தென்கொரியா, அக்.30– அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தென்கொரியாவின் புசான் நகரின் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் உலக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சூடானில் அரசு – துணை ராணுவத்தினர் மோதல்
மருத்துவமனையில் தாக்குதல்; 460 பேர் பலி
கெய்ரோ, அக். 30– சூடானில் அரசுக்கும் மற்றும் துணை ராணுவத்திற்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சூடான் நாட்டில் துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அவர்களுடைய உறவினர்கள் என மொத்தம் 460 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இது பற்றிய தகவல்களால், ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். சூடானில் அரசுக்கும் மற்றும் துணை ராணுவத்திற்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அவ்வப்போது, துணை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் கொல்லப்படும் துயரம் நடந்து வருகிறது.
பிரேசில்: போதை பொருள் கும்பலுக்கு
எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி
எதிரான நடவடிக்கையில் 64 பேர் பலி
ரியோ டி ஜெனீரோ, அக்.30– பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் போதை பொருள் கும்பலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், காவல்துறையி னருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதுபற்றி ரியோடி ஜெனீரோ நகர ஆளுநர் கிளாடியோ கேஸ்டிரோ கூறும்போது, போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களைக் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், போதை பொருள் கும்பலை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் 60 பேர் மற்றும் 4 காவல்துறையினர் உள்பட 64 பேர் பலியானார்கள். 81 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். ரியோ நகர வரலாற்றில் மிக பெரிய நடவடிக்கை இது என அவர் குறிப்பிட்டார். இதில், 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மோதலில் பலர் காயமடைந்து உள்ளனர். போதை பொருள் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை தேவையான ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசில் வரலாற்றில், காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அதிக வன்முறையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
