அபுதாபி, அக்.30– துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
கொச்சியில் இருந்து அபுதாபிக்கு அதிகாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் வானில் பறக்க தொடங்கியதும் பயணிகள் அனைவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர். அந்த விமானத்தில் அபுதாபியில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் வேலை கிடைத்து அதில் சேருவதற்காக கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்த அபிஜித் (26 வயது) மற்றும் செங்கன்னூரை சேர்ந்த அஜீஷ் (29 வயது) ஆகிய 2 வாலிபர்கள் பயணம் செய்தனர்.
சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும்போது கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த சமீர் (34 வயது) என்ற பயணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கொஞ்சம், கொஞ்சமாக அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி இருக்கையில் சாய்ந்தார்.
உடனடியாக இதனை கவனித்த அபிஜித் இருக்கையில் இருந்து எழுந்து அவரை படுக்க வைத்து சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்க தொடங்கினார்.
இந்த சலசலப்பை கேட்டு அஜீஷ் உடன் இணைந்து அவருக்கு உதவி புரிந்தார்.
மற்ற பயணிகள் விமான ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் அளித்த முதலுதவி பெட்டியில் இருந்து உபகரணங்களை வைத்து நாடித்
துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை இருவரும் அளவிட்டனர்.
மூச்சு பேச்சின்றி கிடந்த சமீருக்கு தொடர் சி.பி.ஆர். முதலுதவி சிகிச்சை மூலம் சுவாசம் சீராக்கப்பட்டது.
விமான ஊழியர்கள் விமானிகளுக்கு தகவல் அளித்து அபுதாபியில் விமானம் தரையிறங்கும் போது அங்கு ஆம்புலன்சு மற்றும் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்க செய்தனர். விமானம் தரையிறங்கியதும் உடனடியாக அந்த பயணி ஆம்புலன்சு மூலம் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
நடுவானில் உயிரை காத்த கேரள வாலிபர்கள் அபிஜித் மற்றும் அஜீஷ் ஆகியோருக்கு பயணிகள் அனைவரும் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்த மருத்துவ நிறுவனமும் பணியில் சேருவதற்கு முன்னதாகவே பொறுப்புடன் உயிரை காப்பாற்றியதற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. மருத்துவ பணியில் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட கேரள வாலிபர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
