தமிழ் மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற திராவிட மாடல் அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுப்பது அவசியமாகும் ஆலங்குடி பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

6 Min Read

ஆலங்குடி, அக்.30, அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மூன்று மாதம் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய பிரச்சாரச் சுற்றுப்பயணத்தின் முதல் கூட்டம் ஆலங்குடியில் நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அறந்தாங்கி மாவட்ட கழக சார்பில், பெரியார் உலகம் நிதியளிப்பு மற்றும் ‘‘இதுதான் ”ஆர்.எஸ்.எஸ்., இதுதான் பி.ஜே.பி. ஆட்சி; இதுதான் திராவிடம்., திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் வரையிலுமான மூன்று மாதம் தமிழ்நாடு முழுவதுமாக நடைபெறுகிற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தின் முதல் கூட்டமாக அறந்தாங்கி கழக மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி பகுதியில் அரங்கக் கூட்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாவட்டச் செயலாளர் குமார், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, பகுத்தறிவாளர் கழக புரவலர் மேகநாதன், ஆலங்குடி நகரத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். சுயமரியாதைச் சுடரொளி இராவணன் அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது.

திராவிடர் கழகம்

அறந்தாங்கி மாவட்டம்
“பெரியார் உலகம்” நிதித் திரட்டல் குழுவில் பங்காற்றியவர்கள்:-
1. உரத்தநாடு இரா. குணசேகரன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்.
2. க. மாரிமுத்து – நிதித் திரட்டல் குழு தலைவர்.
3. ச.குமார் – நிதித் திரட்டல் குழு துணைத் தலைவர்
4. இரா. இளங்கோ – நிதித் திரட்டல் குழுச் செயலாளர்.
5. க. வீரய்யா மாலதி – நிதித் திரட்டல் குழு பொருளாளர்.
6. க.முத்து – குழு ஒருங்கிணைப்பாளர்.
7. இரா.மேகநாதன் – குழு உறுப்பினர்.
8. த.சவுந்திரராஜன் – குழு உறுப்பினர்.
9. செ.அ.தர்மசேகர் – குழு உறுப்பினர்.
10. மாங்காடு சுப.மணியரசன் – குழு உறுப்பினர்.
11. ப.மகாராசா – குழு உறுப்பினர்.
12. அம்பிகாபதி – குழு உறுப்பினர்.
13. மு.கார்த்திக் – குழு உறுப்பினர்.
14. மு.சேகர் – ( திருச்சி) மாநில தொழிலாளரின் செயலாளர்.
15. நெல்லுப்பட்டு இராமலிங்கம்.

திராவிடர் கழகம்

முன்னதாக கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் நிகழ்ச்சியின் தலைப்பைெயாட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கழக  துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘‘இந்தியாவில் வேறெங்கும் காணாத வகையில் சுயமரியாதை இயக்கம்; திராவிடர் இயக்கம் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, அதை தட்டிப்பறிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறது. திராவிடர் இயக்கம், திராவிட மாடல் அரசு அதை எப்படியெல்லாம் தடுத்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது’’ என்பதை விளக்கிப் பேசினார்.

திராவிடர் கழகம்

அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், ‘‘தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினையான 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மேடையில் அமர்ந்திருக்கும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களும், கலைஞர் அவர்களும் பாடுபட்டதை உணர்ச்சியோடு எடுத்துரைத்தார். தன்னுடைய பள்ளி நாட்களில் தனது தமிழாசிரியர் பெரியாரைப் பற்றி கற்றுக்கொடுத்ததை சலிப்போடு பார்த்ததையும்; பின்னாளில் பெரியாரை உணர்ந்து கொண்டு தேடித் தேடி படித்ததையும்; அதுதான் தன்னை இரண்டு முறை தமிழ்நாடு அரசின் அமைச்சராவதற்குக் காரணமாக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், தமிழ்நாடு அடைந்திருக்கும் எல்லா வளர்ச்சிக்கும் காரணம் தந்தை பெரியார் தான் காரணம்! திராவிடர் இயக்கம் தான் காரணம்! என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, 92 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்புடன் சுற்றுப்பயணம் செய்துவரும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்தான் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அவரைப் போல் அனைவரும் வேலை செய்தால் அடுத்துவரும் பேரவைத் தேர்தலில் திராவிட மாடல் அரசு நிச்சயமாக அமையும்’’ என்று கூறி, ஆசிரியருக்கு பாராட்டுத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் பெரியார் உலகம் நிதியளிக்கின்றவர்களின் பெயர்ப்பட்டியலை வாசித்தார். வரிசையாக வந்து கழகத்தலைவரிடம் காசோலைகளை வழங்கினர். ரூ.10 லட்சம் இலக்கில் முதல் தவணையாக சுமார் ரூ.7 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் மீதியையும் வழங்குவோம் என்றும் அறிவிக்கப்பட்டது. நிதி திரட்டிய குழுவினர் கழகத்தலைவர் மற்றும் அமைச்சர் அவர்களுடன் குழுப் படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து கழகத்தலைவர் தோழர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வும், தோழர்கள் மற்றும் அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் ஆசிரியருக்கு மரியாதை செய்த நிகழ்வும் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

இறுதியில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். அவர் உரை உணர்ச்சி பூர்வமாக அமைந்து இருந்தது. அறந்தாங்கி என்றாலே பெரியார் பெருந்தொண்டர் இராவணனை மறக்க முடியாது என்றும் புராணத்தில் இராவணனின் மகன் மேகநாதன்; அதேபோல் நமது இராவணனின் மகன் பெயரும் மேகநாதன் தான். ஆனால், அந்தக் கதாபாத்திரம் புராணத்தில் இந்திரனை வென்றவர் என்ற பொருளில் இந்திரஜித் என்று இருக்கும். அதே போல் இந்த மேகநாத னையும் வெல்ல முடியாது என்று சுவையாக ஒப்பிட்டு கழகத் தோழர்கள் பலத்த கையொலிக்கிடையே கலகலப்புடன் உரையைத் தொடங்கினார். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டிப் பேசினார். 1930 இல் நடைபெற்ற தஞ்சாவூர் மாநாட்டில் பொப்பிலி அரசரை கலந்துகொள்ள விடாமல் அவரைக் கடத்தியதையும், அவரை குண்டுக்கட்டாக தோழர் ஒருவர் மீட்டு வந்ததாகவும், அதன் பிறகு பொப்பிலி அரசர் மாநாட்டில் கலந்துகொண்டதாகவும் ஒரு அரிய வரலாற்றுத் தகவலைச் சொல்லி, அந்த பொப்பிலி அரசரிடம் உதவியாளராகச் சேர்ந்தவர்தான் அறிஞர் அண்ணா என்று தகவலைச் சொல்லி அரங்கில் உள்ளோரை வியக்க வைத்தார். அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கே திராவிடர் இயக்கத்தின் பெருமையாக இருக்கும் தமிழ்நாட்டிலேயே இந்திய அளவில் முதல் மருத்துவராக அறியப்படும் முத்துலட்சுமி (ரெட்டி) அவர்களை நினைவு கூர்ந்தும், பொட்டுகட்டும் முறையை அவர்கள் எதிர்த்தது; அதே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பார்ப்பனர் சத்தியமூர்த்தி எதிர்த்ததையும், பெரியாரின் ஆலோசனையைப் பெற்று முத்துலட்சுமி அதை முறியடித்தையும் சுட்டிக்காட்டிய போது வரலாற்று சுவடுகளைப் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

திராவிடர் கழகம்

மேலும் ஆசிரியர்கள் அவர்கள், திராவிடர் இயக்கத்திற்கு இரண்டு வகை எதிரிகள் உண்டு. ஒன்று நேரிடையாக எதிர்ப்பவர்கள் மற்றொன்று ஆர்.எஸ்.எஸ்.பின்னணியில் எதிர்ப்பவர்கள் இவர்கள். மின்மினிப்பூச்சிகளைப் போன்று அவ்வப்போது தோன்றி எதிர்ப்பவர்கள் என்று சுட்டிக்காட்டிவிட்டு, திராவிடம் என்பது மின்சாரம் போன்றது. மின்மினிப்பூச்சிகளால் திராவிடத்தை ஒருபோதும் எதிர்க்க முடியாது. மின்சாரத்துடன் மோதினால் உருக்குலைந்து போவார்கள் என்று எச்சரிக்கை மணியடித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றும் போது,  தமிழ்மக்களின் சுயமரியாதையை; மாநில உரிமைகளைக் காப்பாற்றுகிற திராவிட மாடல் அரசை வருகிற 2026 இல் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்களுக்காக அல்ல; உங்களுக்காக; உங்கள் வருங்கால சந்ததிகளுக்காக என்று சொல்லி தமதுரையை நிறைவு செய்தார். இறுதியாக அறந்தாங்கி மாவட்டத்தின் துணைச் செயலாளர் ப.மகாராசா நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தொடர்ந்து கழகத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்தைப் பற்றி விளக்கிவிட்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து பயணம் செய்து திருநெல்வேலிக்கு அடுத்தநாள் அதிகாலை 4 மணிக்கு வந்து முகாமிட்டார்.

திராவிடர் கழகம்

ஆலங்குடி பேரூர் கழகச் செயலாளர் பழனிகுமார், அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார், திருவரங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ரவி, கீரமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராசி. முருகானந்தம், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூர்பாண்டியன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பேராவூரணி சிதம்பரம், மாங்காடு மணியரசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்களும் அரங்கம் நிறையும் அளவுக்குக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *