வரைவுகொள்கை மூலம் கொண்டுவர முயற்சி செய்கின்றது ஒன்றிய பிஜேபி அரசு.

சூத்திரர்களைப்பற்றி மனுதர்மம் கூறும்போது – ஏழு வகைப்படுவர்; அதில் ஒன்று விபசாரி மகன் – தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கின்றவன்’ என்று தொழிலாளர்கள் ஏழு வகைப்படுவர் என்று சொல்வதி லிருந்தே – ஒன்றிய அரசின் தொழிலாளர்க் கொள்கை என்பது மனு தர்மத்தைத் தழுவியதே என்பது விளங்குமே!

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *